சிப்பாய் கலகம்

“பாரோ பண்ற ஒவ்வொரு புக்குக்கும் காசு கட்டனும்.”

யஷ்வந்த் நூலக வாசலில் திடுக்கிட்டு நின்றான். அவன் குடும்பமும், ஏழாம் வகுப்பு படிக்கும் அவனும் அந்தப் பகுதிக்குப் புதிதாகக் குடிவந்திருந்தனர். ஆங்கிலப் பெயர்ப் பலகையுடைய இந்த ‘ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி’ கடந்து செல்கையில் கண்ணில் பட்டது. அவன் ஆசையாய்க் கேட்டதால், “போய் எப்படி மெம்பர்ஷிப் வாங்கணும்னு விசாரிச்சிட்டு வாடா,” எனச் சொல்லி அனுப்பினார் அப்பா. 

“பாரோ பன்ற ஒவ்வொரு புக்குக்கும் காசா?”

ஆம் என்பது போலத் தலையசைத்துவிட்டு, கையிலிருந்த செய்தித்தாள் கட்டைத் தொப்பென்று தரையில் போட்டு, பெருமூச்சு விட்டபடி நிமிர்ந்தார் நூலக உரிமையாளர். ஹவாய் செருப்பும் தொளதொள பேண்டும் அணிந்திருந்த அவரின் உடலில் மூக்குக் கண்ணாடிதான் அதிக எடை உடையதாக இருந்தது.

யஷ்வந்துக்கு அவர் சொன்னது பிடிபடவில்லை. அவனது பழைய வீட்டுக்குப் பக்கத்தில் அரசாங்க நூலகம் ஒன்றிருந்தது. அப்பா ஒரேயொரு முறைதான் வந்தார். மெம்பர்ஷிப் வாங்கியதும் ஓர் அட்டை கொடுத்தார்கள். அதை பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு, சூரியன் சரியத் துவங்கியதுமே இவனும் இவன் தம்பியும் அங்கு ஓடிவிடுவார்கள். வரிசையாக அடுக்கியிருந்த புத்தகங்களின் பெயர்களிலிருந்து ஒன்றைச் சத்தமாகப் படிப்பான் யஷ்வந்த், அன்று மனதிலிருக்கும் ஏதாவதொரு சந்தத்தில். இன்னொன்றின் பெயரைத் தம்பி சொல்வான். இப்படி புத்தகப் பெயர்களை ஒருவருக்கொருவர் பாட்டாகப் பாடிக்கொண்டே அன்றைய கொள்ளையை வீட்டுக்கு அள்ளிவருவார்கள். அங்கு ஓர் அடுக்கில் ஆங்கில கிளாஸிக் நாவல்கள் வரிசை இருக்கும், பச்சை கலந்த பழுப்பு நிறமும் முதுகுத் தண்டில் பொறிக்கப்பட்ட தங்க நிறத் தலைப்புகளுடனும் அசத்தலாக. அவ்வரிசையை நீண்ட நேரம் கண்களாலேயே தடவித் தடவிப் பார்த்திருக்கிறான் யஷ்வந்த்.

ஒப்பீட்டளவில் இந்த ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி சிறியது. இதன் அலமாரிகள் இரும்பால் ஆனவை. பல புத்தகங்களுக்கு பிளாஸ்டிக் உறை வேறு. வசீகரம் பெரிதாக இல்லையெனினும், அவன் வெகு நாட்களாக வாசிக்க ஆவலுடன் இருந்த ஹாரி பாட்டரும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸும் இருந்தன. ஆனால் பெரிய மூக்குக் கண்ணாடிக்குப் பின்னாலிருந்து நூலக உரிமையாளர் சொன்னதுதான் புரியவில்லை. அவன் விழிப்பதைப் பார்த்தவர் சொன்னார், “டிங்கிள் டைஜெஸ்ட் 1 ரூபா, ஃபேமஸ் ஃபை ஹார்டி பாய்ஸ் 3 ரூபா, ஹாரி பாட்டர் மத்த இங்கிலிஷ் நாவல்ஸ் எல்லாம் 5 ரூபா.”

வீட்டுக்குத் திரும்பி அம்மா அப்பாவிடம் இதை ஒப்பித்தான்.

“அது பிரைவேட் லைப்ரரில, அதுனால மெம்பெர்ஷிப் வாங்கினாலுமே ஒவ்வொரு புக்குக்கும் காசு குடுக்கணும் போல,” என அம்மா கைக்கடிகாரம் அணியும் அவசரத்திலும் விளக்க முயன்றாள்.

யஷ்வந்த்தின் முகம் சில நாட்கள் முன்பு தூர்தர்ஷனில் பார்த்த தியானம் கலைந்த சிவனின் முகத்தைப் போலிருந்தது. மனத்தின் ஆழத்தில் எதுவோ குமைந்தது, உமிழ நெற்றிக்கண் இல்லை. எனிட் ப்ளைட்டன் எழுதிய நாடி (Noddy) புத்தகங்கள் அங்கு இருந்தனவா எனக் கேட்ட தம்பியிடம் போடா வெண்ணெய் எனக் கத்திவிட்டு மூலையில் போய் உட்கார்ந்தான். 

மாதம் ஒரு முறை டிங்கிள் டைஜெஸ்ட் வாங்கிக்கொள்ள அப்பா 20 ரூபாய் தருவார். அதுபோக எப்போதாவது ஒரு முறை (அது சம்பளம் வருகிற நாள் என்பது பின்பு புரிந்தது) லேண்ட்மார்க் கூட்டிச் சென்று அறிவிப்பார், “நூறு ரூபாய் வரைக்கும் என்ன புக் வேணுமோ வாங்கிக்கோ!” அங்கு இருக்கும் எல்லா புத்தகங்களின் விலையுமே நூறுக்கு மேலேதான் இருக்கும். ஆங்கில கிளாஸிக் நாவல்களின் சுருக்கப்பட்ட பதிப்புகள் மட்டும்தான் முப்பது ரூபாய்க்குக் கிடைக்கும். அவற்றில் மூன்றை அள்ளிவிடலாம். ஆனால் மூன்றைத் தேர்வு செய்வதில் பலத்த குழப்பம் எழும்.

“ஹெச்.ஜி.வெல்ஸின் இன்விசிபில் மேன் எடுப்பதா, வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ் எடுப்பதா? யார் இது எட்கர் ஆலன் போ? டேல்ஸ் ஆஃப் மிஸ்ட்ரி அண்ட் டெர்ரர்… அட! ஷெர்லாக் ஹோல்ம்ஸ் புத்தகங்களும் இந்த வடிவில் இருக்கே! ஆ… டைம் மெஷீன் அட்டைப்படம் செம்மயா இருக்கே…”

குறைந்தது 25 புத்தகங்களையாவது கையில் எடுத்து விதவிதமான மூன்று காம்பினேஷன்களை அலசிவிட்டு, இறுதியாக மூன்றை எடுத்து பில்லிங் கவுண்ட்டருக்குப் போகும்போது திரும்பி அந்த வரிசையில் மீதமிருக்கும் புத்தகங்களுக்குப் பிரியாவிடை கொடுத்துக்கொண்டே போவான். இப்படி ஆங்கில கிளாஸிக்ஸை சுருங்கிய வடிவில் வாசிக்கலாம் என முதலில் அவனுக்குச் சொன்னது இடுப்பில் கைக்குட்டை சொருகியிருந்த ஆங்கில ஆசிரியைதான். இவனுக்கும் அவற்றின் கைக்கு அடக்கமான அளவும், வழவழப்பான அட்டையும், திறந்தவுடன் எழுகின்ற காகித வாசமும் பிடித்திருந்தன. ஒவ்வொரு பக்கத்திலும் ஓவியம் வேறு.

“ஈஸ்வரி லைப்ரரி கணக்குப்படி ஹாரி பாட்டர் ஏழு பாகங்கள் பாரோ பண்ணினாலே 35 ரூபா ஆகும். அந்த விலைக்கு நான் லேண்ட்மார்க்ல ஒரு கிளாஸிக் நாவல் வாங்கினா நானே வெச்சுக்கலாம். மிச்ச அஞ்சு ரூபால ஒரு குவயர் ஏ4 பேப்பர் வாங்கினாலுமே நம்ம உண்டியல்ல போடுறதுக்கு சில்லரை மிஞ்சும்.”

முன்பிருந்தது போல அவன் இப்போது ஏமாளி அல்ல. கணிதத்தில் லாபம், நஷ்டம், தள்ளுபடிக் கணக்குகளைச் சரிவரக் கற்றிருந்தான். தள்ளுபடி என்பதை உண்மை என்று நம்பியிருந்த அவனை, ஒரு பொருளுக்கு என்ன விற்பனை விலை வைத்தால், தள்ளுபடிக்குப் பிறகும் இவ்வளவு சதவிகிதம் லாபம் ஈட்டலாம் எனும் கணக்குக் கேள்வி, அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படித்தான் இயங்குகிறதா உலகம்… எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஈஸ்வரி லைப்ரரி செய்வது பகற்கொள்ளையாகவே பட்டது. இப்படித்தான் அப்பகுதியில் இருக்கும் அனைவரும் மெம்பர்ஷிப் தொகை செலுத்திய பின்னரும் காசு கொடுத்து அங்கிருந்து புத்தகங்கள் இரவல் பெறுகிறார்களா? 

அடுத்த நாள் பள்ளி உணவு இடைவேளையில் தக்காளி சாதத்தைச் சாப்பிட்டுக்கொண்டே தனது இரு நண்பர்களிடம் இந்த அராஜகத்தைப் பற்றிப் புலம்பினான். அவர்கள் அப்பகுதியில் பல வருடங்களாக வாழ்பவர்கள். ஒருவன் ஜித்தேஷ், லைப்ரரி பக்கமே செல்லாதவன். “அப்படியா! 5 ரூபாய்க்கு ஸ்கூல் வாசல் கடையில 15 வெங்காய சமோசா வாங்கலாமே!” என வாயைப் பிளந்தான். இன்னொருவன் ஜத்தின், “ஆமா எனக்கும் தெரியும்… அந்த லைப்ரரி அப்படித்தான்… என்ன பண்றது…” என்றபடி சப்பாத்தியை மென்றான்.

“ஏதாச்சும் பண்ணணும்டா…”

அப்போதுதான், அதாவது சரியாகச் சொல்ல வேண்டுமெனில், தக்காளி சாதத்தை மென்று முடித்து தயிர்ச் சாத டப்பாவைத் திறக்கும் போதுதான், அவர்கள் அமர்ந்திருந்த நாகலிங்க மரத்தடியில் தொப்பென்று ஒரு நாகலிங்கப் பூ வந்து விழுந்தபோதுதான், யஷ்வந்துக்கு அந்த யோசனை தோன்றியது. நண்பர்களிடம் மெல்லிய குரலில் சொன்னான். ஜத்தின் முகம் மலர்ந்து தலையாட்டினான். சமோசாவுக்கு வாயைப் பிளந்த ஜித்தேஷின் வாய் பிளந்தே நின்றது. நாகலிங்க மரம் அசைவில்லாமல் அவர்களின் உணவு டப்பாக்களுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

மூவரும் இதற்கு முன் ஒன்று சேர்ந்தது இதே நாகலிங்க மரத்தடியில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆனதைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்கு முழு சுதந்திரப் போராட்டத்தையும் மாணவர்களை வைத்துப் பள்ளியிலேயே ஒரு நீண்ட நாடகமாகப் போடும் திட்டத்தை ஆசிரியர் ஒருவர் முன்வைத்தார். பிபின் சந்திர பாலாக யஷ்வந்தும், லாலா லஜ்பத் ராய் மற்றும் பால கங்காதர திலகராக அவனின் இரு நண்பர்களும் தேர்வு செய்யப்பட்டனர். ‘லால் பால் பால்’ ஆகிய மூவரும் மேடையில் சில அடிகள் முன் நடந்துவந்து, வீரமாகக் கை தூக்கி, மைக்கில் ஆளுக்கொரு வரி வசனம் சொல்லிவிட்டுக் கிளம்பவேண்டியதுதான். பின் ஜெனரல் டயர் வந்து தன் அக்கிரமங்களைச் செய்யத் துவங்குவான். “சுதந்திரம் எமது பிறப்புரிமை, யாம் அதைப் பெற்றே தீருவோம்!” போன்ற அவ்வசனங்களை மூவரும் மனப்பாடம் செய்தது இதே நாகலிங்க மரத்தடியில்தான்.

அன்று மாலை பள்ளி முடிந்ததும் பாட்டா ஷூ அணிந்த ஆறு கால்கள் ஈஸ்வரி லைப்ரரியை மிக இயல்பாகக் கடந்து சென்றன. லைப்ரரியைச் சுற்றிலும் ஒரு சிறிய காம்பவுண்ட் சுவர். அதன் அகலமான வாயில் கதவு எப்போதும் திறந்தேதான் கிடந்தது. வாசலருகில் பழைய பேப்பர் அடுக்குகள். அங்கு ஓரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு மூவரும் உள்ளே சென்றனர்.

ஜத்தினும் ஜித்தேஷும் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து யஷ்வந்த்துக்குக் கண்களாலேயே ஜாடை காட்டினர். அவனும் ஓரகண்ணால் பார்த்துவிட்டு, மற்ற புத்தகங்களை மேய்வதுபோல் லைப்ரரியை நோட்டம் விட்டான். உரிமையாளர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து இரண்டாவது அடுக்கைத் தாண்டி கண்ணுக்குத் தெரியாது. பின்னே செல்ல செல்ல வெளிச்சம் குறைந்துகொண்டே போனது. ஒரேயொரு மின்விளக்கும் ஒரு பெரிய ஜன்னலும்தான் மொத்த லைப்ரரிக்கும் வெளிச்சம். பெரிய ஜன்னல், சதுர வடிவம், பூச்சிகள் நுழையாமலிருக்க இரும்பு வலை போடப்பட்டிருந்தது. ஓரத்தில் எலி ஓட்டை போட்டது போல வலை பிய்ந்திருந்தது.

அன்று முழுக்க வீட்டினுள் அங்கும் இங்கும் பரபரப்பாக நடந்தபடி இருந்தான் யஷ்வந்த். சில நாட்களுக்கு முன்புதான் விசில் அடிக்க பழகியிருந்தான். சிந்தனையில் எங்கோ தொலைந்தபடி கமல்ஹாசனின் குரு திரைப்பட டியூனை பாதி விசிலும் பாதி காற்றுமாக அடித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் நாகலிங்க மரத்தடியில் உணவு இடைவேளையின் இறுதி பத்து நிமிடங்களில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ஜித்தேஷ் கொஞ்சம் குள்ளம், வேகமாக ஓடுவான். ஜத்தின் சைக்கிள் வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் தங்களுக்குள் சில புத்தகங்களின் பெயர்களை முணுமுணுத்துக் கொண்டார்கள். ஜித்தேஷால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. “ஃபேம்ஸ் ஃபை படிடா நல்லா திரில்லிங்கா இருக்கும்,” என ஜத்தின் பரிந்துரைத்தான். மணி அடித்தது. வகுப்பறைக்கு ஓடுவதற்கு முன் யஷ்வந்த் குனிந்து தரையிலிருந்து ஒரு நாகலிங்கப் பூவை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். பீரங்கிக் குண்டுகள் போன்ற மேலும் பல பூக்களுடன் மரமும் ஆயத்தமாய் அவன் பின்னால் நின்றது.

பள்ளி முடிந்ததும் மூவரும் ஈஸ்வரி லைப்ரரிக்குச் சென்றார்கள். ஜித்தேஷ் காம்பவுண்டுக்குள் நுழைந்து லைப்ரரிக்கு வெளியே ஜன்னலருகே போய் நின்றுகொண்டான். ஜத்தின் தனது சைக்கிளுடன் வாசலிலேயே நின்றுகொண்டான். அவனருகில் நின்று யஷ்வந்த் லைப்ரரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தான். ஆள் நடமாட்டம் இல்லை. ஏனோ நூலகத்தை நெருங்க நெருங்க ஒரு சம்பவம் அவன் நினைவில் வந்து முட்டிக்கொண்டே இருந்தது. 

சுதந்திரப் போராட்ட நாடகத்தில் ‘லால் பால் பால்’ ஆகிய மூவருக்கும் பஞ்சகச்சமும் சட்டை ஓவர்கோட்டும் உடை என முடிவானது. நாடகம் அரங்கேறும் நாள், இந்தப் பஞ்சகச்சத்தைக் கட்டிவிடுவதற்கென்றே ஒரு மடிசார் மாமி வந்திருந்தார். திறம்பட கட்டியும் விட்டார். ஆனால் விதிவசமாக மேடை ஏறுவதற்குச் சில நிமிடங்கள் முன், யஷ்வந்த்தின் பஞ்சகச்சம் மட்டும் அவிழ்ந்துவிட்டது. அருகிலிருந்த ஆங்கில ஆசிரியை, பஞ்சகச்சத்துடன் போராடி எப்படியோ அங்கும் இங்கும் சுற்றி நுழைத்து முடிச்சிட்டு அவனை மேடை ஏற்றிவிட்டார். மீண்டும் அவிழ்ந்துவிடுமோ என்கிற பீதியுடனேயே தனது வசனத்தை ஒப்பித்தான் யஷ்வந்த். 

பிபின் சந்திர பால் ஒரு மிதவாதி. எனவே அந்தப் பீதி கலந்த தொனியினால் நாடகத்திற்குப் பெரிய பங்கம் ஏதுமில்லை என்று யஷ்வந்த் நினைத்தாலும், இந்த நினைவு ஒரு சிறு நடுக்கத்தைத் தந்தது. தனது அரைக்கால் சட்டையைத் தூக்கிவிட்டுக்கொண்டான். வெளிச்சுவரில் புதிதாக ஒட்டப்பட்டிருந்த ‘தி லெஜெண்ட் ஆஃப் பகத் சிங்’ திரைப்பட போஸ்ட்டருக்குப் பக்கத்தில் படுத்திருந்த தெரு நாய் ஒன்று கம்மென்று அவனைப் பார்த்தது. பகத் சிங்கின் கண்களையும் கூர்மையான மீசையையும் ஒரு முறை பார்த்துவிட்டு நூலகத்தினுள் நுழைந்தான். உரிமையாளர் முதல் அடுக்கில் சில புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்தார்.

நேராக மூன்றாவது அடுக்குக்கு நடந்தான் யஷ்வந்த். அங்கிருந்து ஒரு ஃபேம்ஸ் ஃபை புத்தகம் உருவினான். அடுத்து எதிர் அடுக்கிலிருந்து ஒரு ஹார்டி பாய்ஸ். அடுத்து பின்னடுக்கிலிருந்து ஹாரி பாட்டர் முதல் பாகம். உரிமையாளர் எங்கிருக்கிறார் எனத் திரும்பிப் பார்த்தான். அவர் மும்முரமாகப் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருப்பது அடுக்குகளின் வழியாகத் தெரிந்தது. 

கையிலிருந்த முதல் புத்தகத்தைச் சுருட்டி உருளை வடிவாக்கிக்கொண்டு, ஜன்னலை நோக்கி விரைந்தான். இரும்பு வலையின் ஓரத்திலிருந்த ஓட்டைக்குள் அதை நுழைத்தபோது மாலை சூரிய வெளிச்சம் அதன் மீது பட்டது. அதன் பிளாஸ்டிக் உறை இரும்பு வலையின் நுனிகளில் சிக்கி மாட்டிக்கொண்டது. சத்தம் எதுவும் வராமல் மெதுவாக அதைத் தள்ளினான். அடுத்த முனையில் ஆவலுடன் காத்திருந்த ஜித்தேஷின் முகம் தெரிந்தது. லேசாக எம்பினான். நாகலிங்கப்பூ விழும் மெல்லிய தொப் சத்தத்துடன் புத்தகம் வெளியில் விழுவது கேட்டது.

வெளியே சிமெண்ட் தரை, விழும்போது சத்தம் கேட்கும் என யஷ்வந்த் எதிர்பார்த்திருக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பினான். உரிமையாளரின் உருவம் இரண்டு அடுக்குகள் தள்ளி இன்னமும் அதே இடத்தில் நின்றிருந்தது.

“அடுத்தது போடு நான் கேட்ச் பண்ணிக்கறேன்,” என ஜித்தேஷ் ஜன்னல் வழியே குசுகுசுத்தான். இரண்டாவது புத்தகம் ஓட்டைக்குள் இலகுவாகச் சென்றது. ஃபேம்ஸ் ஃபை குறைந்த பக்கங்கள் என்பதாலோ என்னவோ. ஜித்தேஷ் சரியாகப் பிடித்தும்விட்டான். அடுத்து ஹாரி பாட்டரைச் சுருட்டினான். ஓட்டைக்குள் செல்லவில்லை. நன்றாக அமுக்கி நுழைத்தான். கால்வாசி சென்றது. இன்னும் அமுக்கித் தள்ளினான். ஜித்தேஷ் மறுமுனையிலிருந்து இழுக்க ஆரம்பித்தான். திடீரென்று வெளியிலிருந்து யாரோ “டேய்!” எனக் குரல் கொடுத்தார்கள்.

அவ்வளவுதான், ஒரேயொரு கத்துதான். எந்தத் திசையிலிருந்து வந்தது தெரியாது. அடுத்து என்ன நடந்தது தெரியாது. வெடிச் சத்தம் கேட்டு வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடும் நாயைப் போல் யஷ்வந்த் தெறித்து ஓடினான். இளநீர் விற்று வரும் வண்டியைக் கடந்து, வாட்ச் ரிப்பேர் கடையின் பக்கத்துச் சந்துக்குள் நுழைந்து, குப்பைத்தொட்டியில் தலை கவிழ்த்திருக்கும் மாட்டைத் தாண்டி, இடிந்து கிடந்த ஒரு கற்சுவரின் ஊடே புகுந்து, குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் ஆனைச் சவாரி செய்வது போல ஸ்கூட்டி ஓட்டிவந்தவரின் முன்னே குதித்து, கார் மெக்கானிக் திரும்பித் துப்பிய பீடா சாரலிலிருந்து தப்பித்து, உருமிக்கொண்டிருக்கும் தண்ணீர் மோட்டாரின் பக்கத்துப் படிகளை மூன்று மூன்றாகத் தாவி ஏறி, தனது வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் யஷ்வந்த் ஓட்டத்தை நிறுத்தினான். மூச்சிரைத்துக்கொண்டே நடந்தது என்ன, ஒரு முறை மனத்தில் ஓட்டிப்பார்த்தான். இவன் உள்ளிருந்து ஓடி வருவதைப் பார்த்து லைப்ரரி உரிமையாளர் வாசல் வரை வந்ததாக அவன் மனத்தில் ஒரு மங்கலான சித்திரம் தோன்றியது. ஜித்தேஷை வேட்டி அணிந்த ஒரு பெரியவர் துரத்திக்கொண்டு போனது போல ஒரு பிம்பம். ஜத்தினுக்கு என்ன ஆயிற்று? தெரியவில்லை.

அடுத்த நாள் மதியம் கொளுத்தும் வெய்யிலில் கிரிக்கெட் ஆடும்போது ஜித்தேஷ் சொன்னான். அவன் ஜன்னலருகில் நிற்பதை ஒருவர் பார்த்துவிட்டுத் துரத்திவந்து, சட்டை காலரைப் பிடிக்கும் அளவுக்கு நெருங்கிவிட்டார். ஆனால் இவன் வேகமாக ஓடிவிட்டானாம். ஜத்தின் சத்தம் கேட்டவுடனேயே ஜூட் ஆகிவிட்டானாம்.

“அந்த ரெண்டு புக்ஸ் எங்கடா?”

“சாரிடா… பயத்துல அங்கயே போட்டுட்டேன்…”

கிரிக்கெட் ஆடிய களைப்பில் மூவரும் மரத்தடி நிழலில் வண்டி வைத்திருந்த அம்மாவிடம் எலுமிச்சை ஜூஸ் வாங்கினார்கள். அதை உறிந்துகொண்டே யஷ்வந்த் யோசித்தான். ஜன்னல் கம்பியில் பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் நீட்டிக் கிடந்த அந்த ஹாரி பாட்டர் புத்தகத்தைப் பார்த்த லைப்ரரி உரிமையாளரின் மண்டைக்குள் என்ன ஓடியிருக்கும்? புத்தகத்தை எடுத்த பிறகு அந்தக் காலி இடத்தில் அவன் விட்டுச்சென்ற நாகலிங்கப்பூவை அவர் பார்த்திருப்பாரா?

சில நாட்கள் கழித்துப் பெற்றோருடன் அந்த லைப்ரரி சென்றதாகவும் அந்த ஓட்டை அடைக்கப்பட்டுவிட்டதாகவும் ஜத்தின் சொன்னான். 

“பழைய நியூஸ்பேப்பர் போட அந்த லைப்ரரி பக்கம் போறேன். என்னடா உனக்கு அங்க மெம்பர்ஷிப் வாங்கட்டுமா?” எனக் கேட்ட அப்பாவிடம், “இல்லப்பா, அங்க புக்ஸ் எதுவும் சரியில்ல,” என்றுவிட்டான் யஷ்வந்த். 

பின்னாட்களில் மின்சார வெட்டின்போது வெறும் சுவரைப் பார்த்துக்கொண்டிருக்கையில், வியர்வையின் தனிமையில், தனது லைப்ரரி படையெடுப்பை எண்ணிப் பார்ப்பான் யஷ்வந்த். அந்த நினைவு வரும்போதெல்லாம் குரு படத்தின் விசில் டியூனை ஊதுவான். காற்று குறைந்து குறைந்து விசில் வலுக்கத் துவங்கும், மனம் ஆசுவாசம் அடையும். பரீட்சை, ஷக்திமான் தொடரென வாழ்க்கையும் நகர்ந்தது. டிங்கிள் டைஜெஸ்ட்டின் விலையும் இருபதிலிருந்து இருபத்தி ஐந்து ரூபாய் ஆனது.

இரண்டு ஆண்டுகள் கழித்து, பக்கத்து ஃபிளாட்டில் இருக்கும் ஒரு நண்பன் தனது பிறந்த நாளுக்காக யஷ்வந்த்தையும் அவன் தம்பியையும் வீட்டுக்கு அழைத்திருந்தான். சிறிய சில்வர் நிற பேப்பர் தட்டில் பிரிஞ்சி, கேக், உருளைக்கிழங்கு வறுவல் சாப்பிட்டுக்கொண்டே நண்பனின் வீட்டை நோட்டம்விட்டபோது, ஷெல்ஃபில் இருக்கும் ஒரு புத்தகத்தின் மேலிருக்கும் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியின் ஸ்டிக்கர் யஷ்வந்த்தின் கண்ணில்பட்டது.

“நீ அந்த லைப்ரரிலேர்ந்து பாரோ பண்ணுவியாடா?” என்று நண்பனைப் பார்த்துக் கேட்டான்.

நண்பனின் கண்களில் விஷம வெளிச்சம் தோன்றி மறைந்தது. யஷ்வந்தை மட்டும் தனியாகக் கூட்டிச் சென்று சொன்னான், “நானும் அம்மாவும் லைப்ரரிக்கு அப்பப்போ போவோம். சில புக்ஸ் பாரோ பண்ணுவோம். நான் சொல்ற ஒன்னு ரெண்டு புக்ஸ் மட்டும் பாரோ பண்ணாமலேயே அம்மா ஹேண்ட் பேக்கிற்கு உள்ள போட்டு சைலண்ட்டா கொண்டுவந்துடுவாங்க. அத அப்படியே வெச்சுப்போம்.”

யஷ்வந்தின் வாய் ஆச்சரியத்திலும் பெருமதிப்பிலும் பிளந்து நின்றது. யாரோ கூப்பிட நண்பன் நகர்ந்துவிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வண்ணக் காகிதத் தோரணங்களுக்குக் கீழே, சில பெரியவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த நண்பனின் அம்மா மீது யஷ்வந்த்தின் கண்கள் ஒரு கனம் நிலைத்தன. நீண்ட புத்தக வரிசையில் நிலை குத்தி நிற்கும் அந்தப் புத்தகத்தை மீண்டும் பார்த்தான். தலையைச் சாய்த்து அதன் முதுகுத்தண்டில் பொறிக்கப்பட்டிருந்த தங்கநிற எழுத்துகளை ஒரு முறை கம்மிய குரலில் உதடுகள் அசையப் படித்துவிட்டு, கேக் கிரீம் ஒட்டியிருந்த தனது விரலை நக்கியபோது, அவன் முகத்தில் நிறைவான ஒரு புன்னகை இருந்தது.

***

Leave a Reply

%d bloggers like this: