ஹேர்கட்

சொல்வனம் டிசம்பர் 2021 இதழில் வெளியான எனது சிறுகதை.


அன்று அமருக்கு ‘முடி வெட்டிக்கலாமே’ எனத் தோன்றியபோது கையில் பழுப்பு நிற உறை ஒன்று இருந்தது.

அஞ்சல் டப்பாவில் குவிந்திருந்த விளம்பரத் தாள்களை அள்ளிக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டுத் திரும்பிய அமர் தன்னைத் தானே கடிந்துகொண்டான். பூட்டி வைத்தாலுமே பெட்டியின் கோடு போன்ற துவாரத்தை அடைக்க மறந்தால், அதனுள் என்னவெல்லாம் நுழைய வாய்ப்பிருக்கிறதோ அத்தனையையும் நுழைத்துவிடுகிறார்கள். பெட்டியின் அடிவயிற்றில் பதுங்கிக் கிடந்தது அந்தப் பழுப்பு நிற உறை. அதை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு துவாரத்தை மறக்காமல் அடைத்துவிட்டு, பெட்டியை இறுகப் பூட்டினான்.

தொட்டால் பஞ்சுபோல அமுங்கியது உறை. பத்து ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு உறையைச் சென்னை வீட்டில் தபால்காரர் வந்து கொடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுச் சென்றார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த கடிதம் அது. அம்மா சொன்னவாறு சாமி படத்திற்கு முன் வைத்த பிறகே பிரித்தான். நான்கு ஆண்டுகள் கணினிப் பொறியியல் பட்டம் படிப்பதற்கான அழைப்புக் கடிதம், முழு உதவித் தொகையுடன். அதற்கு ஈடாகப் படிப்பு முடிந்ததும் ஆறு ஆண்டுகள் சிங்கப்பூரில் ஏதாவது ஒரு வேலை பார்க்க வேண்டும்.

“அதெப்படி முடியும்? நம்ம பசங்கள அடிமைகளாக்கிட்டா? என் மகனை அனுப்பறதா இல்ல!” என்று தலை உலுக்கிய நண்பனின் அம்மாவை முறைத்துவிட்டு, “அப்படியெல்லாம் எதுவும் நடக்காதும்மா,” எனத் தனது அம்மாவைத் தேற்றிவிட்டு, சிங்கப்பூர் வந்துசேர்தான் அமர். இப்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவன் கையில் அதே போன்றதொரு உறை. 

படிகளில் ஏறியபடியே பிரித்தான். ஆறு ஆண்டுகள் நீ சிங்கையில் வேலை செய்தாயிற்று, உனது கடப்பாடுகள் முடிந்தன என்றது கடிதம். இனி அமர் நினைத்தால் சிங்கையிலேயே வேலையைத் தொடரலாம் அல்லது வேறு நாட்டிற்கு கிளம்பலாம். கடிதத்தைக் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து அம்மாவிற்கு வாட்ஸாப்பில் அனுப்பினான், “முடிஞ்சிது” என்கிற ஒற்றைச் சொல்லுடன். முடி வெட்டிக்கொள்ள வேண்டுமெனத் தோன்றிய தருணமும் அதுவே.

வீட்டில் தனது மேஜையில் குப்பையில்லாத ஓர் ஓரமாக அக்கடிதத்தை வைத்துவிட்டு வெளியே வந்தான். பலமான காற்றில் தள்ளாடும் வீட்டுக் கதவை இழுத்து மூடும்போது, கடந்த காலத்தையும் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப் புதிதாக எங்கோ கிளம்புவது போல இருந்தது.

“உங்களின் எதிர்கால முனைப்புகளுக்கு வாழ்த்துகள்!”

படிக்கட்டில் படுத்துக் கிடக்கும் பூனையைத் தாண்டியபடி கடிதத்தின் அந்த இறுதி வரியைத் தனக்கு தானே சொல்லிக்கொண்டான். வகுப்பறையில் நுழைந்து அவன் பெயரை ‘அமர்நாத்த்த்’ என அழுத்திக்கூப்பிட்ட தலைமை ஆசிரியரின் மீசை முகம்… வெய்யில் கொளுத்தும் மொட்டைமாடியின் ஓரத்தில் என்.யூ.எஸ்ஸுக்கு வரத் தயங்கும் நண்பனை மடக்கிச் சம்மதிக்க வைத்தது… பல ஆண்டுகள் பாய்ஸ் ஸ்கூலில் படித்துவிட்டு சிங்கப்பூர் விமானத்தில் ஒரு பெண் அருகில் அமர்ந்தது… காய்ந்த ரொட்டியைத் தின்ன வரிசையில் நிற்கும் நண்பர்களை ஏளனமாய்ப் பார்த்து, தான் சீன உணவைச் சுவைக்கப் போவதாக அறிவித்து சப்பென்று ஒரு சூப்பைக் குடித்துவிட்டு லிட்டில் இந்தியாவில் சரணடைந்தது… ரயிலிலிருந்து கையில் பெட்டியுடன் இறங்கி அவசர அவசரமாகக் கையுறைகளைக் கழற்றி ஐரோப்பாவின் பனித் துகள்களைத் தொட்டது… ராபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையத்தின் நீண்ட நிலத்தடிச் சுரங்கப்பாதையில் அலுவலகங்களுக்குத் தினம் அணிவகுப்பு செய்யும் கூட்டத்தின் ஊடே விரைந்து நடந்தது… தன் தோளில் சாய்ந்து அழும் பெண்ணிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் வானைப் பார்த்தபோது கேபிள் கார்கள் அவர்களை மெளனமாகக் கடந்து சென்றது… இப்படிச் சாலையைக் கடக்கும் பொத்தானை அழுத்தும் வரை, பல நினைவுகள் குபுக்குபுக்கென்று மேலெழுந்து வந்தன. 

காலியான சாலையைக் கடந்து ஓடியபோது அவனையும் அறியாமல் ஒரு புன்னகை வந்தது. அம்மாத இறுதியில் வேலையை விடுவதாகத் தனது அலுவலகத்தில் தெரிவித்திருந்தான். ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பார்த்த வேலை. ஸ்டார்ட்டப். அவனுக்குப் பிடித்த வேலைதான். விடுவதற்குப் பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. இம்முடிவைக் கேட்டுப் புரியாமல் விழித்த சக ஊழியரின் மதுக் கோப்பையை இடித்து, “ஒரேயொரு வாழ்க்கைதானே நமக்கு! சியர்ஸ்!” என்றான். “அடுத்து என்ன செய்யப் போற?” என்று கேட்ட நண்பனிடம் இரண்டு தோள்களை உயர்த்திக் கைகளை விரித்துப் புன்னகைத்தான். தனக்குள் ஏற்கனவே இருந்த அந்தக் கேள்வியும் அதன் வாலைத் தொற்றி வரும் குழப்பமும் தொண்டை வரை மேலெழ, ஒரு வாய் மது அருந்தி மீண்டும் அதை உள்ளே தள்ளினான்.

அந்தப் பேரங்காடியின் இரண்டாம் அடித்தளத்தின் ஒரு மூலையை இடித்துக்கொண்டு சுருங்கிப் படுத்திருந்தது முடிவெட்டும் கடை. உள்ளே நுழைந்து அவன் நீட்டிய பத்து டாலர் நோட்டு ஓர் இயந்திரத்திற்குள் சொருகப்பட்டு சிறிய அட்டையாக வெளியே குதித்தது. நீட்டப்பட்ட ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அமரின் மூக்குக் கண்ணாடி மடங்கி படுத்துக்கொண்டது. 

நாற்காலியில் அமர்ந்து தனது பிம்பத்தைப் பார்த்து, “மீடியம்” என்றான் அமர், புரியும்தானே என்ற சந்தேகத்துடன். சென்னையில் முடி வெட்டும்போது எப்போதுமே “ஷார்ட்” என்பான். எவ்வளவு கம்மியாக வெட்டச் சொன்னாலும் அதிகமாகவே முடியை விட்டு வைப்பார்கள். “அப்பத்தானே அவங்க கடைக்கு சீக்கிரமே திரும்பப் போவோம்!” என்பாள் அம்மா. ஆனால் சிங்கப்பூரில் ஒரு முறை “ஷார்ட்” என்று சொல்லிக் கிட்டதட்ட மொட்டையே அடித்துவிட்டார்கள். அன்றிலிருந்து மீடியமுக்கு மாறிவிட்டான்.

மெல்லியதொரு காகிதப் பட்டை அவன் கழுத்தைச் சுற்றி வைக்கப்பட்டது. பிறகு அவனது உடலைக் கருப்பு போர்வை மூடியது. தலையில் தண்ணீர் ஸ்ப்ரே. சிறு வயதில் தலையில் தண்ணீரை ஸ்ப்ரே செய்தாலே, கவிழ்த்துப்போட்ட கரப்பான்பூச்சி போலத் துடிப்பான். ஆனால் இப்போது நாற்காலியின் பஞ்சு மென்மையும் பேரங்காடியின் குளிரூட்டலும் போர்த்திய துணியும் அவனுக்கு இதமாக இருந்தன. முடிவெட்டல் துவங்கியது. 

சென்னையில் முடி வெட்டும் கடை பிள்ளையார் கோவிலின் எதிரே இருக்கும். பெயர்ப் பலகை எதுவும் கிடையாது. ஞாயிறு காலை அப்பாவுடன் போவான். அப்பா பார்க்கும் முதல் தடவையே கடைக்காரர்களுடன் நெருங்கிய நண்பர் ஆகிவிடுவார். கடையில் வேலை செய்யும் பையன்கள் அமருக்கு வெட்டுவார்கள், ஆனால் அப்பாவுக்கோ வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்த கடை முதலாளி மட்டுமே வெட்டுவார். அவர் சட்டையின் முதல் மூன்று பொத்தான்கள் எப்போதுமே திறந்திருக்கும். நெற்றியில் குங்குமம் இல்லாது அவரைப் பார்த்ததே கிடையாது. அமரின் அப்பாவுடன் பேசிக்கொண்டே முடி வெட்டிவிடுவது அவருக்கும் பிடித்திருந்தது போல. 

அமருக்கு சலூனில் காத்திருக்கையில் போரடிக்கும். அங்குச் சிதறிக் கிடக்கும் செய்தித்தாள்களையும் இதழ்களையும் புரட்டிப்பார்ப்பான். அப்போதுதான் ஒரு நாளிதழில் சிந்துபாத் காமிக் தொடரை முதன் முதலாகக் கண்டான். பள்ளியில் இரண்டாம் மொழி ஹிந்தி எடுத்ததால் தமிழ் அவனுக்கு எழுத்து கூட்டித்தான் படிக்க வரும். அதனால் குறைவான சொற்கள் கொண்ட இந்தக் காமிக் தொடர் பிடித்துப்போனது. கதையின் ஆரம்பம் தெரியாது. அவர் சிறுவனாக இருந்த சமயத்திலிருந்தே இந்தத் தொடர் வந்துகொண்டிருப்பதாக அப்பா சொன்னார். சலூனுக்குப் போகும்போது மட்டுமே அந்தத் தொடரைப் படிப்பான். விட்டுப்போன இடைவெளிகளை தானே ஒரு கதை உருவாக்கி நிரப்பிக்கொள்வான்.

அந்த சிந்துபாதுக்கு ஒரு குறுந்தாடி இருக்கும். தனக்கும் மீசை தாடி வேண்டும் என உள்ளூர ஆசை வந்தது அப்போதுதான். செய்தித்தாளிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் கடை முதலாளி அப்பாவுக்குச் சவரம் செய்துகொண்டிருப்பார். ஷேவிங் கிரீம் நுரையால் நிரம்பிய அப்பாவின் முகத்தைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கும். சலூன்காரர் ஒவ்வொரு சீவுக்குப் பிறகும் உள்ளங்கையில் க்ரீமை தேய்த்துக்கொள்வார். இந்த அசைவிற்கென்றே ஒரு தாளம் இருக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூர் ஹாஸ்டலில் ஜில்லெட் பிளேட் வாங்கித் தானே ஷேவ் செய்துகொள்ளும்போது இந்தக் காட்சியை நினைத்துக்கொண்டான். ஆனால் அவர் செய்தது போல லாகவமாகக் கையில் க்ரீமைத் தேய்க்க வரவில்லை.

அமரின் தலை குனியும்படி லேசாகத் தள்ளப்பட்டது. அவனின் குனிந்த தலைக்கு எதிரே ஒரு திரையில் ஓடிக்கொண்டிருந்த விளம்பரம், ஆஸ்திரேலியாவிற்கு மலிவு விலை விமான டிக்கெட்டுகள் வேண்டுமா எனக் கேட்டது. அது ஏன் நிறைய பேருக்கு ஆஸ்திரேலியா போகும் ஆசை தோன்றுகிறது என யோசித்தான். அவ்வளவு உலக நடப்பெல்லாம் அவனுக்குத் தெரியாது. “எப்ப பாரு கம்ப்யூட்டர்லயே மூழ்கிக் கிடக்க வேண்டியது,” என்று பாட்டி சொல்வாள். உண்மைதான், ஆஸ்திரேலியா என்றாலே அவர்களின் கிரிக்கெட் டீமும் அவர்கள் திமிராக இந்திய வீரர்களை ஸ்லெட்ஜ் செய்ததும்தான் அவன் நினைவுக்கு வரும். சிங்கப்பூர் அப்படியில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன் அனைவரும் வருக எனத் தனது கதவுகளைத் திறந்து வைத்துக் கூப்பிட்டது. ஆண்டுகள் செல்ல செல்ல என்.யூ.எஸ்ஸில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததை அவன் கவனித்தான். இப்போது கிட்டதட்ட போதும்ப்பா என்று அவன் அஞ்சல் பெட்டியைத் தாழிட்டதுபோல ஆகிவிட்டது சிங்கப்பூர். தனக்கோ தனது மனைவிக்கோ பி.ஆர் ரிஜெக்ட் ஆன சோகத்தைச் சுமந்து போகும் ஒருவரையாவது வாரம் ஒரு முறை பார்த்துவிடுகிறான். 

தன்னுடன் படித்தவர்கள் யாரெல்லாம் இன்னும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள் என யோசித்துப் பார்த்தான். கெட்டிமேளம் கொட்டுவதற்கோ, பெயர் கேட்டதுமே புருவம் உயரும் கம்பெனிகளில் வேலை பார்க்கவோ, கவுன் மாட்டித் தொப்பியை வீசி எறிவது போல் புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ, அனேகமாக எல்லோருமே இப்படி ஏதோவொரு காரணத்திற்குப் பிற நாடுகளுக்குக் கிளம்பிவிட்டனர்.

“யூ ஸ்டுடெண்ட்?”

அமர் நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தான். பிம்பத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண். அப்போதுதான் முதல் முறையாக அவள் முகத்தைக் கவனித்தான். ஏதாவது பொருளை விற்க வழிமறிப்பவர்களிடம் தான் ஒரு மாணவன் எனப் பொய் சொல்லித் தப்பித்துவிடுவான். இப்போது என்ன சொல்வது? 

“இல்ல, வேல பாக்குறேன்,” என்றான்.

“ஐ.டி?”

இதைக் கேட்டவுடனே அமர் சத்தமாகவே சிரித்துவிட்டான். முன்பெல்லாம் லேசான கோபம் வரும். “இந்தியன்னாலே ஐ.டிதானா?!” என்றெல்லாம் குதர்க்கமாகக் கேட்பான். ஏனோ இன்று தோன்றவில்லை. 

“ஆமா ஆனா இல்ல…” என்றான்.

அவளது சிறு திகைப்புப் பார்வைக்குக் காத்திருந்து, அது வந்ததும், “வேலைய விட்டாச்சு!” என்றான். அதைச் சிரித்தபடி சொன்னாலும், இதுவரை தெளிவாக அமைக்கப்பட்டிருந்த ஒரு பாதையில் பயணித்தவன் அடர் வனம் ஒன்றின் முன்னால் வந்து நின்றுவிட்டது போலவும், தன் முன் இருக்கும் பற்பல பாதைகளுள் எதைத் தேர்வு செய்வதெனத் தெரியாமல் வனத்தின் முகப்பில் நின்றுகொண்டிருப்பதாகவும் உணர்ந்தான். அவன் பார்வையிலிருந்து அவளுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்.

“ஓ…” என்றவள் சற்று நேரத்தில், “அப்போ ஏதாச்சும் புது ஹேர்ஸ்டைல் டிரை பண்றீங்களா?” என்றாள், கண்ணாடிக்குப் பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த பலவிதமான மண்டைகளின் புகைப்படங்களைக் காட்டி. அவை எதுவும் அமரை ஈர்க்கவில்லை. ஆனால் ஏன் வேறு ஸ்டைல்களை நாம் முயற்சித்ததே இல்லை என்றிருந்தது அவனுக்கு. குருவிக்கூடு போல முடி வளர்த்த ஒரு கல்லூரி நண்பன் நினைவுக்கு வந்தான். அந்த அளவிற்குப் போக வேண்டாமென, “ஒரு நிமிஷம்!” என்றபடி போர்வைக்கு அடியிலிருந்து தனது கைப்பேசியை வெளியே எடுத்தான். 

தன்னை மிகவும் ஈர்த்த ஓர் எழுத்தாளரின் புகைப்படத்தைக் கூகிளில் தேடினான். ஆனால் அவருக்குப் பெரிதாக ஹேர்ஸ்டைல் என்று இருப்பதாகத் தெரியவில்லை. கலைந்த முடி மட்டுமே. அடுத்து ஓர் இசைக் கலைஞரைத் தேடிப் பார்த்தான். சுருள் முடி அவருக்கு, இவனுக்குச் சாத்தியமில்லை. இன்னொருவரின் பெயரை அடித்தான். அவருக்கு வழுக்கை என்பது அப்போதுதான் தெரியவந்தது. இப்படிப் பலவிதமான ஹேர்ஸ்டைல்களை அவனின் விரல் இடதும் வலதுமாகச் சுண்டி முடிவெடுக்க முடியாமல் திணறுவதைப் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அமரின் தோளை லேசாகத் தட்டி, “இருக்கட்டும், நான் ஒரு ஸ்டைல் பன்றேன்,” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

அமரின் காதை மடக்கிப் பின்னாலிருக்கும் முடியை வெட்டத் துவங்கினாள். அமரின் காதுகள் யானையின் காதுகள் போல இருப்பதாக அவனுக்குத் தோன்றும். அப்படித் தோன்றவைத்துவிட்டார்கள். இதுவரை அவனுக்கு முடி வெட்டிய அனைத்து ஜாம்பவான்களுக்கும் அவனது காதுகள் ஒரு தொல்லையாகவே இருந்தன. அவற்றைப் பலவாறாக மடக்கி வேலை முடியும் வரை ஓர் இடத்தில் வைக்க முயல்வார்கள். ஆனால் என்ன நடக்கிறதென்று கூட்டத்தின் விளிம்பிலிருந்து ஆவலுடன் எட்டிப்பார்க்கிற ஆர்வக்கோளாறு போல அவன் காதுகள் மீண்டும் மீண்டும் குதித்தெழும். முடியைச் சரியாக வெட்டாவிட்டால் இந்தக் காதுகளைத்தான் அவன் பள்ளி பி.டீ மாஸ்டர் திருகுவார். அந்த பி.டீ மாஸ்டர்தான் அவனுக்கு முடி என்றால் என்ன எனும் தத்துவத்தை விளங்கவைத்த குரு. மிகவும் எளிமையான தத்துவம். “முடி என்பது மண்டையில் தேவையில்லாமல் வளரும் ஒரு வஸ்து. கைகளால் துழாவிப் பார்க்கும்போது அளவுக்கு அதிகமாக இருந்தால், வெட்டிவிட வேண்டும்.” இப்போது ஏழு கழுதை வயதான பின்பும் எந்தவொரு ஹேர்கட்டுக்கு பிறகும் கைகளால் பின் மண்டையைத் துழாவுவான் அமர். அப்போது எழும் உவகைக்குக் காரணம், “இது பி.டீ மாஸ்டருக்கு பிடிக்கும்,” என்கிற எண்ணம்தானோ?

அவன் பி.டீ மாஸ்டர் இல்லாவிடில் அவனை முடிவெட்டச் சொல்லி நினைவுப்படுத்தும் ஒரேயொரு ஜீவன் அம்மா. சரியான நேரம் பார்த்து, “அமர் நாளைக்கு முடி வெட்டிக்கோ!” என்பாள். பரீட்சையில் அவன் சரியான மதிப்பெண்கள் எடுக்காதபோது கண்டிக்கும் குரல் போலவே அது இருக்கும். சிங்கப்பூர் வந்த பிறகும் வீடியோ காலில் அவள்தான் முடி வெட்டவும் சவரம் செய்யவும் நினைவூட்டுவாள். இன்றுதான் முதல் தடவையாகத் தனது வாழ்வில் சுயமாக முடிவெட்டிக்கொள்ளத் தோன்றியுள்ளது என்பதை நினைத்து அவனுக்கே அதிசயமாக இருந்தது.

சென்னையில் முடிவெட்டிக்கொண்டு வீடு திரும்பியதும் பாட்டி தனிப்பெரும் விதிகளின் பட்டியல் வைத்திருப்பாள். வாசலில் நிற்கவேண்டும். வாசலிலிருந்து குளியல் அறைக்குப் போகும் வழியில் எந்தத் துணியையோ நபரையோ உரசிவிடக் கூடாது. தரையில் இருக்கும் மிதிகளையும்கூட அகற்றி வைத்திருப்பாள். இதில் ஒன்று பிசகினாலும் திட்டுதான். குளியல் அறைக்குள் ஓடி ஒதுங்கி ஒரு புழுவைப் போல அமர் நெளிந்துகொண்டிருக்க, ஆவி பரக்க வெந்நீர் கொண்டு வந்து வாளிக்குள் ஊற்றுவாள். இரண்டு கிண்ணங்களில் சீயக்காய், எண்ணெய். துணிகளை நனைத்துப் போடவேண்டும். குளித்துவிட்டு வந்ததும் கண்களால் ஏற இறங்க நோட்டமிட்டு, சொறசொறப்பான கையாலும் தடவிப் பார்த்து, சேலையை ஏற்றி இடுப்பில் சொருகி, முடிவெட்டலைப் பற்றித் தனது தீர்ப்பை வழங்கிக்கொண்டே சமைக்கச் சென்றுவிடுவாள். புழுவிலிருந்து மீண்டும் ஒரு மனிதனாகி அவனும் வீட்டுக்குள் உலாவருவான்.

இந்தத் தொல்லைகள் எதுவும் சிங்கப்பூரில் இல்லை. சிங்கப்பூர் அவனுக்குப் பிடித்துப்போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எந்த நாள் என்று பார்க்காமல் முடி வெட்டிக்கொள்ளலாம், எந்த நேரத்திலும் கடைக்குப் போகலாம், முடிந்ததும் குளிக்கலாம் குளிக்காமலும் இருக்கலாம். அவனது முடிவு. அது மட்டுமல்ல, சிறு வயதில் போர்வையால் போர்த்தியதுமே உடலின் எல்லா பாகங்களையும் அப்போதுதான் சொறியத் தோன்றும். சிங்கப்பூரில் அப்படியில்லை. “நாம வளர்ந்து பக்குவப்பட்டு அப்படியும் இப்படியும் அசையாம உட்கார கத்துக்கிட்டதுனால இருக்கலாம்,” என நினைத்துக்கொள்வான் அமர்.

அசைவின்றி அமர்ந்திருந்த தனது பிம்பத்தை ஒரு துளி பெருமையுடன் பார்த்துக்கொண்டான். முடிவெட்டுபவள் அவன் தலையை ஒரு பக்கமாகத் திருப்பி மின்நறுக்கியைச் செலுத்தினாள். அமரின் கண்கள் தனது சாய்ந்த முகத்தைக் கூர்ந்து பார்த்தன. முழுமையாகச் சவரம் செய்யப்பட்ட தனது முகம் திடீரென்று ஓர் அந்நியனைப் போல் காட்சியளித்தது. சிந்துபாத்தைக் கண்ட நாளிலிருந்தே மீசையும் தாடியும் அவனை ஈர்த்தன. இரண்டுமே வேண்டுமென நினைத்தவன் அவன். பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில், வீட்டில் யாரும் இல்லாதபோது கண்ணாடி முன் நின்று உதட்டுக்கு மேலே விழித்தெழும் சிறு மயிர்களை வெகு நேரம் பார்த்து ரசித்திருக்கிறான். பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால் அவனிடம் இருந்தது அவ்வளவே. அதைச் சவரம் செய்து எடுக்கச் சொன்ன அம்மாவிடம் அவ்வளவு சண்டைகள் போட்டிருக்கிறான்.

ராயல் சலூன் நினைவுக்கு வந்தது. அவனுக்கு மீசை அரும்பத் துவங்கிய காலத்தில் பெயரில்லாத சலூன் கடையை விட்டு, அப்பா ஏனோ திடீரென்று ராயல் சலூனுக்குப் போகத் துவங்கினார். ராயல் சலூனின் உள்ளே குளிரூட்டப்பட்ட காற்று, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் மின்நறுக்கிகள்! முதன் முதலில் மின்நறுக்கியால் வெட்டிக்கொண்டபோது எவ்வளவு வேகமாகவும் நேர்த்தியாகவும் வேலையைச் செய்திருக்கிறது என ஆச்சரியத்துடன் மீண்டும் மீண்டும் தலையைத் தடவிப் பார்த்தது ஞாபகம் வந்தது. கூர்மையான குட்டை மயிர்களின் மீது மேலும் கீழும் கையை வைத்துத் தேய்ப்பது சிறப்பாகச் சிந்திக்க உதவுகிறது என்கிற மாயை எல்லாம்கூட ஏற்பட்டதுண்டு.

ராயல் சலூனில்தான் அவன் தந்தை முதன் முதலில் டை அடித்துக்கொள்ளத் துவங்கினார். அங்குதான், “தம்பி இதை ஷேவ் பண்ணிடவா?” என அவனின் மீசையைச் சுட்டி கேட்டார் சலூன்காரர். சீட்டிலிருந்து தாவிக் குதித்து வேண்டாம் என தலை ஆட்டிய அமர், அன்று முழுக்க சவரக்கத்தியின் நுனியையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்படிப் பொத்தி வளர்த்த மீசையைச் சிங்கப்பூர் வந்த சில வாரங்களிலேயே ஷேவ் செய்துவிட்டான். ஏன் என்று அவனுக்கு இன்றுவரை தெரியவில்லை. உதட்டுக்குக் கீழே மட்டும் சதுர வடிவில் குறுந்தாடி என்கிற பெயரில் கொஞ்சம் முடியை விட்டுவைத்தான். “இது என்னது? ஷேவ் பன்றப்போ எடுக்க மறந்துட்டியா?” எனச் சிலர் கிண்டல் செய்தனர். சிங்கப்பூரில் அமைச்சர்கள் உட்பட முக்கியமானவர்கள் பலரும் சுத்தமாகச் சவரம் செய்தவர்களே என தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, அச்சிறு தாடித் துண்டையும் மழித்துவிட்டான். 

முடிவெட்டுபவள் அவன் தலையைக் கீழேத் தள்ளி உச்சந்தலையில் வெட்டத் துவங்கினாள். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்குச் சென்னை சென்றிருந்தபோது காய்கறிக் கடையில் பெயரற்ற சலூனின் முதலாளியைத் தற்செயலாகச் சந்தித்தான். முகத்தில் வயதான சுருக்கங்கள். அவரின் வெள்ளைப் பஞ்சு சட்டை நைந்திருந்தது. ஒருவாறு புன்னகைத்து, “பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு தம்பி… எப்படி இருக்கீங்க? முடி வெட்டணுமா?” என்றார். என்ன சொல்வதெனத் தெரியாமல் அமர் விழித்தான். அடுத்த கல்லூரி விடுமுறைக்குச் சென்றபோது அவரின் சலூன் பூட்டிக் கிடந்தது. ஊரைவிட்டுச் சென்றுவிட்டதாகக் காய்கறிக் கடைக்காரர் சொன்னபோதும் விழித்தான். சிங்கப்பூரிலும் அவன் பல முறை முடி வெட்டிக்கொண்ட மலாய் பார்பரின் கடை அடைக்கப்பட்டதைக் கண்டு கடை வாசலில் நின்று விழித்தான். அருகிலிருந்த ஃபுட் கோர்ட்டில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு உணவாகக் காத்திருந்த தவளைகளும் அவனைப் பார்த்து அதே போல விழித்தன.

அவனைக் கழுத்திலிருந்து முட்டிவரை போர்த்தியிருந்த கருப்பு போர்வையைத் தலை கவிழ்ந்தபடி பார்த்தான். ஆங்காங்கே முடிக் கற்றைகள் கிடந்தன. ஒவ்வொரு மூச்சுக்கும் அவன் வயிற்றருகில் இருந்த போர்வை பகுதி மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்தது. சிறு வயதில் இது அவனுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. மூச்சை வண்டி வண்டியாக உள்ளே இழுத்து வயிற்றை உப்பச் செய்வான். அப்போது போர்வையின் மடிப்புகளுக்கு ஏற்றவாறு வயிற்றுப் பகுதியிலிருந்து தரைக்கு உருண்டு போகும் மயிற்கற்றைகளை அவனுக்குப் பார்க்கப் பிடிக்கும். சில பக்கவாட்டில் போகும், சில நேராகத் தரையில் உருண்டு விழும். புதுப்புது கற்றைகள் இந்த விளையாட்டில் சேர்ந்துகொள்ள ஆர்வத்துடன் அவன் தலையிலிருந்து கீழே குதிக்கும். சுருள் சுருளாக முடி பந்துகள் அவன் முன் வந்து விழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தான், அவன் மடியில், அவன் மார்பில், தரையில்… நாம் பார்த்துக்கொண்டிருக்கையில் இப்படி கற்றை கற்றையாக எங்கோ உருண்டு போய்விடுகின்றன பல இடங்களும் நபர்களும்… கண்களை மூடினான்… தலைக்கு மேலே மின்நருக்கியின் ஒலி மெல்லக் குறைந்தது…

மரக்கட்டை மீது தண்ணீர் படும் ஒலிகள். கண்களைத் திறந்து பார்த்தால் அதே கருப்புப் போர்வையால் போர்த்தப்பட்டிருந்தான். ஆனால் அமர்ந்திருந்ததோ ஒரு படகின் நடுவில், சிங்கப்பூர் நதியில் பயணப்படும் பல படகுகளுள் ஒன்றில். அவன் முன் சிங்கப்பூரின் கட்டிட வான்வரை. ஒவ்வொரு கண்ணாடி மாளிகையும் பெருங்காட்டின் தனி மரங்கள் போலத் தோன்றின. இந்தக் கட்டிடங்களினூடே விரைந்து பல ஆண்டுகள் கழித்தாயிற்று. பளபளப்பான வர்த்தக மையக் கட்டிடங்களைக் காக்கும் வாயிற்காவலன் போல மெர்லயன் கிழக்கை நோக்கிப் பெருமையுடன் நின்றிருந்தது. பல சாயங்கால நேரங்களில் வேலையை முடித்தபின் காதில் இயர்போன்ஸ் மாட்டிக்கொண்டு இதைக் கடந்து நடந்துசென்றிருக்கிறான். அவன் ஒவ்வொரு நாளும் கேட்கிற இசையின் லயத்திற்கு ஏற்றவாறு மெர்லயன் நீரை உமிழ்வது போலத் தோன்றும்.

“இந்த மெர்லயன் பிறந்ததே இப்படித்தானா இல்ல வளர வளர உருமாறிச்சா?” என்ற கேள்வி அவ்வப்போது மனதில் தோன்றும். பெரியதொரு உருவத்தைக் காணும் மிரட்சிக்கு அப்பாலும் ஏதோவொன்று அவனை மெர்லயனிடம் ஈர்த்தது. அவனை மட்டுமல்ல. அவனது பாட்டியும் சிங்கப்பூர்ப் பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களைப் பார்க்கும்போது, இந்தச் சிங்க முகத்தின் முன் அவள் எடுத்துகொண்ட புகைப்படத்தை மட்டுமே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

படகு மெதுவாக அவ்வுருவத்தை நோக்கி நகர்கையில், பல ஆண்டுகளுக்கு முன், இந்த மெர்லயனே பெயர்த்தெடுக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டதைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது. “நானும் ஒரு மெர்லயன்தானோ?” என்கிற எண்ணம் மனதில் எழ, மின்நருக்கியின் சத்தம் நின்றது. முடிவெட்டுபவள் படகின் ஓரமாகச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள். அமரின் தோள் மீது ஒரு கை. திரும்பினான். 

பெயரற்ற சலூன்காரர். பளிச்சிடும் பஞ்சு சட்டை வேட்டியுடன். நெற்றியில் குங்குமப் பொட்டு மின்ன, அவனைப் பார்த்தார். அமருக்கு வாய் அடைத்துப் போனது. அவர் புன்னகைத்தார். சூரியன் அவன் தோள்களின் மீது கொதித்துக்கொண்டிருக்க முடிவெட்டுபவளை அவருக்கு அறிமுகப்படுத்தினான் அமர். இருவரும் கைகுலுக்கினர்.

“இந்தப் படகுல என்ன பண்றீங்க?” என்று அமர் கேட்டான்.

“ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு கஸ்டமர்…” என அருகில் இன்னொரு பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு தாடிக்காரரைச் சுட்டினார். அவர் கன்னங்களில் ஷேவிங் கிரீம் அப்பிக்கிடந்தது. அடர்த்தியான தாடி. 

“காஞ்சுடப் போவுது,” என்றான் அமர். 

சலூன்காரர் சுத்தமான ஒரு சவரக்கத்தியைக் கையில் ஏந்தியபடி தாடிக்காரரின் பக்கம் சென்றார். முடிவெட்டுபவள் சிகரெட் புகைத்துவிட்டு வந்ததும், அவளிடம் அமரின் மண்டையைச் சுட்டிக்காட்டி, “இன்னும் கொஞ்சம் தண்ணீ தெளிக்கலாம்,” என்றார் சலூன்காரர். அமர் சிரித்தான். 

மெர்லயனின் வாயிலிருந்து விழும் அருவி நதிக்குள் கலக்கும் இடத்தை நோக்கிப் படகு விரைந்துகொண்டிருந்தது. மிக அருகில் வந்துவிட்டது என அமர் இப்போதுதான் கவனித்தான். கொத்து கொத்தாக நீர் விழும் ஒலியையும் மீறி, “பாத்து!” என்று அலறியபடி சலூன்காரரின் பக்கம் திரும்பினான். அவர் சவரம் செய்து முடித்துவிட்டார். சுழற்நாற்காலியில் அவரின் வாடிக்கையாளர் அமர்ந்திருந்தார், மெர்லயனை உற்று நோக்கியபடி. அது யார் என்று பார்த்தான். சிந்துபாத். கறுப்பு வெள்ளை ஓவியங்களில் பார்த்தது போலவே இருந்தான். அதே கூர்மையான மூக்கு, அதே பளிச்சிடும் கண்கள். தாடி மட்டும்தான் இல்லை. அதை சலூன்காரர் தனது கத்தியிலிருந்து துடைத்தெடுத்துகொண்டிருந்தார். 

“நான் உங்க ரசிகன்,” என அமர் சிந்துபாத்திடம் சொல்ல நினைத்தான், ஆனால் கூச்சமாக இருந்தது. 

“எனக்குத் தெரியும்,” என்றான் சிந்துபாத் அமரின் பக்கம் திரும்பி. இப்போது மெர்லயனின் வாயிலிருந்து கொட்டும் நீருக்கு நேர் கீழாக வந்துவிட்டிருந்தனர். அமர் எதிர்பார்த்த அளவிற்கு அருவி கனமாக இல்லை. சடைசடையாக விழுந்த நீர் அமரைத் தொடுகையில் இறகிலிருந்து பிரிந்த சிற்றிழைகள் போலத் தீண்டியது. அவன் முழு உடலையும் நனைக்காமல் தலையை மட்டும் நனைத்தது.

படகு மிதந்துகொண்டே சென்றது. சிந்துபாத் சிரித்தது போலச் சத்தம் கேட்டது. “இப்போ வெட்டலாம்,” என்றபடி சலூன்காரர் காற்றிலிருந்து ஒரு கத்தரியை உருவியெடுத்து முடிவெட்டுபவளிடம் கொடுத்தார். 

திடீரென வானிலை இனிமையானது. சிந்துபாத்திடம் அமர் சொன்னான், “நீங்க தாடிய எடுத்திருக்கக் கூடாது. உங்களுக்குக் கச்சிதமா பொருந்திச்சு.”

சிந்துபாத் மறுப்பதுபோல் தலையசைத்து, “ஒவ்வொரு சாகச பயணத்துக்கும் ஒரு தனி தோரணை!” என அறிவித்தான். கண்ணடித்துவிட்டு நொடிப் பொழுதில் படகிலிருந்து கடலுக்குள் குதித்தான். மெல்லிய சத்தத்துடன் தெறித்த நீர்த் துளிகள் சூரிய ஒளியில் மின்னின. முடிவெட்டுபவள் அவனது நெற்றி முடியை வெட்டுவதற்கு முன்னே வந்தபோது, அமர் முகத்தில் புன்னகை படர்ந்தது. கண்களை மூடிக்கொண்டான்.

ஹேர்கட்டில் அவனுக்கு மிகவும் பிடித்த தருணம் இதுவே. அவன் நெற்றி முடியைப் புருவங்களைத் தொடும் அளவிற்கு வாரிவிட்டு, சில வணங்காமுடிகள் அதையும் தாண்டி நீட்டியிருக்க, கத்தரியின் குளுமையான நுனி அவன் நெற்றியைத் தீண்டி, சரியான தருணத்திற்குக் காத்திருக்கும். இப்போதுதான் முடி வெட்டும் சத்தம் அதிக முறுவலாக இருக்கும். க்-க்-க்-ர்-ர்-ர்-ஸ்-ஸ்-ஸ்-ட்-ட்-ட்…

அமர் கண்களைத் திறந்தபோது மீண்டும் முடிவெட்டும் கடைக்குள் இருந்தான். கண்ணாடி பிம்பத்தில் முடிவெட்டுபவள் இறுதித் திருத்தங்களைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். ஹேர்கட்டின் மெல்லிய தாளம் அவனை மயங்கடிக்க ஒரு போதும் தவறுவதில்லை என்பது புரிந்தது. அமரின் முகத்தைக் காற்றடிக்கும் இயந்திரத்தை வைத்துச் சுத்தம் செய்தபின், மண்டைக்குப் பின் ஒரு கண்ணாடியை வைத்தாள். சுவிட்ச் போட்டாற்போல் அவனது வலது கை போர்த்தியிருந்த துணிக்கு அடியிலிருந்து வெளியே வந்து தலைக்குப் பின்னால் தடவிப்பார்த்தது. இன்னும் சற்றுச் சிறியதாக இருந்தால் பி.டீ மாஸ்டருக்குத் திருப்தியாக இருக்கும். பரவாயில்லை. கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தபோது, புதியதொரு முகம் கண்ணாடிக்குள்ளிருந்து அவனைப் பார்த்தது.

“ஒவ்வொரு சாகசப் பயணத்திற்கும் ஒரு தனி தோரணை!” 

முடிவெட்டுபவளிடம் கட்டை விரலை அமர் உயர்த்திக் காட்டவும், அவள் போர்வையை உதறவும் சரியாக இருந்தது.

பேரங்காடியின் அடிவயிற்றிலிருந்து மேலெழுந்து வரும் மின்படிகளில் தாவி ஏறினான் அமர். அவனுக்குள் நெடுங்காலமாகச் சுருண்டு கிடந்த மயிர் முடிச்சுகளைச் சீவி சீராக்கியது போல் லேசாக உணர்ந்தான். கடலின் ஆழத்திலிருந்த ஒரு துளி மெர்லயனின் வாயிலிருந்து தெறித்து மீண்டும் கடலுக்குள் கலப்பது போல், பேரங்காடியின் வாயிலிருந்து வெளிப்பட்டவன் பச்சைத் தெருவிளக்கைக் கண்டதும் சாலையைக் கடக்கும் கூட்டத்தினுள் புகுந்து கரைந்து போனான்.

Leave a Reply

%d bloggers like this: