செல்வசேகர். அவர் தந்த முகவரி அட்டையில் இந்தப் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. பெயரின் மேல் கருப்பு கோட் அணிந்தபடி புன்னகைக்கும் முகம், வெள்ளை அட்டையில் மேலும் கருப்பாக தெரிந்தது. முதுகுக்குப் பின்னால் பளபளக்கும் கட்டிடங்கள், அவர் செய்யும் தொழிலைத் தெளிவாக காட்ட.

செல்வசேகர் முகவரி அட்டை ஏன் தந்தார் என பாலாவிற்கு புரியவில்லை. அவரின் கைபேசி எண் பாலாவிடம் இருந்தது. வீட்டுக்குச் சென்றதும் தூக்கிப்போட வேண்டும் என மனதில் குறித்துக்கொண்டு, வாலெட்டினுள் சொருகினான். தனது வாலெட் எப்போதும் லேசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்.

“நீங்க ஏதாச்சும் குடிக்கறீங்களா?” செல்வசேகரிடம் கேட்டான்.

“ஒரு கோபி ஓ”

இருவரும் பாலா வீட்டருகே இருக்கும் ஃபுட் கோர்ட்டில் இருந்தனர். வெளியே மழை மேலும் கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. காலி மேஜை ஒன்றில் அமர்ந்திருந்த செல்வசேகர் ஸ்டால்களை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார்.

பாலா தேநீர்க்கடை பக்கம் சென்றான். வாய் திறக்கும் முன்னரே, “ஹல்லோ பிரதர்! ஒன் தே ஓ லீமா பனாஸ்?“ என்று கேட்டார் தேநீர்க் கடை அங்கிள். அவரின் பெயர் பாலாவிற்குத் தெரியாது ஆனால் பாலாவின் பானத்தேர்வு அவருக்கு அத்துப்படி. தனக்குத் தானே முணுமுணுத்துக்கொண்டு பில்லிங் இயந்திரத்தில் தட்ட ஆரம்பித்தார்.

“வாஹ்! ரெயின் வெரி ஹெவி ஆ?” பாலாவின் சட்டை இங்கும் அங்கும் நனைந்ததைப் பார்த்து கேட்டார்.

பாலா தலை அசைத்தபடி, “ஆல்சோ ஒன் கோபி ஓ அங்கிள்” என்றான்.

“யுவர் ஃபிரன்ட் ஆ?” என்று தூரத்தில் அமர்ந்திருந்த செல்வசேகரை சுட்டிக்காட்டிக் கேட்டார். பாலா இல்லை என்று தலை மட்டும் அசைத்துப் புன்னகைத்தான்.

“நீங்க மொத்தம் 5 பேருதானே?” கோபி ஓ குடித்துக்கொண்டே கேட்டார் செல்வசேகர். பருகிடக் குனியும்போது அவரின் சட்டைப் பொத்தான்கள் தெறித்துவிடும் எனும் அளவிற்கு இறுக்கியதை பாலா கவனித்தான். ஒட்டுமொத்தமாகப் பார்க்க அங்கும் இங்கும் உப்பிய பூரி போல இருந்தார் செல்வசேகர்.

“ஆமா நாங்க 5 பேரு. மூணு பெட்ரூம் வீடு தேடுறோம்.”

“எல்லாரும் தமிழவங்களா?”

பாலா யோசித்தான். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மனதிற்குள் விரல்விட்டு எண்ணிவிட்டு, “இல்ல. ஒருத்தர் தெலுங்கு. இன்னொருத்தர் கேரளா. ஆனா எல்லாரும் தமிழ் பேசுவாங்க.”

“எந்த ஏரியால பாக்குறீங்க?”

“க்ரீன் லைன். பர்பிள் லைன். இது இரண்டுல எங்க இருந்தாலும் ஓக்கே.”

“சரி. கவலப்படாதீங்க தம்பி. வீடு ஈஸியா கெடச்சிடும்! இப்போ மார்க்கெட் டவுன்னா இருக்கு. கொறஞ்ச ரெண்ட்டுக்கு நல்ல வீடு பாத்துடலாம்!”

“முதல்ல நாங்களே தேடலாம்னுதான் நெனைச்சோம். ஆனா ரொம்பத் தலைவலியா இருக்கு.”

“அதுக்குதானே நாங்க இருக்கோம்! இன்னும் எவ்வளோ நாள் இந்த வீடு லீஸ் இருக்கு உங்களுக்கு?”

“அது இருக்கு 6 மாசம். ஆனா நாங்க சீக்கிரம் காலி பண்ணலாம்னு இருக்கோம்.”

“ஏன் என்ன ஆச்சு?”

“ஓனர் சரி வரல.”

“சைனீஸ் ஆ?”

பாலா தலை அசைத்தான். அவனின் வலது முழங்கையை ஏதோ கடிப்பதுபோல இருந்தது. சொறிந்ததும் நின்றது.

“சில சீனிவாசங்க அப்படிதான் தம்பி. கறி இன்சிடென்ட் கேள்வி பட்டிருப்பீங்களே?”

பாலாவிற்குப் புரியவில்லை. “சீனிவாசன்?”

செல்வசேகர் இளித்தார். “கோட்வர்ட். எங்க க்ரூப்ல அப்படிதான் சொல்வோம். சீனிவாசன்னு சொன்னா அவங்கள பத்திதான் பேசறோம்னு தெரியாது பாருங்க!”

“ஓ… சைனீஸ்…” பாலா கோப்பையில் மிதக்கும் கலமான்சி பழத்தை எடுத்து வெளியே போட்டான். செல்வசேகரை அவனுக்குப் பிடிக்கவில்லை.

“தம்பி நீங்க பீ.ஆர் ஆ?”

“ஆமா. போன வருஷம் கெடச்சுது. என் நண்பர்கள் எல்லாரும்தான்.”

“பரவா இல்லியே! இப்பெல்லாம் பீ.ஆர் கிடைக்கறதே ரொம்ப கஷ்டம் தம்பி.”

“நாங்க எல்லாரும் என்.யூ.எஸ்ல படிச்சோம். அதுனால இருக்கலாம்.”

“நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க. இங்கயே ஒரு வீடு வாங்கிடுங்க. ஏதாச்சும் கம்யூனிட்டி கிளப் சேர்ந்து உதவி பண்ணுங்க. உங்க ஏரியா எம்.பி கண்ணுக்கு தெரியுற மாதிரி. அப்புறம் சுலபமா சிட்டிசன்ஷிப் கெடச்சிடும்.”

“நீங்க சிங்கப்பூரியன் ஆயிட்டீங்களா?”

“ஆமா!” தடித்த மீசையின் கீழ் அவரின் அனைத்து பற்களும் தெரிந்தன.

“நீங்க வீடு பாத்துட்டு சொல்லுங்க. வியுயிங் ராத்திரி 7 மணிக்கு மேல இருந்தா பெட்டர். வீக்கெண்ட்னா எனி டயம் கேன்! எனக்கு கால் பண்ணுங்க.”

செல்வசேகர் தலை அசைத்தவுடன் அவரின் கைபேசி ஒலித்தது. பாலா கை குலுக்கிவிட்டுக் கிளம்பினான்.

“சீ யூ அங்கிள்!” என்று கோபி கடை அங்கிளை பார்த்து கை அசைத்தான். அவர் வாயில் சிகரெட்டுடன் திரும்பக் கை அசைத்தார்.

***

பாலாவிற்கு இப்போதெல்லாம் வீட்டுக்கு வருவதே பிடிக்கவில்லை. சோபாவில் ஒரு நண்பன் கிடந்தான். தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. தனது அறைக்குள் சென்று கதவை மூடினான். வெறும் தரையில் படுத்தபோது சிலீரென்று இருந்தது.

அவ்வப்போது அறையில் இவ்வாறு தனியாக படுத்திருக்கும்போது, பாலாவிற்கு என்.யூ.எஸ்ஸில் படிப்பை தொடர்ந்திருக்கலாம் என தோன்றும். அங்கு இருந்தவரை தங்குமிடத்திற்குக் கவலை இல்லை. ஹாஸ்டல் இருந்தது. அதில் இடம் கிடைக்க ஏதாவதொரு சி.சி.ஏ செய்யவேண்டும். அவ்வளவுதான். ஆனால் பட்டம் பெற்று, வேலை கிடைத்த பிறகு வீடு தேடுவது அவனுக்கு ஒரு தலைவலியாகவே இருந்தது. ஐந்து பேரின் அலுவலகங்களுக்கும் செல்ல இலகுவாக இருக்கவேண்டும். வாடகை 3000 டாலருக்குள் இருக்கவேண்டும். அருகில் சாப்பிட ஏதாவதொரு இந்தியக்கடை இருக்கவேண்டும். அவ்வப்போது பெற்றோர்கள் வந்து தங்குவதற்கு வீட்டு உரிமையாளர் அனுமதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் எல்லாம் ஒத்துப்போனாலும், “லேடீஸ் ஒன்லி” அல்லது “கப்பிள்ஸ் ஒன்லி” என்ற வாசகம் விளம்பரத்தின் ஓரத்தில் போட்டிருப்பார்கள். அப்படியே போடாவிட்டாலும், கால் செய்து “உங்க விளம்பரம் பார்த்தேன். அந்த வீடு இருக்கா?” என்று கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்கள். “பாலா” என்று சொன்னதும், “சாரி! தட் ஹவுஸ் டேக்கன் ஒரெடி!” என்பார்கள். அது ஏன் பெயரைக் கேட்ட பிறகு “டேக்கன் ஒரெடி” வருகிறது? பாலாவிற்கு ஒரு காரணம் தோன்றும். ஆனால் அதுவாக இருக்காது என்று மனதைத் தேற்றிக்கொள்வான்.

ஏற்கனவே ஒரு வீடு மாறி ஆயிற்று. முதல் வீட்டிலேயே பிரச்சனை. “இந்திய ஹவுஸ் ஓனர்தான். கவலை வேண்டாம்!” என அவர்களின் முகவர் சொன்னான். அவரோ மூக்கால் அழும் பேர்வழி. ஒவ்வொரு மாதமும் வீட்டை வந்து பார்த்துவிட்டு, “பேச்சலர்ஸ் குடி வெச்சது தப்பாப்போச்சு!” என்று புலம்பிவிட்டு வாடகையைக் கவ்விக்கொண்டு செல்வார். இரண்டாவது வீட்டின் உரிமையாளர் சைனீஸ். ஆஸ்திரேலியாவில் இருந்தார். முகம் கூடப் பார்த்ததில்லை. எதுவாக இருந்தாலும் மின்னஞ்சல் மூலம் அல்லது முகவர் மூலம் பேசிக்கொள்வார்கள். வாடகையும் இணையம் வழியாக அனுப்பிவிடுவார்கள். நிம்மதியாக இருந்தது. ஆனால் ஸ்டோர் ரூமிலிருந்த ஒரு மெத்தையை நண்பன் ஒருவன் வெளியே எடுக்க, அதிலிருந்த மூட்டைப்பூச்சிகள் வீடெங்கும் பரவி விட்டன. உடனே வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம். அதனால்தான் செல்வசேகருடன் பேச்சுவார்த்தை.

முதுகு அரிக்க ஆரம்பித்தது. சட்டைக்குள் கையை விட்டுச் சொறிந்தான். விரலால் அமுக்கிப் பார்த்தான். சிறியதாக ஏதோவொன்று நசுங்கியது. விரல் நுனி ஈரமானது. கையை சட்டையிலிருந்து வெளியே எடுத்தான். பரிட்சயமான சிறிய வட்டப் பொட்டாக ரத்தம் விரலில் இருந்தது. அதை கட்டை விரலால் துடைத்தான். இரும்பின் கந்தம் மூக்கிற்கு எட்டியது. ஆரம்பத்தில் இரவு வேளையில்தான் கடித்தன. ஆனால் கடந்த சில நாட்களாக காலை வேளையிலும் துவங்கிவிட்டன. சட்டென்று உருண்டெழுந்து தரையை பார்த்தான். சிறு அசைவுகள் தென்படுகிறதாவென கண்கள் தரையைத் துழாவின.

நாற்காலி அருகே அசைவு தென்பட்டது. தவழ்ந்து சென்றான். சிறிய பொட்டு போலத் தரையில் ஊர்ந்துகொண்டிருந்தது. கூர்ந்து கவனித்தால், இரு வட்டங்களை இணைத்தது போன்ற உடல். சிறிய வட்ட தலை, அதைவிடச் சற்று பெரிய வட்ட உடம்பு. கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இந்த மூட்டைப்பூச்சி சிகப்பும் பழுப்பும் கலந்திருந்தது. ஏன் என்று பாலாவிற்கு தெரியும். சில வினாடிகள் ஆச்சரியத்துடன் அந்த மூட்டைப்பூச்சியைப் பார்த்தான். அதன் உடம்புக்குள் பாலாவின் ரத்தத்தை ஏந்தியபடி மெதுவாக எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. எங்கிருந்து வந்தது? எங்கே செல்கிறது? அவனின் ஆள் காட்டி விரல் அதை நோக்கி நகர்ந்தது.

நசுக்கச் செல்கையில், மூட்டைப்பூச்சியின் நடை பள்ளிப் பருவத்தை நினைவூட்டியது. இதே போல தனது தோள் பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கு நடந்து செல்வான். பள்ளியில் முதன் முதலில் என்.யூ.எஸ்ஸின் விளம்பரம் பார்த்தது ஞாபகம் வந்தது. ஆசிரியரின் மேஜை மீது விரித்திருந்த சிறு புத்தகத்தில் ஒரு புகைப்படம். பச்சை வெளியில், வட்டமாக அமர்ந்திருக்கும் வெவ்வேறு நாட்டை, இனத்தைச் சேர்ந்த மாணவர்கள். எந்தக் கவலையுமில்லாமல் சிரிப்புடன் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருப்பது போல. அந்தப் புகைப்படம்தான் அவனை சிங்கப்பூர் வரவைத்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பச்சைவெளி சிங்கப்பூரில் எங்குள்ளது என பாலாவிற்குத் தெரியவில்லை. கண்டுபிடிக்கவேண்டும். கையில் விளம்பரத்துடன் பச்சை வெளியைத் தேடும் மூட்டைப்பூச்சி போல தன்னைக் கற்பனை செய்துபார்த்தான். நாற்காலியின் காலில் மெல்ல ஊர்ந்துசெல்லும் மூட்டைப்பூச்சி மீது பரிதாபம் ஏற்பட்டது. விரலை மடித்துக்கொண்டான்.

***

“ம்ம் சொல்லுடா” பேருந்தில் ஏறி ஈஸி-லிங்க் அட்டையை தட்டினான். கைபேசியை காதில் வைத்துக்கொண்டே பேருந்தின் மேல் மாடிக்கு ஏறினான்.

“செல்வசேகர் கால் பண்ணிருந்தாரு. ஊட்ரம் பார்க்குல ஒரு வீடு இருக்குன்னு. அது பாக்கப் போயிட்டிருக்கேன்.”

மேல் மாடியை அடைந்ததும், ஆடும் பேருந்தின் கைப்பிடியை இறுகப்பிடித்தபடி, எங்கு அமர்வது என நோட்டம் விட்டான். சீராக அமைக்கப்பட்டிருந்த இருக்கை வரிசைகளில், இருவர் அமரக்கூடிய ஒவ்வொரு இருக்கையிலும் தனி ஒருவராக அமர்ந்திருந்தனர். தனித்தனி தீவுகள் போல. வரிசைகளின் நடுவே நடந்து செல்லும் பாலாவிற்கு, பின் பக்கத்தில் காலி இருக்கை ஒன்று தென்பட்டது. அதை நோக்கி நடந்தான். கடந்து செல்கையில் அதிருப்தியான முகபாவத்துடன் ஒரு முதியவர் அவனையே உற்றுப் பார்த்தார்.

“என்ன ஈ-மெயில்?” இருக்கையில் அமர்ந்து தனது தோள்பையை பக்கத்தில் வைத்துக் கொண்டான். சிலவரிசைகள் முன்னால், ஒரு பிலிப்பினோ பெண் உரத்த குரலில் யாரையோ தொலைபேசியில் திட்டிக்கொண்டிருந்தாள். பாலாவிற்கு தனது நண்பன் சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை. ஒரு காதை விரலால் மூடிக்கேட்டான். நண்பன் சொன்னதைக் கேட்டவுடன் அவனுக்குள் கட்டுண்ட கோபம் அவிழ்ந்தது.

“ஸ்டோர் ரூம்ல இருந்த பெட் லேர்ந்துதான் பெட் பக்ஸ் வந்துச்சுன்னு சொல்ல வேண்டிதானே? அது எப்படிடா நம்மளக் குத்தம் சொல்வாங்க?”

“சரி. இப்போ என்ன வேணுமாம் அவங்களுக்கு?”

“1000 டாலரா? டேய்! அந்தப் பழைய சோபா 100 டாலர் கூட இருக்காதுடா. என்னமோ நாமதான் அவங்க வீட்டைக் கெடுத்த மாதிரி பேசுறாங்க!”

“மச்சி.. நாம கறாரா பேசணும். நம்ம மேல ஒரு தப்பும் இல்ல. நம்ம டெபாசிட் அவங்க முழுசா திருப்பித் தந்தே ஆகணும்.”

“இன்னிக்கு நைட் நான் வீடு பாத்துட்டு வர்றேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஈ-மெயில் அனுப்புவோம்.”

தொலைபேசியைத் துண்டித்தான். எரிச்சல் தலைக்கு ஏறுவது அவனால் உணர முடிந்தது. தலைமேலே குளிர்ந்த காற்றைக் கக்கிக்கொண்டிருக்கும் ஓட்டையை அடைத்தான். பிலிப்பினோ பெண் இன்னும் கத்திக்கொண்டிருந்தாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். ஒரு பெட்ரோல் பங்க் கடந்து பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பங்க் வாசலில் காற்றால் ஆன ஒரு பொம்மை நின்றுகொண்டிருந்தது. மனிதன் போல, தொப்பி அணிந்து, முகத்தில் புன்னகையுடன். அதனுள் காற்று ஊதப்பட்டு, ஒரு கையை மட்டும் ஆட்டிக்கொண்டு “வாருங்கள்! வாருங்கள்!” என்று அனைவரையும் அழைப்பது போல. “இப்படி கூப்பிட்டப்புறம் பெட்ரோல் தீந்து போனா என்ன செய்வாங்க?” என்று தோன்றியதும் பாலாவிற்குச் சிரிப்பு வந்தது.

பங்கிலிருந்து சிறிது தூரத்தில் விநாயகர் கோவில் தென்பட்டது. சிகப்பு பொத்தானை அழுத்திவிட்டு, பையை மாட்டிக்கொண்டு எழுந்தான். பொத்தானை அழுத்திய சத்தம் கேட்காதவாறு பிலிப்பினோ பெண் பேசிக்கொண்டிருந்தாள். பேருந்து வேகம் பிடித்ததில் சற்றுத் தள்ளாடியது. கைப்பிடியைப் பிடித்தான். அவன் வைத்திருந்த தோல் பை அருகில் அமர்ந்திருந்த முதியவரை உரசியது. அவர் சிடுசிடுத்து அவனை முறைத்தார். அவரைக் கவனிக்காமல், பாலா கீழே இறங்கினான். முதியவர் அதே அதிருப்தியான முகபாவத்துடன் பாலா சென்ற திசையையே பார்த்தார்.

***

அவசரமாக எம்.ஆர்.டியில் நுழைந்தான் பாலா. இரவு 7 மணி. வேலை முடித்த களைப்பு கண்களைக் கவ்விக்கொண்டிருந்தது. செவிபேசிகள் மாட்டி காதுகளை பாட்டால் நிரப்பிக்கொண்டான். ஊட்ரம் பார்க் வீடு சரிவரவில்லை. வாடகை குறைக்க முடியாது என்றுவிட்டார் வீட்டு உரிமையாளர். இன்று லிட்டில் இந்தியாவில் ஒரு வீடு காண்பதற்கு செல்வசேகர் ஏற்பாடு செய்திருந்தார். அவரின் மீசை அவனை உறுத்தினாலும், விரைவாகப் பல வீடுகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பாலாவிற்கு பிடித்திருந்தது.

அன்று மதியம் உணவு இடைவேளையின்போது அலுவலகத்திலும் வீடு பற்றிய பேச்சுதான். சக ஊழியர் ஒருவர் செங்காங்கில் வீடு மாறிருப்பதாகவும், குறைந்த வாடகைக்குக் கிடைத்ததாகவும், வீட்டு உரிமையாளரை நேரடியாக அணுகியதால் ஏஜென்ட் கமிஷன் கட்டாமல் தப்பித்ததாகவும் பூரிப்புடன் சொன்னார். அதைத்தொடர்ந்து வழக்கமான கேள்விகள். “வீடு வாடகை எவ்வளோ? அங்கேர்ந்து ஆபீஸ் வர எவ்வளவு நேரம் ஆகுது? எச்.டி.பி வீடா காண்டோவா?” பாலாவிற்கு அலுப்பாக இருந்தது. புதிதாக சிங்கப்பூரில் யாரைச் சந்தித்தாலும், விடைபெறும் நேரத்தில் இந்தத் தேவை இல்லாத கேள்விகள் மீண்டும் மீண்டும் தோன்றின. “எங்க தங்கியிருக்கீங்க? அங்க ரெண்ட் எவ்வளோ?”

நிமிர்ந்து பார்த்தான். அகலமான கருப்புத்திரையில் மின் எழுத்துக்கள் அடுத்த நிறுத்தம் சைனாடவுன் என அறிவித்து நகர்ந்தன.

பாடலின் ஓசை சற்றுத் தணியும்போது, ஏதோவொரு சலசலப்பு கேட்டுத் திரும்பினான். இடது பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயது ஆசாமி, கோபமாகக் கத்திக்கொண்டிருந்தான். காற்றில் பறந்துவிடும் அளவிற்கு ஒல்லியான உடல். கட்டம் போட்ட சட்டை. பற்களில் பல நாட்கள் புகைபிடித்த கறை. கைகளை இங்கும் அங்கும் ஆட்டிக்கொண்டிருந்தான். காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டை நிறுத்தினான் பாலா.

ஆசாமி திட்டிக்கொண்டிருந்தது முதியவர்களுக்கான சீட்டில் தலையைச் சாய்த்தவாறு அமர்ந்திருந்த ஒரு கட்டிடத் தொழிலாளியை. தொழிலாளி பார்ப்பதற்கு பங்களாதேஷ்காரன் போல இருந்தான். சில சாமான்களுடன் ஒரு பிளாஸ்டிக் முஸ்தப்பா கவர் கையிலிருந்து தொங்கியது. வண்ணம் மங்கிய பச்சை சட்டை, பலமுறை போட்டுத் துவைத்த நிறத்தில் ஒரு ஜீன்ஸ்பேண்ட். சிமெண்ட் கறை படிந்த பூட்ஸ். இருக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் கண்ணாடியில் தலை சாய்த்து கண் மூடியிருந்தான்.

அந்தத் தொழிலாளியை பக்கத்தில் இருந்தவர் ஒரு விரலால் தொட்டு எழுப்பினார். அவன் முழித்ததும், இந்த ஆசாமி ஆங்கிலமும் மேன்டரினும் கலந்து புலம்பிக் கொண்டே இருப்பதைக் கவனித்தான். கத்தும் ஆசாமியின் சைகைகள் மூலம், “ஏன்டா முதியவர்களுக்கான சீட்டுல உட்கார்ந்துட்டு இருக்க?” என்பதுதான் சாராம்சம் எனப் புரிந்துகொண்டு எழுந்து நின்றான். அந்த சீட்டில் உட்காருவதற்கு முதியவர்கள் யாருமில்லை. ஆனாலும் ஒல்லி ஆசாமியின் திட்டு குறையவில்லை.

சிறிது நேரம் மெளனமாக இருப்பான். பின்னர் திரும்ப அந்தக் கட்டட தொழிலாளியைப் பார்த்துத் திட்டுவான். அவ்வப்போது தூரத்தில் நிற்கும் சிலர் திரும்பி என்ன சத்தம் என்று பார்த்தனர். ஆனால் ஆசாமியின் பக்கத்தில் நின்றவர்கள் எதையுமே கவனிக்காதவாறு வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர். ஓரிருவர் சற்று தள்ளிப் போய் நின்றனர்.

கட்டிட தொழிலாளி பயந்துவிட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் நின்றிருந்த பாணி, கிட்டத்தட்ட பாலாவின் பின்னால் ஒளிருந்திருப்பது போலிருந்தது. பாலாவின் காதில் இயர்ஃபோன் இருந்தது, ஆனால் பாட்டுக் கேட்காமல் அந்த ஆசாமி பேசுவதைக் கூர்ந்து கவனித்தான்.

அந்த ஆசாமி இப்போது முழுமையாக ஆங்கிலத்தில் திட்டினான். “உன்னால ரூல்ஸ் கடை பிடிக்க முடியல? அந்த சீட்டு முதியவர்களுக்குன்னு உனக்குத் தெரியல? யூ காட் நோ ஐஸ் ஆர் வாட்? எங்க வேணும்னாலும் உட்கார இது என்ன உன் வீடா? ரூல்ஸ் கடை பிடிக்க முடியலென்னா, உன் சொந்த ஊருக்கே ஓடிப்போ! கோ பேக் டு யுவர் கன்ட்ரி!! என்ன முறைக்கிற? அடிக்கப் போறியா? வா வந்து அடி! உன்னையெல்லாம் வீடியோ பிடிச்சு இன்டர்நெட்ல போடணும். இரு…”

பாக்கெட்டிலிருந்து கைபேசியை வெளியே எடுத்தான். தொழிலாளி பாலாவின் பின்னால் மறைந்து கொண்டான். பாலா ஆசாமியை முறைத்தான். தன்னை திட்டுவதுபோல் ஏனோ திடீரென தோன்றியது. கைப்பிடியை இறுகப் பிடித்தான்.

“பேஸ்புக்ல வந்தா என்ன ஆகும் தெரியுமா? நீ பாரு! நாளைக்கு இது நியூஸ்ல வரும் பார்!” கைபேசியை அவன் முன்னால் பிடித்தபடி கத்தினான் ஆசாமி.

தோபி காட் ஸ்டேஷன் வந்தது. கதவுகள் திறந்தவுடன் ஆசாமி சற்று மௌனமானான். உள்ளே நுழைந்தவர்களில் ஒரு இளம் சீனப் பெண், காலியாக இருந்த அந்த முதியவர்கள் சீட்டில் அமர்ந்தாள். ஆசாமி எதுவும் பேசவில்லை.

பாலா தோபி காட்டிலேயே விடுக்கென இறங்கி விட்டான். எம்.ஆர்.டி கதவுகள் மூடிய பின்னரும், அவன் பிடித்திருந்த முக்கோண கைப்பிடி மட்டும் சில வினாடிகள் ஆடிக்கொண்டிருந்தது.

***

பல நாட்கள் கழித்து பாலாவின் அறை காலியாக இருந்தது. அறையின் நடுவில் நீல நிற பயணப்பெட்டி மட்டும் நின்றிருந்தது. தனது சகல சாமான்களும் அதனுள் அடங்கியதில் பாலாவிற்கு ஆச்சரியம். முதல் முதலாகச் சிங்கப்பூர் வரும்போது சென்னை விமான நிலையத்தில் நண்பனின் தந்தை சொன்னது இன்றும் ஞாபகம் இருந்தது. “பாலா எவ்வளோ சமத்து பாரு. ஒரே பெட்டிதான் எல்லாச் சாமானுக்கும். நீயும் இருக்கியே!” எனத் தனது பிள்ளையைத் திட்டினார். அவர் சொன்னதாலோ என்னவோ, பாலாவிடம் இந்தவொரு பெட்டியில் அடங்கும் அளவிற்கு அதிகமாகப் பொருள் சேர்ந்ததே இல்லை. பெருமையுடன் அறை ஜன்னலைச் சாத்தினான். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. சாமான்களை நகர்த்தும் வண்டி சரியான நேரத்திற்கு வருமா என்ற சந்தேகம் எழுந்தது.

“ட்ரக் வர எவ்வளோ நேரம் ஆகும்டா?” என நண்பனைக் கேட்டான். அவன் கைபேசியை நோண்டிவிட்டு, “15 நிமிஷம்” என்றான். ஏதாவது பொருட்களை மறந்து வைத்துவிட்டோமா என்று அறையை நோட்டம் விட்டான். ஏனோ தனது அறை போலவே மனதும் காலியாக உணர்ந்தான். கடந்த சிலநாட்களாகக் கோபம் கொப்பளிக்கும் பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள். மூட்டைப்பூச்சி வர யார் காரணம் என்ற விவாதம். இறுதியில் குறிப்பிட்ட தொகை டெபாசிட்டிலிருந்து கழித்துக்கொள்ள ஒத்துக்கொண்டனர். பாலாவிற்கு உடலெங்கும் சோர்வாக இருந்தது. அடுத்து செல்லும் லிட்டில் இந்தியா வீட்டில் என்ன நடக்குமோ? செல்வசேகர் சொன்னதுபோல சொந்த வீடு வாங்கினால் நிம்மதியாக இருக்குமா? ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான். இருட்டியிருந்தது. மதியம் போல இல்லாமல் மாலை போல இருந்தது. லேசாக மூச்சு முட்டியது.

“சரி, நான் கீழ காபி ஷாப்ல இருக்கேன்டா”

சிற்றங்காடியின் வழவழப்பான வாசல் தரையை கவனமாகக் கடந்து நடந்தான். ஒரு காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டிருந்த பெண் அவசர அவசரமாக ஈரமாகும் சில அட்டைப்பெட்டிகளைக் கடைக்குள் நகர்த்திக்கொண்டிருந்தாள். காலி அட்டைப்பெட்டி ஒன்று முழுமையாக மழையில் நனைந்து கரைந்துகொண்டிருந்தது. கொஞ்சம் விட்டால் எழுந்து நின்றுவிடுமோ என்ற பதற்றத்தில் மழை அந்த அட்டையைச் சரமாரியாக அடித்துத் தின்றது.

“ஹெல்லோ பிரதர்! தே ஓ லீமா… ” என்றபடி அங்கிள் திரையில் தட்டத்துவங்கினார். அவர் இன்னொரு கையில் சிகரெட் வைத்திருந்ததை பாலா கவனித்தான்.

“அங்கிள் கேன்சல் தே ஓ லிமா”

“ஓக்கே! வாட் யூ வாண்ட்?”

“ஒன் சிகரெட் கேன்?”

இருவரும் ஃபுட் கோர்ட் ஓரமாக, மழையின் விளிம்பில் நின்று சிகரெட் பற்றவைத்தனர். அங்கிளின் ஸ்டைல் அவனுக்குப் பிடித்திருந்தது. சிலசமயம் அவன் கவனித்ததுண்டு. ஸ்டாலில் இருக்கும்போதே வாயில் சிகரெட் வைத்துக்கொள்வார். பிறகு இரு கைகளையும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஃபுட் கோர்ட் ஓரமாக நடந்து செல்வார். அங்கு சென்றபிறகு, பாக்கெட்டிலிருந்து லைட்டர் எடுத்துப் பற்றவைப்பார். அதையே இன்றும் செய்தார்.

“ஏன் அப்படி பண்ணுறீங்க?”

“வெறும் சிகரெட்டோட டேஸ்ட் பிடிக்கும்” என்றபடி மழைக்குள் புகை ஊதினார். பாலாவும் இழுத்து இரண்டுமுறை ஊதினான். கடைசியாக என்.யூ.எஸ்ஸில் புகை பிடித்த நினைவுகள் வந்துசென்றன. உள்ளிழுத்த புகை வெற்றிடத்தைத் தற்காலிகமாக நிரப்பியது. வார்த்தைகளால் சொல்ல முடியாத எண்ணங்களை ஏந்திக்கொண்டு அந்தப் புகை வெளிவந்தது. வெளிவரும் புகையை அமுக்க, மழை வேகமாகப் பொழிந்தாலும், அதன் இடுக்குகளில் நுழைந்து புகை தப்பியது. அதைப் பார்த்த பாலாவின் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

அங்கிள் ஏதோவொரு பாட்டு விசில் அடிக்க ஆரம்பித்தார். தாளத்துக்கு ஏற்ப விரலைச் சொடுக்கினார். புகை ஊதினார். பாலா ஃபுட் கோர்ட்டைப் பார்த்தான். சலசலப்புடன் விரைந்துகொண்டிருந்த உருவங்கள், உரசிக்கொள்ளும் பீங்கான் தட்டுகள். எதிரே ஆள் அரவமற்ற நடைபாதைகளுடன் நிற்கும் கட்டிடங்கள். வாய்ட் டெக்கில் மழையை வெறித்து பார்த்தபடி சக்கர நாற்காலிகளில் முடங்கியிருக்கும் முதியவர்கள். யாரும் அந்தப் பாட்டை கவனிக்கவில்லை. தனக்கென பிரத்தியேகமாக ஒலிக்கும் பாடல். அந்தப் பாடல் ஏனோ அவன் மனதில் துக்கத்தை நிரப்பியது. அங்கிளைப் பார்த்தான். பாதி புகைத்துக் கசக்கிய சிகரெட் போன்ற உடல். அவரின் முகத்திலும் கைகளிலும் சுருக்கங்கள். பல வண்ணம் கொண்ட தலைமுடி ஐஸ் கச்சாங்கை நினைவூட்டியது. பாலா மீண்டும் புன்னகைத்தான்.

“இன்னிக்கு வீடு காலி பண்ணுறேன் அங்கிள். வேற வீட்டுக்கு போறோம்” என்றான்.

“ஓ… எந்த ஏரியா?” என்றார் திரும்பி பார்க்காமல்.

“லிட்டில் இந்தியா”

“குட் குட். ரெண்ட் ஹவ் மச் ஆ?” புகை ஊதிக்கொண்டே கேட்டார். பாலாவிற்கு ஏனோ சிகரெட்டால் சுட்டது போல இருந்தது. அங்கிளிடம் என்ன பதில் எதிர்பார்த்தான் எனத் தெரியவில்லை. ஆனால் அவன் எதிர்பார்த்தது ஏதோ கிடைக்காதது போல உணர்ந்தான். புகையால் மூச்சு முட்டியது. சிகரெட்டை கீழே தேங்கிக்கொண்டிருக்கும் நீரில் வீசினான்.

“தேங்க்ஸ் ஃபார் தி ஸ்மோக் அங்கிள்” என்று மட்டும் சொன்னான். தூரத்தில் ட்ரக் வருவது தெரிந்தது. அதைச் சுட்டிக்காட்டி நான் கிளம்புகிறேன் என்றபடி சைகை செய்தான்.

அவர் விசில் அடித்துக்கொண்டே கை அசைத்தார். பாலாவின் நண்பர்கள் பெட்டிகளைக் கீழே இறக்கிவிட்டார்கள். அவனுடைய நீலநிறப் பெட்டி தென்பட்டது. தூரத்திலிருந்து பார்க்கும்போது மிகவும் சிறியதாக தோன்றியது. “இவ்வளவு சின்னதா என் பெட்டி?”

அதை நோக்கி பாலா ஓடினான். மழையில் நனைந்துகொண்டே. மழைத்துளிகள் யாவும் சிறுசிறு ஊசிகளாக அவன் தோள்களையும் தலையையும் குத்தின. தலையைக் கவிழ்த்தபடி பெட்டியை நோக்கி ஓடினான். நெருங்க நெருங்கப் பெட்டி பெரிதானது. மூச்சிறைக்க அதன் ஜிப்பை இழுத்துத் திறந்தான். உள்ளே அவனுடைய சகல சாமான்களும் அடுக்கப்பட்டு இரு பெல்ட்டுகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்தன. கையால் உள்ளே துழாவினான். மழையின் வேகம் கூடியது. ஒவ்வொரு நீர்த்துளியும் அவனைத் தொட்டவுடன் மூட்டைப்பூச்சியாக மாறிக் கடித்தது. அட்டைப்பெட்டிபோல தனது தேகம் கரைவதை உணர்ந்தான். பெட்டிக்குள் முழுக்கையையும் நுழைத்தான். ஒரு காலையும் உள்ளே வைத்தான். சற்று குனிந்து தலையையும் நுழைத்தான். பெட்டியில் இன்னும் இடம் இருந்தது. சாமான்களை நகர்த்தி மற்றொரு காலையும் மடித்துக்கொண்டு, இன்னொரு கையால் பெட்டியின் மூடியை இழுத்தான். கச்சிதமாக மூடிக்கொண்டதில் ஆச்சரியம். மழையின் சப்தம் நின்று போனது. இருட்டில் நஃப்தலீன் உருண்டைகளின் நெடி வரவேற்றது. வளைந்து மடங்கிய அவன் உடலை பெட்டிக்குள்ளிருந்த சாமான்கள் கட்டி அணைத்துக்கொண்டன. கதகதப்பாக இருந்தது.


இக்கதை பிப்ரவரி 2017இல் வல்லினம் இணைய இதழில் வெளியானது.

Leave a Reply

%d bloggers like this: