வால்மீகியும் கம்பரும் தாடகை வதமும்

அ.கி.வரதராஜன் ஐயாவின் வகுப்பில், தாடகை வதை படலம் கற்றபின், வால்மீகி இதே சழக்கியின் வதத்தை எவ்வாறு எழுதியிருப்பார் என்ற கேள்வி தோன்றியது.

வால்மீகி ராமாயணத்தில் தாடகையை வதம் செய்ய வேண்டும் என அவளைச் சந்திக்கும் முன்னரே விசுவாமித்திரர் ராமனிடம் சொல்லி விடுகிறார்.

स्व बाहु बलम् आश्रित्य जहि इमाम् दुष्ट चारिणीम् || १-२४-३०
मत् नियोगात् इमम् देशम् कुरु निष्कण्टकम् पुनः |
Depending upon the strength of your own self-confidence you have to eradicate this evildoer, and assigned by me you have to make this province free from thorniness

Source: http://www.valmikiramayan.net/utf8/baala/sarga24/bala_24_frame.htm

அது மட்டுமில்லாமல், இதுவரை பெண்களை கொன்ற மகாபுருஷர்களின் உதாரணங்களையும் தருகிறார். இந்திரன் மந்தாரையைக் கொன்றது, விஷ்ணு பிருகு மற்றும் சுக்ராச்சாரியாரின் மனைவியைக் கொன்றது என உதாரணங்கள் கொடுத்து, தீங்கு செய்யும் பெண்களைக் கொன்றிருக்கிறார்கள் என எடுத்துச் சொல்கிறார்.

श्रूयते हि पुरा शक्रो विरोचन सुताम् नृप |
पृथिवीम् हन्तुम् इच्छन्तीम् मन्थराम् अभ्यसूदयत् || १-२५-२०
Oh, Rama, the protector of people, we have heard that Indra once eliminated Manthara, the daughter of Virochana, when she wished to annihilate earth, haven’t we.

विष्णुना च पुरा राम भृगु पत्नी पतिव्रता |
अनिन्द्रम् लोकम् इच्छन्ती काव्यमाता निषूदिता || १-२५-२१
And Rama, once Vishnu wiped out even the wife of sage Bhrigu and sage Shukracarya’s mother when she wished the world to become one without a governing factor, namely Indra.

image

வால்மீகியின் தாடகையிடம் மாய சக்திகள் உள்ளன. அதை வைத்து தூசிப்புயலை கிளப்புகிறாள். கற்களின் மழையைச் செலுத்துகிறாள். ராமன் அவளின் இரு கைகளையும் அம்பால் கொய்கிறான். அவள் பெண் என்பதால் முடிந்தளவு கொல்லாமலிருக்க முனைகிறான். இலக்குவன் அவளின் காதுகளையும் மூக்கையும் அறுக்கிறான். (இலக்குவனுக்கு மூக்கை வெட்டுவதில் அப்படி என்னவொரு ஆனந்தம் எனப் புரியவில்லை!) பிறகு தாடகை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து அவர்களைத் தாக்குகிறாள். விசுவாமித்திரர் பொறுமையிழந்து “போதும் ராமா! பெண் எனப் பார்க்காதே. அவள் கொடியவள். யாகங்களுக்கு இடையூறு செய்பவள். இருட்டுவதற்கு முன் அவளைக் கொல்ல வேண்டும். கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். இருட்டியபின் அரக்கர்களை வீழ்த்த முடியாது.” இவ்வாறு இரண்டாவது முறை விசுவாமித்திரர் சொன்ன பிறகு தான் ராமன் அம்பு எய்து தாடகையை கொல்கிறான். அவனின் அம்பு இடியின் வேகத்தில் அவளைத் தாக்குகிறது. தாடகை வீழ்கிறாள். இந்திரன் உட்பட வானுலகத்தார் ராமனைப் பாராட்டுகின்றனர். விசுவாமித்திரர் ராமனின் நெற்றியில் முத்தமிடுகிறார்.

இதே தாடகை வதத்தை கம்பன் அணுகும் முறையில் 4 முக்கிய வித்தியாசங்கள்.

  1. கம்பரின் விசுவாமித்திரர் தாடகையை கொல் என ஒரு முறை மட்டுமே சொல்கிறார். இரண்டு முறை அல்ல. விசுவாமித்திரரின் பேச்சுக்கு மறுபேச்சில்லை என்பது போல ஒரு முறை அவர் சொன்னதும், அறமாக இல்லாவிடிலும் நான் வேதமாக எடுத்துக்கொண்டு செய்வேன் என ராமன் அம்பு எய்கிறான். வால்மீகி ராமன் போல அவளைக் கொல்லென்று சொன்ன பின்பும் கை கால்களை வெட்டி நேர விரயம் செய்யவில்லை.
  2. கம்பரின் தாடகை எல்லா உயிரினங்களையும் உட்கொள்ள வேண்டும் என்ற வெறியுடையவள் மட்டுமே. அவளிடம் மாய சக்திகள் ஏதுமில்லை. அவள் மறைந்து தாக்கி ராமனுக்கு வித்தைகள் எதுவும் காட்டவில்லை. கம்பரின் ராமன் சுலபமாக அவளைக் கொன்றுவிடுகிறான். அம்பு எய்ததையும் யாரும் பார்க்கவில்லை, வில்லை வளைத்ததையும் யாரும் பார்க்கவில்லை, அவளின் சூலம் மட்டும் உதிர்ந்து கிடந்ததை பார்த்தனர். இது ராமனின் வலிமையை மேலும் உயர்த்துகிறது. தாடகை ராமனின் ஒரு முடியைக்கூட அசைக்கவில்லை என்பது போல.
  3. கம்பர் பெண்களை கொன்ற மாமனிதர்களைப் பட்டியலிடவில்லை. தாடகை பெண்ணே அல்ல என்றே வாதிடுகிறார். வால்மீகியைப் பொறுத்தவரை தவறு செய்தது யாராக இருந்தாலும், பெண்ணோ ஆணோ, அவரைக் கொல்லலாம். கம்பரைப் பொறுத்தவரை “எண் உருத் தெரிவு அரும்” பாவத்தை செய்பவள் பெண்ணே அல்ல. “பெண்ணை கொல்” என கம்பர் சொல்லவில்லை. இதைக் கலாச்சார வேறுபாடாகக் கூட பார்க்கலாம்.
  4. கம்பர் தாடகை வதத்தில் இலக்குவனுக்கு வேலையே தரவில்லை. படையப்பா படத்தில் அப்பாஸ் போல வேடிக்கை மட்டும் பார்க்கிறான். இது நல்ல விஷயம் தான். தாடகை வதத்தின் முழு கவனம் ராமன் மீதே குவிகிறது. “சைட் கேரக்டராக மூக்கையும் காதையும் வெட்டுவதற்குப் பதிலாக, நீ சும்மாவே இரு!” என்று கம்பன் இலக்குவனிடம் சொல்லியிருக்கலாம்.

கம்பனை உவமைகளின் சரணாலயமாகவே பார்க்கிறேன். இடியின் வேகத்தில் ராமனின் அம்பு சென்றது என வால்மீகி சொன்னால், அதையும் தாண்டி சென்று, கொடிய மூடன் காதில் விழுந்த நல்லோர் சொல்லின் பொருள் போல அம்பு போயிற்று எனச் சொல்கிறார். சிறிது நேரத்தில் இருட்டி விடும் என வால்மீகியின் விசுவாமித்திரர் சொல்கிறார். ஆகவே தாடகை வதம் அந்தி மாலை நேரத்தில் நடக்கிறது. இருட்டியதும் கொல்லமுடியாது என்றெல்லாம் கம்பன் சொல்லாமல், அந்தி மாலையைக் அழகியதோர் உவமைக்குப் பயன்படுத்துகிறார். அந்திமாலையின் சிவந்த வானம் ஒடிந்து தரையில் விழுந்தது போல இருந்தது, ரத்தம் ஒழுகி தாடகை கிடந்த காட்சி என ஒரு போடு போடுகிறார்.

பாடல் 391

கான் திரிந்து ஆழி ஆகத்
  தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு
  ஒழுகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம்
  ஆயினது – அந்த மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு
  அற்று வீழ்ந்தது ஒத்தே!

வால்மீகி பயன்படுத்திய இடியையும் ஓர் இடத்தில் கம்பன் கொண்டுவருகிறார். ஆனால் ராமனின் அம்பிற்கு அந்த உவமையைப் பயன்படுத்தாமல், தாடகை வீழ்ந்ததற்குப் பயன்படுத்துகிறார்.

பாடல் 389
பொன் நெடுங் குன்றம் அன்னான். புகர்
  முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று
  அடித்தலும். – இடித்து. வானில்
கல் நெடு மாரி பெய்யக்
  கடையுகத்து எழுந்த மேகம்.
மின்னொடும் அசனியோடும்
  வீழ்வதே போல – வீழ்ந்தாள்.

தாடகையின் அழிவையும் கம்பர் சும்மா விட்டுவிடவில்லை. ராவணன் மரணத்திற்கு அறிகுறியாக வைத்திருக்கிறார். இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை.

தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு. அந் நாள்.
  முந்தி உற்பாதம் ஆக.

image

இவற்றை வைத்துப் பார்க்கும் போது, தேவையில்லாத இடங்களை வெட்டியும், முக்கியமான இடங்களை விரித்துச் சொல்லியும், கம்பர் வால்மீகியின் ராமாயணத்தை ஒரு படி மேலே எடுத்துச் செல்ல நினைத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே விரிந்திருக்கும் ராமாயண காப்பியத்தில் எங்கெல்லாம் புகமுடியுமோ அங்கெல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார். கம்பர் கையில் வால்மீகி ராமாயணம் ஒரு வரைபடம் போல. அந்த வரைபடத்தில் உள்ள எல்லா பாதைகளையும், நுணுக்குகளையும் தொட்டுவிடவேண்டும் என்ற வேட்கையோடு எழுதியதாகத் தோன்றுகிறது.

“கம்பனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு காரணமிருக்கும். ஏன் இந்த வார்த்தை, ஏன் வேறொரு வார்த்தை இல்லை, எனக் கேள்விகள் எழுப்பினால், கம்பனை மேலும் ரசிக்கலாம்!” வரதராஜன் அய்யா அடிக்கடி சொல்வது இது. அது போல கம்பனின் ஒவ்வொரு விளியும் ஏன் பயன்படுத்துகிறார் என்ற கேள்வி எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு விளி வருவதற்கு ஆழமான காரணம் இருக்குமோ என யோசிக்கத் தூண்டுகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

“கரிய செம்மல்”

ராவணனும் பல அசுரர்களும் பிற்பாடு சாகப் போகிறார்கள் என்ற முன்னறிவிப்பைப் பார்த்தோம். இது பின்னறிவிப்பு. கையடை படலத்தில் பாடல் 324ல் “நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று விசுவாமித்திரர் தசரதனை கேட்கிறார். அவர் கேட்ட காரியம் நிறைவேறிய இடத்தில் கம்பர் ராமனைக் கரிய செம்மல் என்றழைக்கிறார். ஆக கையடை படலத்தில் ராமன் முனிவரோடு செல்லும் போது அவன் கரிய செம்மல் அல்ல. தாடகையை வதம் செய்த பிறகு தான் ராமன் கரிய செம்மல் ஆகிறான் என்று கம்பர் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

“காகுத்தன்”

இந்திரன் காளையாகிச் சுமக்க – அரக்கர்களை வென்று இந்திரனுடைய ஆட்சியை  மீட்டுக்  கொடுத்த  சூரியகுலத்து  மன்னன் தான் காகுத்தன் (மறுபெயர் புரஞ்சயன்). காகுத்தனின் வம்சாவளியில் வந்ததால் ராமனை “காகுத்தன்” என அழைக்கிறார் கம்பர் என்று வெறுமனே சொல்லலாம். காகுத்தன் அசுரர்களைக் கொன்ற அரசன். ராமனும் தற்போது கன்னிப் போரில் ஒரு அரக்கியைக் கொன்றதால், அத்தருணத்தில் காகுத்தனுக்கு இணையாவதினால் தான் அங்கு “காகுத்தன்” என அழைக்கப்பட்டானோ?

“கங்கை தீம்புனல் நாடன்”

இதுவும் இன்னொரு அழகிய விளி. மேலோட்டமாகப் பார்த்தால், “இனிய நீர் கொண்ட கங்கை ஓடும் கோசல நாட்டிலிருந்து வந்தவனே” என்பது தான் பொருள். எதற்காக இந்த இடத்தில் கங்கையை குறிப்பிடவேண்டும். இந்த வரி இடம் பெரும் பாடலைப் பார்ப்போம்.

பாடல் 384
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை. அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா.
செங் கைச் சூல வெந் தீயினை. தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.

எங்கும் தீ! தாடகையின் கண்களில் தீ. அவளே தீயின் உருவம். அவள் வீசும் அஸ்திரத்தில் தீ. ஆனால் எந்த தீயும் ராமனை ஒன்றும் செய்யாது என்பது அவனைச் சுட்டும் விளியிலேயே தெளிவாகி விடுகிறது. அவன் கங்கை தீம்புனல் நாடன். தாடகை ஏவிய தீ அவனுள் நுழைந்தாலும் அவிந்துவிடும் என்பதைக் கம்பர் மறைமுகமாகச் சொல்கிறார்.

“கண்ணின் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!”

ராமனின் தோள்களை பார்த்தால் ஆண்களுக்கும் பெண்ணாக பிறக்க வேண்டும் என்று தோன்றுமாம். யோசித்துப் பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தாலும், இந்த விளி ஏன் இந்த இடத்தில் தேவை? தாடகையை வர்ணித்துக் கொண்டிருக்கும் முனிவர் எதற்கு திடீரென்று ராமனின் தோள்களை பற்றிப் பேச வேண்டும்?

இதன் பதில் முந்தைய பாடலில் இருக்கிறது. “பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்”. பாவங்கள் எல்லாம் பெண் உருவம் கொண்டு திரிபவள் தாடகை. ஆண்களெல்லாம் பார்த்தவுடன் பெண்ணாக மாறவேண்டும் என்ற உருவம் கொண்டவன் ராமன். இவ்விருவரும் எதிர்மறைகள். பெண்களும் சரி ஆண்களும் சரி ராமனைக் கண்டால் அவனின் அழகில் மயங்கி அவனைச் சேர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதற்கு எதிர் மாறாகத் தாடகையோ காண்பதெல்லாம் அவளை வந்துசேர வேண்டும் என்று நினைக்கிறாள். “நாற்றம் கேட்டதும் தின்ன நயக்கிறாள்”. இந்த வித்தியாசமே அவளை “சழக்கி” யாகவும் ராமனை “கரிய செம்மல்” ஆகவும் ஆக்குகிறது.

“மைந்த”

பாடல் 365
‘முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்; மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்’ என்றான்

image

இந்தப் பாடலில் முனிவர் ராமனை “மைந்த” என்றழைப்பதில் பெரிதாக ஒன்றுமில்லை எனத் தோன்றலாம். இத்தருணத்தில் எதற்காக “தயரதனின் மைந்தனே” என்றழைக்க வேண்டும்? இதற்கு நாம் அரசியற் படலத்தில் பாடல் 177 பார்ப்போம்.

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.

உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தனது உடலுள் வைத்துக் காக்கும் அரசன் தயரதன் எனத் தெளிவாக கம்பர் நிறுவுகிறார். “அப்படிப்பட்ட தயரதனின் மகனே! இந்த அரக்கி எல்லா உயிர்களையும் தனது உணவெனக் கருதுகிறாள்” என்று விசுவாமித்திரர் சொல்கிறார். “அவளைக் கொல்” என்ற செய்தி இந்த வரியில்தான் மறைமுகமாக இருப்பதாக நினைக்கிறேன். முனிவர் இவ்வாறு சொன்னதை வைத்துத் தான் ராமனுக்கு “முனிவற்கு அது கருத்து எனினும்” என்று தோன்றுகிறது. ஒரேயொரு வார்த்தை, “மைந்த” என்ற விளி, அதை வைத்து தாடகையை என்ன செய்ய வேண்டும் என்பது ராமனுக்குப் புரிந்துவிடுகிறது.

ஜெயமோகன் பேரிலக்கியங்கள் ஒரு விதை போல என்று குறிப்பிட்டார். ஒரு கலாச்சாரமோ சமுதாயமோ முற்றிலுமாக அழிந்துபோனாலும் கூட, அதன் பேரிலக்கியம் எஞ்சினால், அவ்விதையிலிருந்து அச்சமூகத்தை முழுவதுமாக உருவாக்கிவிடலாம். அது போல, எனக்குக் கம்பராமாயணத்தில் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விதை போல தோன்றுகிறது. அவ்விதைகளிலிருந்து பல எண்ணங்களும் கேள்விகளும் உயிர்த்தெழுகின்றன. அவ்வெண்ணங்களுக்கும் கேள்விகளுக்கும் வளர்த்தெடுத்து பின்தொடர்ந்து சென்றால், பற்பல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. மேலும் பல பயணங்களை எதிர்பார்த்து…

பி.கு: மனதில் சில கேள்விகள் இன்னும் இருக்கின்றன.

  1. “தாடகை” என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?
  2. கம்பன் ராமாயணத்தை இயற்றும் போது வால்மீகி ராமாயணத்தைப் படித்தோ / கேட்டபின்னரோ இயற்றினாரா? அல்லது துளசிதாசரின் ராமாயணமோ வேறு மொழியில் இயற்றிய ராமாயணத்தை முன்மாதிரியாக வைத்து இயற்றினாரா?
  3. காகுத்தனின் முழுக்கதை என்ன? அதை எங்குப் படிக்கலாம்? கம்பராமாயணத்தில் வேறெங்கும் காகுத்தன் குறிப்பு வருகிறதா?
  4. வால்மீகி ராமாயணத்தில் தாடகை முதலில் ஒரு யக்ஷினி. சாபத்தால் அரக்கியானாள் என வருகிறது. கம்பராமாயணத்தில் இந்த சாபம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?

Leave a Reply

%d bloggers like this: