எறும்புகளைக் கொல்பவன்

சொல்வனம் ஜூலை 2020 இதழில் வெளியான எனது சிறுகதை.


மொறமொறப்பான துண்டால் காதில் நுழைந்த நீரைத் துடைத்துவிட்டு, அணைந்த மடிக்கணினித் திரையில் தன் பிம்பத்தைப் பார்த்தபடி, தன் வாழ்க்கையில் நுழைந்த முதல் பல்லியைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.

“அடுத்த செகண்ட் அது என்ன பண்ணும்னு யாராலையும் சொல்ல முடியாதுடா! எழுதி வெச்சுக்கோ. இந்த உலகம் அழிஞ்சா அது பல்லியாலதான்!” என்று நண்பன் ஒருவன் சொன்னது காதில் கேட்டது. கூடவே, தன் சிறு வயது வீட்டு ஹாலில் எப்போதும் பல்லிகளின் சரணாலயமாகத் திகழ்ந்த கரண்ட் மீட்டர் டப்பாவும் நினைவுக்கு வந்தது. அது ஒரு மூலையில் இருந்ததால் அதன் இடுக்குகள் பல்லிகளுக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கலாம். தினம் மின்விசிறியின் சுவிட்சைப் போடும்போது கரண்ட் மீட்டர் டப்பாவின் பக்கவாட்டில் ஏதாவதொரு பல்லி, “நான் இங்க இல்லியே!” என்பதுபோல ஒளிந்துகொண்டிருக்கும். “நீ இருந்துட்டுப் போ! உன்னப் பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு. அதுனால நான் உன்னைக் கண்டுக்கல,” என்பது போல இவனும் சுவிட்சைப் போட்டுவிட்டுக் கண்களை அந்தப் பக்கம் செலுத்தாமல் வந்துவிடுவான்.

பல்லிகளை வைத்து ஒரு கதை எழுதலாமா என யோசித்தான். பல்லி எதன் குறியீடு என நோண்டுவார்கள். அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தான். ஜன்னல் அருகில் தலைகீழாக ஒரு பல்லி அமைதியாய்க் காத்திருந்தது. இப்படி நிச்சயமின்மையின் விட்டத்தில் தலை கீழாகத் தொங்க மனம் இல்லாமல் தொப்பெனக் குறியீட்டுக் குளத்தில் விழும் பல்லிகள்…

அது இருக்கட்டும், மூடியிருந்த அறைக்குள் எப்படி நுழைந்தது இந்தப் பல்லி? நேற்று மழை பெய்திருந்தது. மழை பெய்த மறு நாள் எப்படியோ அறைக்குள் பல்லி வந்துவிடுகிறது அல்லது இருக்கிற பல்லி காணாமல் போய்விடுகிறது. எழுந்து ஜன்னலைத் திறந்துவிட்டான். போக விருப்பம் இருந்தால் போகட்டும்.

சில வருடங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஹாஸ்டல் அறைக்குள் இப்படித்தான் பல்லி வந்துவிட்டது. ஹாஸ்டல் நிர்வாகத்திடம் புகார் செய்தான். சிகரெட் வாடை வீசும் தடிமனான பாதுகாவலர் உள்ளங்கை அளவு இருக்கும் ஒரு பசைப் பலகையை அறைக்குள் வைத்து, “இது சிறிய எலிகளைப் பிடிப்பதற்கு. பல்லியும் பிடிக்கலாம்,” எனச் சொல்லிவிட்டுப் போனார்.

வகுப்பு முடிந்து கதவைத் திறந்த போது, அவன் வாழ்வில் என்றும் முகர்ந்திடாத வாடை. பசையும் பல்லியின் தோலும் குழைந்த ஒரு வாடை. பசைப் பலகையில் உயிருடன் சிக்கிக் கிடந்த அந்தப் பல்லியைக் குப்பையில் எறியப் பலகையைத் தூக்கினான். தாவிக் குதித்து விடுமோ என்ற நடுக்கம் அவன் விரல்களில். ஆனால் பலகையைக் கவனித்தபோது பல்லி எகிற வாய்ப்பில்லை எனத் தெரிந்தது. தப்பிக்க முயன்றதில் உடல் வளைந்து கோணல்மாணலாகச் சிக்கியிருந்தது. துடித்துக்கொண்டிருந்த அதன் அடிவயிற்றின் நிறம் துல்லியமாய் நினைவிருந்தது.

அவனுக்குப் பிடித்த அந்த வெளியூர் பல்கலைக்கழகத்திற்கு நுழைவுச்சீட்டு கிடைத்ததே பல்லியை மிதித்துதான். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் படிக்கக் காலையில் மூன்று மணிக்கெல்லாம் எழவேண்டும். வீட்டில் அனைவரும் உறங்கும் நேரம். பல்லிகளும் கரப்பான்பூச்சிகளும் ஓடி விளையாடும் நேரம். இருட்டான அவன் வீட்டுச் சமையல் அறையைத் தாண்டித்தான் கழிவறைக்குச் செல்ல முடியும். எப்படி இருந்தாலும் காலையில் முட்டிக்கொண்டு வந்துவிடும், போகாமலும் படிக்க முடியாது. கழிவறை விளக்கின் சுவிட்ச் சமையல் அறைக் கதவுக்குப் பக்கத்தில் இருக்கும். ஹாலில் நின்றபடியே கையை மட்டும் சமையல் அறைக்கு உள்ளே விட்டு, கழிவறை விளக்கைப் போடுவான். ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா எனச் சிறிது நேரம் நின்று அவதானிப்பான். சில சமயம் நடமாட்டம் தெரியாவிட்டாலும் பாத்திரம் நகரும் மெல்லிய சத்தமோ, பிளாஸ்டிக் பை அல்லது காகிதம் உரசும் சத்தமோ கேட்கும். இதையெல்லாம் கவனித்துவிட்டுக் கண்களை மூடி ஒரே ஓட்டத்தில் சமையலறையைத் தாண்டி கழிவறைக்குள் நுழைவான். கண்களை மூடிக்கொள்வது அவசியம். சுவரிலோ தரையிலோ எங்கேனும் பல்லி இருக்கிறது எனத் தெரிந்துவிட்டால், அந்த எண்ணமே பதற்றத்தை பலமடங்கு கூட்டிவிடும்.

ஒரு முறை கழிவறை விளக்கின் சுவிட்ச் டப்பா மீதே ஒரு பல்லி இருந்தது. விளக்கைப் போட இருட்டில் கையால் துழாவிய போது பல்லியின் தேகத்தை முதல் முறை தீண்டினான். அன்றிலிருந்து சுவிட்சைப் போடுவதற்கு விரலைத் தூக்கும்போதெல்லாம் பல்லியைத் தீண்டிவிடுவோமோ என்கிற படபடப்பும் சேர்ந்துகொண்டது.

சமையல் அறை வாசல் அருகில்தான் கிரைண்டர் இருக்கும். பிளாஸ்டிக் பைகளாலும் பாட்டியின் பழைய புடவைகளாலும் மூடப்பட்டிருக்கும். பல்லிகளுக்கு ஏனோ அந்த கிரைண்டர் அடியில் வாழ்வது பிடித்திருந்தது. ஒரு நாள் விளக்கைப் போட்டுவிட்டு ஒரே எட்டில் ஓட நினைத்து முதல் அடியை எடுத்து வைக்கவும், கிரைண்டருக்குப் பின்னாலிருந்து பல்லி வெளியே வரவும் சரியாக இருந்தது. ஒரே மிதி. பல்லியின் முதுகெலும்பு எப்படி இருக்கும் என்பதை அன்றுதான் உணர்ந்தான். அவனிடம் மிதி வாங்கிய பல்லி எங்கே மறைந்ததென்றே தெரியவில்லை.

பல்லி தனக்குள் உண்டாக்கும் பதற்றத்திற்குக் காரணம் என்ன? யோசித்துப் பார்த்தால் அதன் நகர்வின் நிச்சயமின்மைதான். சாந்தமாக அமர்ந்திருப்பது போலத் தோன்றும் ஆனால் திடீரென்று எங்கே பாயும் தெரியாது. நிச்சயமின்மையே பயத்தின் அடிநாதம். கதையில் இவ்வாக்கியத்தைச் சேர்க்கலாம் என மனதில் குறித்துக் கொண்டான்.

விட்டத்தில் தலைகீழாகத் தொங்கும் பல்லி ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நகர்ந்திருந்தது. அதன் வயிற்று பகுதி சற்றே நீலமாக இருப்பதாகத் தோன்றியது. சிறு வயதில் கண்ட ஒரு தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பல்லியின் எச்சில் சாதத்தில் விழுந்தால் நீல நிற விஷமாகிடும் என்று சொன்னார்கள். ஒவ்வொருமுறை பாட்டி கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும்போதும் அது நீலமாக மாறுவது போல அவனுக்குத் தோன்றும். பள்ளியில் மதிய உணவுக்கு இட்லியோ சாதமோ கொடுத்துவிட்டிருந்தால் வெள்ளையாக இருக்கிறதா என்று உறுதிசெய்துவிட்டே சாப்பிடுவான்.

விட்டத்தின் நடுவில் இருக்கும் விளக்கை நோக்கி திடீரெனப் பல்லி பாய்ந்தது. சில வீட்டு வாசல்களில் இரவு வேளையில் டியூப்லைட் அருகில் உலாவும் பல்லிகளைப் பார்த்திருக்கிறான். அவை ஏனோ மிகத் தடிமனாக இருக்கும். ஒரு முறை அவன் கழிவறைக்குள்ளும் ஒரு தடிமனான பல்லி வந்தது. விளக்கு அருகிலேயே பல நாட்கள் உலாவிக்கொண்டிருந்தது. கழிவறையில் நின்று மூத்திரம் போகும்போதெல்லாம் ஓரக் கண்ணால் அதை வேவு பார்ப்பான். சட்டெனப் பல்லி நகர்ந்தால் மூத்திரம் நிற்கும், பல்லி நின்றதும் மூத்திரம் தொடரும். டிராயரைக் கழட்டும்போது அது தன்னைப் பார்க்கிறதா என்ற சந்தேகம் வரும். பல்லியின் கண்கள் எந்தத் திசையில் பார்க்கும் என்பது தெரியாது. தன் டிராயருக்குள்ளிருந்து வெளியே எடுக்கும் உறுப்பை அது என்னவென நினைக்கும்? அதுவும் ஒரு பல்லி என நினைத்து அருகில் வருமோ என்றெல்லாம் பயந்திருக்கிறான்.

தலையை நாற்காலி மீது சாய்த்து விட்டத்தில் நிற்கும் பல்லியைப் பார்த்துப் புன்னகைத்தான். இதைப் பார்க்கும்போது எழும் உணர்வு பயமா? என்னதான் தோன்றுகிறது நம் மனதில்? இந்த பல்லியைப் போலவே சுவரில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, ஏதாவதொரு இடுக்கில் சிக்கி நசுங்கி விடுவோமோ என்கிற பதற்றம், அது நசுங்குவதைப் பார்த்துவிடுவோமோ என்கிற அசூயை, சுண்ணாம்பு அடித்த சுவரை நக்கினால் ஏற்படும் சுவை — ஒரு பல்லியைப் பார்க்கும்போது இப்படிப் பல உணர்வுகளின் கலவையே அவனைத் தாக்குகிறது. இவை அனைத்தும் முன்னே நிற்க, பல்லிகளுடன் இதுவரை ஏற்பட்ட சகல அனுபவங்களும் பின்னணி இசையாக மனதினுள் ஓடுகின்றன. அதுவும் பல்லி எழுப்பும் சத்தங்களுடன். ருதர்போர்ட் மற்றும் நீல்ஸ் போர் சொன்ன அணுக்களின் அமைப்பை மனப்பாடம் செய்துகொண்டிருந்த சமயத்தில், ஹாலில் இருந்த கரண்ட் மீட்டர் டப்பா மீது பல்லிகள் சண்டையிடுவதைக் கண்டிருக்கிறான். ஒரு தடித்த பல்லி கீழே விழும்போது எழும் ‘தொப்ப்’ என்ற சத்தமும் அன்றுதான் முதல் முறை கேட்டான்.

விட்டத்தில் இருக்கும் பல்லி தொப்பென்று விழுந்தால் நேராகத் தன் மெத்தை மீதுதான் விழும். இரவு உறங்கும் போது விளக்கை அணைக்காமல் விடுவோமா என யோசித்தான். மெத்தையைத் தள்ளிப்போட அறையில் இடமில்லை. எதையாவது வீசியெறிந்து அதை அறையிலிருந்து துரத்தலாம். ஆனால் பதற்றித்தில் அது எங்கே புகுந்துகொள்ளுமோ தெரியாது. இருக்கட்டும் பார்ப்போம். இது பெரிய பல்லிக்கும் குட்டி பல்லிக்கும் இடையான அளவில் இருந்தது. குட்டி பல்லிகள்தான் அட்டகாசம் செய்யும். பயமே கிடையாது, எங்கேயும் செல்லும், மேஜைமீது, புத்தகங்களுக்கு இடையே. வளர்ந்த பல்லிகளுக்கு ஓர் அளவுக்கேனும் இங்கிதம் தெரியும்.

சற்று நேரம் முன்பு தனக்கும் ஒரு குட்டி பல்லிக்கும் குளியல் அறையில் நிகழ்ந்த போரை நினைத்துப் பார்த்தான். அவன் கையில் ஷவர் ஹெட் இருந்தது. திடீரென்று பல்லியை நீரால் அடித்துச் சாக்கடைக்குள் தள்ள வேண்டும் என்ற எண்ணம் பொங்கி வந்தது. குளிப்பதை விட்டுவிட்டு ஹீட்டரின் சூட்டை அதிகரித்து நீரைப் பாய்ச்சினான். பல்லி வழுக்கிக்கொண்டு சாக்கடை ஓட்டைக்குள் விழச் சென்றது. ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படியோ தப்பித்து சுவரின் மீதோ குழாய்களின் மீதோ தாவியது. ஒவ்வொரு முறை தப்பிக்கும் போதும் அதைச் சாக்கடை குழிக்குள் தள்ளும் ஆர்வம் அதிகமானது. குறிதவறாமல் இருக்க இரு கைகளாலும் ஷவர் ஹெட்டைப் பிடித்து நீரைப் பாய்ச்சினான். நீர் எட்டமுடியாத ஒரு முடுக்கில் சென்று பல்லி ஒளிந்துகொண்டது.

ஒரு நிமிடம் இருவரும் மூச்சு வாங்கிக்கொண்டார்கள். பிறகு ஒரே மடக்கில் ஜன்னல் வழியாகத் தப்பிக்க பல்லி பாய, இவனும் நீரை அடிக்க, வழுக்கிச் சாக்கடைக் குழிக்கு மிக அருகில் பல்லி விழுந்தது. குளித்த பிறகு அணியவேண்டிய துணிகளின் மீது நீர் தெறித்திருப்பதை அரை நொடி கவனித்துவிட்டுத் திரும்புவதற்குள், பல்லியைக் காணோம். அம்மணமாகக் கையில் ஷவர் ஹெட்டுடன் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தான். ம்ஹூம்! கண்களை எல்லா திசைகளிலும் உருட்டிக்கொண்டே குளித்து முடித்தான். துடைத்துகொண்டு அறையில் வந்தமர்ந்தால் இதோ விட்டத்தில் நிற்கிறது இன்னொரு பல்லி.

இடிச் சத்தம் கேட்டது. மேஜை மீதிருந்த கைப்பேசியை எடுத்தான். விரல் தானாக இசை செயலியின் பக்கம் சென்றது. அவன் கைப்பேசியில் சேமித்து வைத்திருந்தது இரண்டே இரண்டு இசைக் கோர்வைகள் – ஒன்று இளையராஜாவின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்பட பின்னணி இசை, இன்னொன்று பதேர் பாஞ்சாலியின் பின்னணி இசை. சிதாரின் வருடல்கள் தன் அறையை நிறைத்ததும், குளியலறையில் பல்லியைக் கொல்லும் வேட்கை ஏன் எழுந்தது என யோசிக்கத் துவங்கினான். மேஜை மீது ஒசாமு தெஸுகாவின் புத்தா புத்தகங்கள் வரிசையாக அடுக்கி இருந்தன. அவை ஒருசேர உருவாக்கிய புத்தரின் தோற்றம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னை நினைத்தே சிரிப்பு வந்தது அவனுக்கு.

சிறு வயதில் சுவரும் தரையும் இணையும் இடத்தில் ஊர்ந்து செல்லும் கட்டை எறும்புகளையும் பிள்ளையார் எறும்புகளையும் நசுக்கியது ஏன்? அதுவும் பிள்ளையார் எறும்பு எளிதில் நசுங்கிவிடும். கட்டை எறும்பை நசுக்கும்போது பொறித்த வடகத்தூள்களை நசுக்குவது போல மெல்லியதொரு ‘நொருக்’ உணர்வு ஏற்படும். அது அவனுக்குப் பிடித்திருந்தது. அதுவும் ஓர் எறும்பை நசுக்கியபின் அது தனித்தனி பாகங்களாகத் தரையிலோ தனது விரல்களிலோ பிரிந்து கிடப்பதைப் பார்ப்பது பிடித்திருந்தது.

இது சாடிஸமா என யோசிக்கும்போதுதான் நினைவுக்கு வந்தது, எறும்புகளை மட்டுமல்ல ஈக்களையும் கொன்றிருக்கிறான். மழலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். சாயங்கால வேளை. அம்மா அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியிருக்க மாட்டார்கள். காது கேட்காத பாட்டியும் அவனும் மட்டும் வீட்டு வாசலில் அமர்ந்து வெறுமனே தெருவை வேடிக்கை பார்ப்பார்கள். இவன் ஏதாவது சொப்பு சாமானை உருட்டிக் கொண்டிருப்பான். பாட்டியின் உதடுகள் அவன் அறியாத பழைய சினிமா பாடல்களை அவ்வப்போது முணுமுணுக்கும். அவ்வேளையில் எதைத் தேடியோ சில ஈக்கள் வாசற்படியில் வந்தமரும். சிறிது நேரம் பார்த்துவிட்டு பாட்டி சமையல் அறை உள்ளே சென்று ஈரமான சுருணைத் துணி ஒன்றை எடுத்து வருவாள். ஈக்களுக்கு அருகில் குந்தி அமர்வாள். சடக்! ஒரே வீச்சில் மூன்று நான்கு ஈக்கள் செத்துவிடும். சில வினாடிகள் முன் பறந்துகொண்டிருந்த ஈக்கள் இப்போது அசைவே இல்லாமல் வானத்தை நோக்கிக் கால்களை நீட்டித் தலை குப்புறக் கிடப்பதை ஆச்சரியத்துடன் இவன் பார்ப்பான். ஓர் அமர்வில் குறைந்தது 15-20 ஈக்கள் வாசலில் செத்துக் கிடக்கும். அவற்றைத் திரட்டி ஒரு மூலைக்குக் கொண்டுவருவதற்கு இவன் உதவி செய்வான். பிறகு பாட்டி அள்ளிக் குப்பையில் போட்டு விடுவாள்.

தினந்தோறும் மாலை வேளையில் இருவரும் பேசிக்கொள்ளாமல் விளையாடும் விளையாட்டு போல ஆகிவிட்டது இது. இவனும் அவ்வப்போது நான் செய்து பார்க்கிறேன் எனப் பாட்டியிடம் சுருணைத் துணியைக் கேட்பான். பாட்டியும் துணியைக் கொடுத்துவிட்டு, “போடு!” என்றோ கைகளைத் தட்டியோ அடிக்க வேண்டிய சரியான தருணத்தைச் சுட்டுவாள். அவன் செய்வதைப் புன்னகையோடு பார்ப்பாள். அம்மாதிரியான புன்னகையை அவன் பாட்டியின் முகத்தில் அபூர்வமாகவே பார்த்திருக்கிறான். உதடுகள் சுருங்கி, மூக்கு சற்று உள்வாங்கி, மூக்குத்தி மினுமினுக்க, ஊற்றாக வரும் சிரிப்பை அடக்கிவைத்து மெதுவாக வெளியிடுவது போல இருக்கும் அந்த புன்னகை.

பாட்டியும் தானும் இப்படிச் செய்தோம் என்பதை யாரிடமும் சொன்னதில்லை. ஐந்து மாதங்கள் முன் தன்னைப் பிரிந்து சென்ற காதலியிடமும் கூட. இன்று பாட்டிக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்குமா? இப்போது அவள் இருக்கும் குடியிருப்பு வீட்டு வாசலில் ஈக்கள் வந்து அமர்வதில்லை. இவன் வெளியூரில் தற்போது தனியாக தங்கியிருக்கும் அறைக்கு வாசற்படிகள் உண்டு. ஆனால் அங்கு அவன் அமர்வதில்லை. இதெல்லாம் கதையில் எழுத வேண்டாம் என நினைத்தான். ஏதோ பழங்காலத்திற்கு ஏங்குவதாகத் தோன்றிவிடும்.

ஒரு குறுஞ்செய்தி வந்து கைப்பேசி திரை ஒளிர்ந்தபோதுதான் கவனித்தான், நன்றாக இருட்டியிருந்தது. செய்தியைப் படித்ததும் உடனே எழுந்து சட்டை பேண்ட் அணிந்து கிளம்பினான். வீட்டுக் கதவைப் பூட்டும் பொழுது நல்ல மழை பெய்யத் துவங்கியிருந்தது. கதவுக்குப் பக்கத்தில் திறந்திருக்கும் ஜன்னல் வழியாகத் தனது அறையின் விட்டத்தைப் பார்த்தான். பல்லி இன்னும் அதே இடத்தில் இருந்தது. மழைத் துளிகளின் ஓசை காதுகளை நிறைக்க, சற்று யோசித்தான். ஒரு விரலால் ஜன்னலை உந்தித் தள்ளினான். வழுக்கிச்சென்று அது சாத்திக்கொண்டது.

படிகளில் இறங்கினான். அவன் வாசலுக்கு வெளியில் உலாத்தும் பூனை ஒன்று படிக்கட்டில் படுத்திருந்தது. எவ்வளவு இடம் இருந்தாலும் இரண்டாவது படியின் ஓரத்தில்தான் எப்போதுமே படுத்துக் கிடக்கும். அதை கவனமாக தாண்டியதும் திரும்பி பார்த்தான். மேலும் கீழும் அசையும் வயிறு. அதன் சுருண்டு படுத்திருந்த உருவம், அவனை இம்மழையிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இழுத்துச் சென்றது. வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுப் பின்மதிய நேரத்தில் சமையல்கட்டிலே அயர்ந்து உறங்கும் பாட்டி கண் முன் தோன்றினாள். இதே போலத்தான் சுருண்டு படுத்திருப்பாள். சாலையில் இறங்கியதும் இங்கும் அங்கும் விரைந்து பறக்கும் வாகனத் திரளிலிருந்து பிரிந்து, அவன் ஏற வேண்டிய பேருந்து மெல்ல அவனை நோக்கி வந்தது. கனத்த மழைக்கிடையே லேசான குலுங்கலுடனும் “உஷ்ஷ்” என்ற சத்தத்துடனும் நிறுத்தத்தில் வந்து நின்றபோது, அது பார்ப்பதற்கு வாசற்படியில் வந்தமரும் ஈ போலவே இருந்தது.

Leave a Reply

%d bloggers like this: