“திரும்ப எரிக்க ஆரமிச்சுட்டாங்களா?” தனது மூக்கிற்கு கருகிய பேப்பர் வாடை வருவதை உணர்ந்த ராஜி விறுவிறுவென ஜன்னலை நோக்கி நடந்தாள். வெளியே எட்டிப்பார்த்தாள். இரண்டாவது தளத்தில் இருக்கும் அவள் வீட்டு ஜன்னலுக்கு கீழ், புல்வெளியில் சாம்பல் நிற தகர டிரம் ஒன்றில், தீ ததும்பியது. அதற்கு எழுத்துக்கள் பொதிந்த சதுர காகிதங்களை இறையாய் அளித்துக்கொண்டிருந்தார், அரை கால் சட்டை அணிந்த ஒரு சீன முதியவர்.
“எதுக்கும்மா பேப்பர் கொளுத்தறாரு அந்த தாத்தா?” ஜன்னல் அருகில் இருக்கும் நாற்காலியில் முழங்காலிட்டு முகத்தை கிரில் மீது சாய்த்து கேட்டாள் சிறுமி அக்ஷரா.
“எதுக்கோ எரிக்கறாங்க!” ஜன்னலை மூடி தாழிட்டு, கிட்சனுக்கு திரும்பினாள் ராஜி. ஞாயிற்றுக்கிழமையன்று கூடவா வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது என்ற எரிச்சல். மூடிய ஜன்னல் கண்ணாடி வழியாக அக்ஷரா அந்த தாத்தாவையும், கொழுந்து விட்டு எரியும் நெருப்பையும் பார்த்தாள். நெருப்பிலிருந்து வெளிவரும் கருப்பு புகையை அவள் கண்கள் பின் தொடர்ந்தன. அந்த புகை மேலே மேலே எழ, எவ்வளவு தூரம் அதை பார்க்க முடிகிறது என்று ஜன்னலோடு மூக்கை ஒட்டி முயற்சித்தாள்.
“அக்ஷரா! இங்க வா. வடை ரெடி!”
மூன்று நொடிகளில் தாவி வந்து கிட்சன் மேசை மீது உட்கார்ந்தாள் அக்ஷரா. முறுவலான வடை ராஜி கையில் இருந்த கரண்டியிலிருந்து, பூக்கள் படம் பொதிந்த வெள்ளை பீங்கான் தட்டில் விழுந்தது.
“வடைல ஏன் மா ஓட்டை இருக்கு?” ஆவி பறக்கும் வடையை தொட முடியாமல், நடுவில் இருக்கும் ஓட்டையில் விரல் விட்டப்படி அக்ஷரா கேட்டாள்.
***
மூடிய ஜன்னலுக்கு முன் இக்கியாவிலிருந்து வாங்கிய வெள்ளை மேசை, வெள்ளை நாற்காலி. மேசை மீது திறந்திருக்கும் லெனோவோ லேப்டாப். நாற்காலியில் ராஜி. அவள் காதில் மொபைல்.
“ஹல்லோ சிஸ்! எழுத ஆரமிச்சுட்டீங்களா?”
“இப்போ தான் ஒரு ஐடியா வந்திருக்கு. அத டெவெலப் பண்ணிட்டு இருக்கேன்.” என்றது மறுமுனையிலிருந்து ஒரு பெண் குரல்.
“6000 வார்த்தைகள் எப்படி எழுத போறேன்னு நினைச்சாலே பயமா இருக்கு!” என்றாள் ராஜி.
“டெய்லி கொஞ்சம் எழுதுங்க. செஞ்சுடலாம் சிஸ்.” என்றாள் உமா.
இரண்டு வாரம் முன்னர், இந்த குறுநாவல் போட்டி பற்றி ராஜிக்கு தெரிவித்தவள் தான் உமா. இருவரும் வளர்ந்து வரும் சிறுகதை ஆசிரியர்கள் என்று மூத்த நாவலாசிரியர் ஒருவர் வாசகர் வட்ட சந்திப்பில் கூறினார். அதை கேட்டப்பின்னர் இருவரும் மாறி மாறி “கங்க்ராட்ஸ் சிஸ்!” என்று பாராட்டிவிட்டு, இன்னும் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.
“எந்த கதை கருவும் இன்னும் சிக்கல… நீங்க போன வாட்டி எழுதின அந்த ரெட்டை நிலா கதை சூப்பரா இருந்துச்சு உமா. முக்கியமா அந்த பாட்டி கேரக்டர்…”
ராஜி பேசியப்படி நாற்காலியிலிருந்து எழுந்து ஜன்னலை திறக்கலாமா என்று பார்த்தாள். வெளியே நெருப்பு இன்னும் எரிந்துக்கொண்டிருந்தது. சிறு சிறு காகித துகழ்கள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன.
“என் ஊர்ல ஒரு பாட்டி அப்படி தான் இருப்பாங்க. அவங்கள மனசுல வெச்சு தான் எழுதினேன்.”
“என்னோட போன கதைக்கு சார் குடுத்த விமர்சனம் வேற இன்னும் அப்படியே மனசுல நிக்குது. அது எப்படின்னு தெரியல, கதை எழுத ஆரமிச்சாலே சொந்த ஊரு விஷயங்கள் எப்படியோ உள்ள வந்துடுது.”
“கவலை படாதீங்க ராஜி. ஒரு நல்ல சிங்கப்பூர் சார்ந்த குறுநாவல் நீங்க எழுதுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.”
ராஜி புன்னகைத்தாள். லேப்டாப் திரையில் அவள் வர்ட் டாகுமெண்டில் போட்டிருந்த 5 புள்ளி பட்டியலை பார்த்தாள்.
- புட் கோர்ட்டில் டேபிள் சுத்தம் செய்யும் சீன பெண்
- ஊருக்கு பணம் அனுப்ப நினைக்கும் கட்டட தொழிலாளி
- முதிய டேக்ஸி ஓட்டுனரும் அவரின் உடல் நலம் இல்லா மனைவியும்
- முதிய டேக்ஸி ஓட்டுனரும் தனிக்குடித்தனம் இருக்கும் அவரின் மகனும்
- கொடுமைகளை அனுபவிக்கும் பிலிப்பினோ மெயிட்
இவை தான் தற்பொழுது ராஜியிடமிருந்த குறுநாவல் கருக்கள்.
குத்துமதிப்பாக பத்து கதைகள் போட்டிகளுக்காக எழுதியிருப்பாள் ராஜி. இரண்டு மூன்று கதைகளில் அவளுக்கு திருப்தி. மற்றவை காலக்கெடு கருதி கிறுக்கியவை. அந்த பத்து கதைகளுக்கு பல விமர்சனங்கள்.
முக்கியமாக அவள் மனதை உருத்திய விமர்சனங்கள் இரண்டு. “அது ஏன் குடும்பத்த சுத்தியே உங்க கதை வருது?” மற்றும் “உங்க கதைல சிங்கப்பூர் சூழல் புகுத்தின மாதிரி இருக்கு. ஊர்லேர்ந்து வந்து எழுதுற ஒருத்தங்கன்னு ஈசியா சொல்லிட முடியும்!”
ராஜிக்கும் சமூகத்தை பற்றி எழுத ஆசை தான். ஜெயமோகன் வலைத்தளத்தில் வரும் கட்டுரைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். முயர்ச்சித்தும் பார்த்தாள். “ஒரு அகதியின் கதை” எழுதியபோது வந்த விமர்சனம், “பிரச்சார நெடி மூக்கை துளைக்கிறது. கதையில் கட்டுரையை தவிர்க்கலாம்”
அதன் பிறகு சமூக கதை பக்கமே ராஜி போகவில்லை. ஓரிரு முறை வளவளவென எழுதும் போது, “யேய்! கட்டுரை கட்டுரை” என்று தனக்குத்தானே எச்சரித்துகொண்டாள்.
“ஓக்கே உமா. நான் இப்போ எழுத ட்ரை பண்ணுறேன். உங்க ஊக்கத்துக்கு நன்றி. பை!”
அக்ஷரா தூங்கிகொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் மீதம் இருந்தது. அதன் பிறகு அவள் ஹோம்வர்க் பார்க்க வேண்டும். நண்பர்களை சந்திக்க வெளியே சென்ற கணவரும் வந்துவிடுவார். இந்த ஒரு மணி நேரத்தில் ஒரு பத்தியாவது எழுதிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
உமாவின் எழுதும் வேகத்தை நினைத்து ராஜி பிரம்மித்ததுண்டு. ஒரு நாள் கதையின் ஒரு லைன் ரெடி என்பாள். மறு நாளே பாதி கதை எழுதிமுடித்துவிடுவாள். இன்னும் 2 நாட்களில் மீதி கதையும் எழுதி, ஒரு முறை எடிட்டிங்கும் செய்து விடுவாள்.
“நமக்கு ஏன் அப்படி வரமாட்டேங்குது?” என்று ராஜி யோசித்ததுண்டு. அவள் எழுதியதை விட, லேப்டாப் திரையின் முன் அமர்ந்து யோசித்தது தான் அதிகம்.
எதிர் புளோக் ஜன்னலில் ஆள் நடமாட்டம் தெரிந்தது. சிகப்பு சட்டை அணிந்த மூதாட்டி ஜன்னல் அருகே வந்து நின்றாள். ராஜியின் எதிர் புளோக் சுமார் 50 அடி தொலைவில் இருக்கும். மூதாட்டியின் முகம் தெளிவாக தெரியாவிட்டாலும், ராஜி பல முறை அவரை கவனித்திருக்கிறாள். தினம் சாயங்காலம் ஆனால், ஜன்னல் அருகே வந்து நின்று விடுவாள். ஜன்னல் வழியாக அந்த மூதாட்டி எதை பார்க்கிறாள் என்று தெளிவாக சொல்ல முடியாது. விளையாட்டு கார்னரில் விளையாடும் குழந்தைகளை பார்க்கிறாளா? இரு புளோக்கிற்கும் நடுவில் வளர்ந்திருக்கும் மரத்தை பார்க்கிறாளா?
இருட்ட ஆரம்பித்தவுடன் மூதாட்டி மீண்டும் உள்ளே சென்று விடுவாள். அந்த வீட்டில் அந்த மூதாட்டியை தவிர வேறு யாரையும் ராஜி பார்த்ததில்லை. இரவில் அவர் வீட்டில் விளக்கு எரியாது. சிகப்பு, மஞ்சள் – இந்த இரு வண்ணங்களில் தான் அவள் சட்டை அணிவாள்.
யார் இந்த மூதாட்டி? அவருக்கு பிள்ளைகள் இல்லையோ? பிறந்து இறந்திருப்பார்களோ? ஏன் சாயங்காலம் மட்டும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறார்? மற்ற நேரங்களில் ஏன் அவர் வீட்டில் விளக்கு எரிவதில்லை? அவருக்கு கணவர் இருப்பாரா? அவர் ஏன் ஜன்னலுக்கு வருவதில்லை? இப்படி பல கேள்விகள் ராஜியின் மனதில் ஏற்பட்டதுண்டு. திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.
வர்டில் 6 என்று ஒரு புது புள்ளி போட்டு, “ஜன்னல் வழியாக எதையோ தொலைத்தது போல் பார்க்கும் மூதாட்டி” என்று டைப் செய்தாள்.
அலாரம் அடித்தது. அட! ஒரு மணி நேரம் ஆகி விட்டதா? குறுநாவல கட்டி வெக்க வேண்டியது தான்.
***
அடுத்த நாள் திங்கட்கிழமை. காலையில் ஜன்னலை திறக்கலாம் என்று பார்த்தால், அப்போது தான் கீழே இருக்கும் புல்லை இருவர் வெட்டிக்கொண்டிருந்தனர். துணியை வைத்து முகமூடி போல அணிந்து கொண்டு, தோள்களுக்கு பின்னால் ஒரு மோட்டார் தொங்க, கையில் நீண்ட கம்பு, அதன் முனையில் விஷ்ணுவின் சக்கரம் போல வேகமாக சுழலும் தகடு. ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சப்தம் மூடிய ஜன்னல் வழியே கேட்டுக்கொண்டிருந்தது. சக்கிரத்தை வலதும் இடதும் அவர்கள் நகர்த்த, தேவைக்கு அதிகமாக வளர்ந்த புல் செடிகள், சிறுசிறு துண்டுகளாக காற்றில் தெறித்தன. பல தடவை பார்த்த காட்சி என்றாலும், அக்ஷரா அதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
“அம்மா நானும் புல்லு வெட்டணும்!”
“நாளைக்கு வெட்டலாம் வா!” ஜன்னலை விட்டு நகர்ந்தாள் ராஜி. செய்ய வேலை இருந்தது.
“அவங்க பின்னாடி என்னமா தொங்குது?”
“இங்க ஓடியா! இன்னிக்கு பிரேக்பாஸ்ட் ஸ்பெஷல் பூரி! தெரியுமா?”
பூரி பொரித்து ஊட்டிவிட்டு, லஞ்சும் கட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு, கணவருக்கும் லஞ்ச் கட்டி டாட்டா காண்பித்துவிட்டு, மீண்டும் லேப்டாப் திரையின் முன் ராஜி. நேற்று எழுதிய ஆறு புள்ளிகளை பார்த்தாள். எதை தேர்ந்தெடுப்பதென்ற குழப்பம். குறுநாவல் போட்டியின் விதிமுறைகள் கேட்பதற்கு மிகவும் எளியவை. சிங்கப்பூர் சார்ந்த கதையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 6000 வார்த்தைகள் இருக்க வேண்டும். இவ்விரு விதிகளும் ராஜிக்கு பனிக்கட்டிகளால் மூடப்பட்டு, உச்சி எங்கிருக்கிறது என்று தென்படாத மலைகள் போல காட்சியளித்தன.
சொந்த ஊரை பற்றி எழுத வேண்டும் என்றால் அவளுக்கு பீறிக்கொண்டு கதை வரும். யோசிக்கவே தேவை இல்லை. தண்ணி லாரி வந்தால் நெரிசலாகும் அவள் ஊர் வீதி, பக்கத்து வீட்டில் தங்கியிருந்த “சுருட்டு” தாத்தாவின் புலம்பல், நாடியம்மன் கோவில், விக் அணிந்த அந்த கோவில் பூசாரி, அம்மனுக்கு புடவை சாத்தியதும் கல்யாணம் நடந்த பவானி அக்கா… இப்படி ஒவ்வொரு விவரமும் டக்டக்கென கண் முன் தோன்றி மறையும். ஆனால் சிங்கப்பூர் என்று வந்து விட்டால், “சீனன்” என்று எழுதினால் அவள் கண் முன் ஒரு மங்கலான முகம் தான் தோன்றும். இது அவள் மனதை குடைந்து கொண்டே இருந்தது.
இந்நேரம் உமா கதை எழுதி முடிச்சிருப்பாங்க. நாம எழுதியே ஆகணுமா? பேசாம விட்டுடலாமே… யாரு என்ன கேக்க போரா? ஐயோ! சார் கேப்பாரே ஏன் எழுதலைன்னு. நான் வேற ஓப்பனா “குறுநாவல் தானே? எழுதிட்டா போச்சு!”ன்னு சொல்லிவெச்சுட்டேன். ஜுரம் அப்படின்னு சொல்லிடலாமா? ஏன் நமக்கு சிங்கப்பூர் கதை எழுதவே வர மாட்டேங்குது… எப்படி நாம சிங்கப்பூரோட அடிநாதத்தை தேடி பிடிக்கிறது?
திடீரென்று ஒரு ஆர்கெஸ்ட்ரா வாசிப்பது போல கேட்டது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். ஒரு கூட்டமே கீழே இருக்கும் திறந்த வெளியில் திரண்டிருந்தது. என்ன சம்பவம், எதை கொண்டாடுகிறார்கள், ஒன்றும் தெரியவில்லை. சீருடை அணிந்த பல ஆண்கள். ஸ்கர்ட் அணிந்த பல பெண்கள். குல்லா மற்றும் தொளதொள ஜிப்பாக்கள் போட்ட பல பெருசுகள். ட்ரம்ஸ், ட்ரம்பெட் மற்றும் ராஜிக்கு பெயர் தெரியாத பல இசைக்கருவிகள். இசைக்கேற்ப அனைவரும் மார்ச்ஃபாஸ்ட் போல சுற்றி சுற்றி நடந்தார்கள். இதை சுற்றி நின்று பார்க்கும் ஒரு கூட்டம்.
நடப்பவற்றை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்த ராஜிக்கு, மார்ச்ஃபாஸ்ட் செய்த கும்பலில் இருந்த ஒரு பெண் தென்பட்டாள். அவளின் கல்லூரி பருவம் நினைவுக்கு வந்தது. எந்த கவலையுமில்லாமல் இதே போல மார்ச்ஃபாஸ்ட் செய்தபடி, அடித்த லூட்டியெல்லாம் நினைவுக்கு வந்தது.
இசை நின்றது. அந்த பெண் புன்னகைத்தப்படி மற்ற தோழிகளுக்கு ஹை-ஃபை கொடுத்தாள். அடுத்து எல்லோரும் சேர்ந்து ஒரு நீண்ட பேனரை தூக்கினார்கள். வேறொரு தாளம் இசைக்க துவங்கியது. இந்த பெண் மட்டும் மிக நேர்த்தியாக எல்லா அசைவுகளையும் செய்தாள். மற்றவர்கள் இயந்திரங்களாக அசைவது போலவும், இவள் மட்டும் தனித்துவமாக அசைவது போலவும் ராஜிக்கு தோன்றியது.
ராஜியும் மற்ற பெண்களும் பேனரை தூக்கினார்கள். அந்த மஞ்சள் பேனரில் கருப்பு நிறத்தில் பெரிய பெரிய எழுத்துக்கள் பொதிந்திருந்தன. தனது கையால் பேனரை பிடித்து தூக்கும் போது, எழுத்துக்கள் இன்னும் பெரிதாக ராஜிக்கு தெரிந்தன. அந்த எழுத்துக்களின் அர்த்தம் ராஜிக்கு புரியவில்லை. ஆனால் அந்த பேனரை தூக்கி ஆடினால் குதூகலமாக இருக்கும் என்றது அவள் மனம். ட்ரம்களின் இசைக்கு அவள் கால்கள் தானாய் அசைந்தன. அவளின் இரு புறத்திலும் அவளோடு ஆடும் மற்ற பெண்களை பார்த்தாள். அவர்கள் முகங்களிலும் புன்னகை ஒளிர்ந்தது. எதிரே அவர்களை நோக்கி நடனம் ஆடியபடி ஒரு ஆண் கூட்டம் வந்தது. ட்ரம்பெட் ஊதப்பட்டது. ஆடி வரும் ஆண்களில் ஒரு இளைஞன் மிடுக்காக இருந்தான். அவனின் கண்களை பார்த்தவுடன், ராஜிக்கு அவனுடன் ஆடவேண்டும் போல தோன்றியது. இசை மேளம் அடிக்க அடிக்க, பெண்களும் ஆண்களும் கலந்து ஆடினார்கள். ஜிப்பா அணிந்த ஒரு தாத்தாவின் தலையிலிருந்து குல்லா கீழே விழுந்தது. ராஜி சிரித்தாள். வெகுநாட்களுக்கு பிறகு சிரிப்பது போல தோன்றியது. அந்த சிரிப்பே வேறு யாரோ ஒருவரின் சிரிப்பு போல இருந்தது. இசையின் வேகம் கூடியது. தனது ஆட்டத்தின் வேகமும் கூடுகிறது என்று ராஜி உணர்ந்தாள். அவளின் உடல் காற்றை கட்டி அணைத்தது. இரு கைகளையும் நீட்டினாள். ஒரு பறவை வந்து அவள் கைகளை முத்தமிட்டது. அவளை சுற்றிலும் ஆட்டம். குதூகலம். சுழன்றாள். அவளின் ஸ்கர்ட்டும் சுழன்றது. ட்ரம்பெட் மீண்டும் முழங்கியது. டிராகன் பொம்மை ஒன்று வானில் பறந்தது. அதை பிடித்து ஆட்டும் குச்சி ராஜியின் கையில் இருந்தது. சுழற்றினாள். காற்றை கிழித்து கொண்டு டிராகன் ஆடியது. அனைவரும் அந்த டிராகனை நிமிர்ந்து பார்த்தனர். அந்த இளைஞனை நோக்கி டிராகனை பறக்க விட்டாள். அவன் ஒரு பூச்சண்டை அந்த டிராகனிடம் நீட்டினான். பூச்சண்டை தொட்டவுடன் டிராகனும் பூக்களாக உதிர்ந்து விழுந்தது. பூ மழையில்…
கதவு தட்டப்பட்டது. இசை நின்றது. ராஜி வீட்டிற்குள் இருந்தாள். தட்டப்பட்ட கதவை திறந்ததும், சிறிய களைப்புடன் ஸ்கூல் பேக்கை ஆட்டிக்கொண்டே, கையில் காலி தண்ணீர் பாட்டிலுடன் உள்ளே நுழைந்தாள் அக்ஷரா.
“அம்மா பசிக்குது… சாப்பிட என்ன இருக்கு?”
அப்போது தான் ராஜிக்கு தோன்றியது. திரும்பி ஜன்னல் வழியாக எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தாள். மூதாட்டி அங்கே நின்றிருந்தாள். நேராக ராஜியை உற்று பார்த்தப்படி. அவளின் பார்வையில் ஒரு வெற்றிடம். முதல் முறையாக மூதாட்டியின் முகம் தெளிவாக தெரிந்தது. பரிட்சயமான ஒரு முகம்… அந்த முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கண்ணாடி ஜன்னலில் தெரியும் ராஜியின் முக பிம்பம் மீதும் படர்ந்தன.
“அம்மா!! பசிக்குதும்மா!!”
***