தி 400 ப்ளோஸ் (The 400 Blows) 1959
Francois Truffaut அப்படின்னு ஒரு பிரஞ்சு இயக்குனர் உருவாக்கிய படம். எதுக்கு வம்புன்னு ஆங்கிலத்துலேயே அவர் பெயர எழுதிட்டேன். பாவம் தமிழையும் பிரஞ்சையும் மோத விட வேண்டாமே…
இந்த படத்துல அப்படி என்ன இருக்கு?
நல்ல கேள்வி. ஒவ்வொரு படம் பாக்கறதுக்கு முன்னாடியும் இந்த கேள்வி கேட்டா, வாழ்க்கையில் நிறைய நேரம் சேமிக்க முடியும். (அந்த சேமித்த நேரம் வைத்து என்ன செய்கிறோம் என்பது வேறு கேள்வி)
கதை இது தான். பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு சிறுவன். தாய் தந்தையரின் கவனிப்பின்றி, பள்ளியில் கிடைக்கும் திட்டுகளை வாங்கி கொள்கிறான். அவன் வாழ்வின் வெறுமையும், அவன் ஈடு படும் சிறு சிறு திருட்டுகளை சித்தரிக்கும் ஒரு படம் தான் “தி 400 ப்ளோஸ்”!
ஓ! சிறுவன்… திருட்டு… இது பிரெஞ்சு காக்காமுட்டையா?
அப்படியும் சொல்லலாம். காக்காமுட்டை பாலா படம் டைப்ல சோகமா எடுத்திருக்கலாம். ஆனா இயக்குனர் மணிகண்டன் ரொம்ப தெளிவா, மல்டிப்லெக்ஸ் பார்வையாளர்கள் சங்கடப்பட கூடாதுங்கற மாதிரி எடுத்திருப்பார். ஒரு ஜனரஞ்சகமான முடிவு.
ஆனா Francois Truffaut அந்த ரூட்டுல போகல. பாரிஸ் நகர் என்றாலே, காதலருடன் கோலாகலமாக சாயங்கால வேளையில் மின்னும் ஐப்பில் டவரை பார்த்து ரசிக்கும் காட்சி தான் நம் மனதில் தோன்றும். சமீபத்தில் வெளிவந்த மணி ரத்தினத்தின் “ஓ காதல் கண்மணி” படத்திலும் கடைசியில் அவர்கள் எந்த ஊரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தார்கள்? பாரிஸ் தான் காதலர்களின் சரணாலயம்.
ஆனால் இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் பாரிஸ் வேறு விதமாக இருக்கும். பாரிஸ் நகரிலும் வறுமை உண்டு. பாரிஸ் நகருக்கு சுற்றுலா போவதற்கும், அங்கே வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. அது இந்த படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்.
இவ்வளோ பில்டப் தரீங்களே… யார் இந்த Francois Truffaut?
சினிமாவை நேசித்த ஒரு மனிதன். ஆரம்பத்தில் இவர் ஒரு சினிமா விமர்சகர்.
இவர் அல்ப்ரெட் ஹிட்ச்காக்கை நேர்காணல் செய்தது, ஒரு புத்தகமாக 1966இல் வெளியிட பட்டு, மிக பிரபலமானது. அதன் லின்க் இதோ – http://www.amazon.com/Hitchcock-Revised-Francois-Truffaut/dp/0671604295
ஒரு விமர்சகராக, பிரெஞ்சு படங்களை திட்டி திட்டி, இது குப்பை அது வேஸ்டு என்று சொல்லி, வெறுத்து போய், களைத்து போய், கடைசியில் இவரே சினிமா உருவாக்க கிளம்பிவிட்டார். “பிரெஞ்சு புதிய அலை” என்று சொல்ல படும் இயக்கத்திற்கு இவர் தான் முன்னோடி. முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் போல யாரேனும் அவரை உசுப்பேத்தியிருக்க வேண்டும், “ஒரு நாள் நீ படம் எடுத்து பாருய்யா!” என்று.
களத்தில் குதித்தார். அவரின் முதல் படம் தான் “தி 400 ப்ளோஸ்”. இந்த பிரெஞ்சு புதிய அலையில் வந்த இயக்குனர்கள், ஸ்டூடியோவில் படப்பிடிப்பை புறக்கணித்தார்கள். (பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் செய்தது போல்) யதார்த்தமான இடங்கள், தத்ரூபமான கதாப்பாத்திரங்களை விரும்பினார்கள். எது பொய்யோ, எது வெளி பூச்சோ அதை விடுத்தார்கள். விளிம்பு நிலை மக்கள் மைய்ய காதாப்பதிரங்கள் ஆனார்கள். உண்மையை தேடி அவர்களின் கேமரா அலைந்தது.
இந்த படத்திலும் பல காட்சிகளின் நிதர்சனம் உங்களை ஆச்சரியப்படுத்தும். “எப்படி இவ்வளோ தத்ரூபமா எடுக்க முடிஞ்சுது?” என்ற கேள்வியை எழுப்பும். இந்த காட்சி மட்டும் பாருங்க. பய்யன் பணம் திருடினதுக்கு டீச்சர் அவன கேள்வி கேக்குற காட்சி. அவன் பதில் சொல்லுற விதத்த பாருங்க.
இந்த காட்சியை எடுக்க Truffaut என்ன செய்தார் தெரியுமா? அந்த சிறுவனிடம் காட்சியின் மைய்ய கருவை விவரித்து விட்டு வசனங்களை அவனிடமே விட்டு விட்டாராம். இது தான் வசனம் என்று சொல்லிக்கொடுக்காமல் விடுவது, இயல்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்ததாக அவர் கருதினார்.
அப்படி பார்த்தா இந்த படம் Francois Truffaut படம்னு சொல்ல கூடாதே! நடிகனும் சேர்ந்து வசனம் எழுதியிருக்கானே?
ஆம். தமிழ் சினிமாவில் பாலசந்தர் பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள். இயக்குனர் என்றால் அவன் தான் பொம்மலாட்டக்காரன். நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் அவன் ஆட்டிப்படைக்கும் பொம்மைகள் என்று. இயக்குனருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். இயக்குனர் என்பவன் சினிமா உலகத்தின் சூரியன், அவரை சுற்றிதான் எல்லாம் சுழல வேண்டும். இது சினிமாவை அணுகும் ஒரு கோணம் மட்டும் தான்.
Truffaut போன்றவர்கள் சினிமாவை கூட்டு முயற்சியில் இயல்பாக உருவாகும் கலையாக பார்த்தார்கள். திட்டமிட்டு செதுக்க படும் சிலையாக இல்லாமல், தண்ணீர் ஊத்தி வளர்க்க படும் செடி போல. சினிமா என்னும் கலையை இவ்விரு கோணங்களில் பார்க்கலாம்.
“நான் தான் திரைக்கதை எழுதுவேன். நானே தான் இயக்குவேன்.” என்ற மனப்பான்மை தமிழ் சினிமாவில் ஊறிவிட்டது. தி 400 ப்ளோஸ் போன்ற படங்கள் தமிழில் உருவாகாமல் இருப்பதற்கு, அதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.
பாஸ்! போதும் உலக சினிமாவ புகழ்ந்தது. நம்ம கிட்டயும் பாலா, மணி ரத்தினம், வெற்றிமாறன் எல்லாம் இருக்காங்க…
தமிழ்ல நல்ல சினிமா இல்லைன்னு நான் சொல்லலியே. தமிழ்லயும் தி 400 ப்ளோஸ் மாதிரி ஒரு படம் வந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்…
பைசைக்கிள் தீவ்ஸ் (Bicycle Thieves) 1948
தி 400 ப்ளோஸ் ஒரு சிறுவன் ஈடுப்படும் திருட்டுகளை மய்யமா கொண்டிருந்துச்சு. பைசைக்கிள் தீவ்ஸ் இத்தாலிய சினிமா. இதிலும் திருட்டு உள்ளது.
இரண்டாம் உலக போர் முடிந்த இத்தாலி. ஒரு தொழிலாளியின் சைக்கிள் காணாமல் போகிறது. அந்த சைக்கிளை அவன் மகனுடன் சேர்ந்து தேடி அலைகிறான். அந்த சைக்கிள் இல்லாவிட்டால் அவனுக்கு வேலை இருக்காது. அந்த சைக்கிள் அவனுக்கு கிடைக்கிறதா இல்லையா? அதை திருடியவன் யார்? இது தான் கதை.
சைக்கிள்… காணாம போச்சு… வேல போயிடும்… தேடுறான்… இருங்க… இது தானே பொல்லாதவன் படத்தோட கதை?
ஆமாங்க. உடனே பாவம் வெற்றிமாறனுக்கு “காப்பி கேட்”ன்னு முத்திரை குத்திடாதீங்க. அவரே பைசைக்கிள் தீவ்ஸ் தான் பொல்லாதவன் பண்ண தூண்டிச்சுன்னு சொல்லிருக்கார். இதுவும் உலக சினிமாவின் ஒரு கூறு. அதன் கதையை நீங்கள் வேறு காலத்துக்கும் வேறு நகரத்திற்கும் புலம் பெயர்த்து எடுத்தாலும் அதன் ஆன்மா அப்படியே இருக்கும். இத்தாலியில் நடக்க கூடிய ஒரு கதையை சென்னைக்கு நேர்த்தியாக புலம் பெயர்த்திருக்கிறார் வெற்றிமாறன்.
இன்னொரு விஷயம். என்ன தான் காலம் இடம் என்ற கட்டுப்பாடுகளை தாண்டினாலும், உலக சினிமா ஒரு காலம் ஒரு இடத்துக்கு பொருந்தியே இருக்கும்.
என்ன பாஸ்? எஸ்.ஜே.சூரியா மாதிரி இருக்கு ஆனா இல்லன்னு சொல்லுறீங்க?
இருங்க தெளிவா சொல்ல முயற்சிக்கறேன்.
இரண்டாம் உலக போரின் ஒரு முக்கிய விளைவு வறுமை. வேலையில்லா திண்டாட்டம். சோறு தேடி வேலை தேடி அலையும் பெரும் மக்கள் திரள் இத்தாலியில் இருந்தது. இது அந்த காலகட்டத்தின் அந்த இடத்தின் நிலை. இதை தான் பைசைக்கிள் தீவ்ஸ் பிரதிபளிக்கிறது. சென்னையிலும் வேலையில்லா திண்டாட்டம் இருந்த சமயம். பட்டதாரிகள் அதிகம் இருக்கும் நிலையில், சென்னையில் பைக் வைத்திருப்பவனுக்கு அலுவகங்கள் முன்னுரிமை தந்தன. இதை தான் பொல்லாதவன் பிரதிபளிக்கிறது. ஆக இரண்டு திரைப்படங்களும் அந்தந்த காலத்தையும் இடத்தையும் குறித்தாலும், வேலையில்லா திண்டாட்டம் என்பது இரண்டிலும் ஊடுருவி இருக்கிறது.
ஆக, உலக சினிமா தோசை மாதிரிங்கறீங்க. சுடுறவங்கள பொருத்து, அந்த அடுப்பு பொருத்து, அங்கு கிடைக்கிற பொருட்கள பொருத்து, தோசையின் சுவை மாறலாம், ஆனா தோசை தோசை தான்.
சூப்பர்! கரெக்டா கேட்ச் பண்ணிட்டீங்க! போன இதழ்ல கணேஷ் பாபு படிமம் பத்தி எழுதியிருந்தார். அது போலவே நீங்களும் உலக சினிமாவுக்கு ஒரு படிமம் புடிஷ்டீங்க. பலே!
சரி பைசைக்கிள் திருட்டு போச்சு. வேற என்ன ஸ்பெஷல் இந்த படத்துல?
இந்த படத்தோட ஷூட்டிங்கும் பிரெஞ்சு புதிய அலை போலவே, ஸ்டூடிவுல இல்லாம, வெளிய நிஜ இடங்கள்ல அமெச்சூர் நடிகர்கள வெச்சு எடுக்க பட்டது. அதை தான் இயக்குனர் விட்டோரியோ டி சீக்கா விரும்பினார். காதல் படத்துக்கு நம்ம பாலாஜி சக்திவேல் தெரு தெருவா அலஞ்சு நடிகர்கள புடிச்ச மாதிரி.
இந்த படம் பல இயக்குனர்களுக்கு உந்துதலா இருந்திருக்கு. சத்யஜித் ரேலேர்ந்து, ஜாபர் பனாஹி, அனுராக் கஷ்யப் போன்ற இயக்குனர்களுக்கெல்லாம் இதுவொரு இன்ஸ்பிரேஷன். ஒரு நல்ல படைப்புக்கு இதுவும் ஒரு கூறு. அது உங்களை சும்மா இருக்க விடாது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் மண்டையை திரிஷா குடைவது போல, உங்களையும் உலக சினிமா குடஞ்சுக்கிட்டே இருக்கும்.
பாலு மகேந்திராவ கூட அது பாதிச்சிருக்கு. இந்த கட்டுரையில அவரே குறிப்பிடுகிறார் – http://filmmakerbalumahendra.blogspot.sg/2012/09/blog-post_7.html
அப்போ பைசைக்கிள் தீவ்ஸ் பாலு மகேந்திராவ கொடஞ்சிருக்கு. அது தான் அவர யதார்த்தமான படங்கள எடுக்க வெச்சுதோ?
இருக்கலாம்! இதுல இன்னொரு வினோதம் என்னன்னா, இந்த படத்தின் இயக்குனர் விட்டோரியோ டி சீக்காவை பல இயக்குனர்கள் பாதிச்சிருக்காங்க. அதில் சார்லி சாப்ளினும் ஒருவர். எப்படி சங்கிலி மாதிரி போகுது பாருங்க. இந்த வகையில் பார்க்கும் போது சினிமாவையோ கலையையோ ஒரு முடிவற்று ஓடும் நதி போல பார்க்கலாம். இந்த வீடியோ பாருங்க. எல்லா கலை படைப்புகளும் அதற்கு முன் உருவான படைப்புகளிலிருந்து உருவாகிறது என்பதை விஷுவலாக காட்டும் வீடியோ.
இவ்வளவு ஆராய்ச்சி தேவையா? படம் பார்க்க தியேட்டர் போறோம். “தெரி பேபி!” அப்படின்னு அந்த இரண்டு மணி நேரம் ஜாலியா போகும். அதோட விட வேண்டியது தானே?
நல்ல கேள்வி. கிரிக்கெட் பார்ப்பது போல தான். எத்தன சிக்ஸ் எத்தன போர்ன்னு ஜாலிய பாக்கிறவங்க இருக்காங்க. எந்த கிரிக்கெட் வீரர் எந்த நடிகையுடன் சுத்துறாருன்னு பாக்கிறவங்களும் இருக்காங்க. ஒவ்வொரு ஆட்டக்காரனின் நுட்பத்தை திறனை அலசி ஆராயும் வெறியர்களும் இருக்காங்க. அது போல தான். ஸோ நீங்க தே தாரே வாங்கி வரும் போது, உங்க முன்னாடி பல மேசைகள் இருக்கு. அதில் எந்த மேசையில உட்கார்ந்தா உங்களுக்கு ஜாலியோ, அதுல உட்காருங்க.
ஆமா, இந்த உலக சினிமான்னு வந்தாலே ஒரு டைப்பான படத்த தான் சொல்லுறீங்க. வறுமை. நிதர்சனம். ஆன்மா. அப்படி இப்படின்னு. அது ஏன் ரொம்ப சீரியஸான படத்த மட்டும் உலக சினிமா லிஸ்ட்ல போடறீங்க? சிரிப்பான உலக சினிமா எதுவும் இல்லையா?
ரைட்டு! உங்கள் குற்றசாட்டை நான் ஏற்றுகொள்கிறேன். அடுத்த பாகத்துல ஒரு சிரிப்பான உலக சினிமா பற்றி பார்க்கலாம். நிறைய மக்களை சிரிக்க வைத்தவருடைய சினிமா! யாருன்னு தெரியுதா?