வெரோனியாவதாரம்

“நாராயண! நாராயண!” என்று ஜபித்தார் விஷமம் நிறைந்த முனி.

உலகத்தைக் காத்து ரட்சிக்கும் பெருமான் தனது கமலக் கண்களை மெல்லத் திறந்தார். அவரின் கனிவான பார்வை நாரதரின் மீது விழுந்தது. அவரைக் கண்டதும், சங்கு சக்கரதாரி மெல்லியப் புன்னகை ஒன்றை வீசினார்.

“பாம்பு படுக்கை மீது சாய்ந்தபடி உறங்கும் பெருமாளே! உனது பாதங்களில் சகல கவலைகளையும் சாய்த்த நிம்மதியில் உறங்குகிறது உலகமே… அப்புனிதப் பாதங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!” நாரத முனி கைகளைக் கூப்பி தலைவணங்கினார். “வணக்கத்தைத் தவிர வேறு எதை நான் உனக்கு அர்ப்பணிக்க? உனதல்லாது என்ன இருக்கிறது இவ்வுலகில், விஸ்வரூபா?”

எல்லாச்செல்வங்களையும் அடக்கி ஆளும் தேவியின் பதி, நாரதரின் வணக்கத்திற்கு தலை அசைத்தார். அடுத்தபடியாக நாரதர் பெருமாளின் பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த செல்வம் தரும் தேவியை புகழ்ந்து பேசி, அவளின் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.

“என்ன விஷயம் நாரதா?” அனைத்தும் அறிந்த லோகபிரபு கேட்டார், “நீ இங்கு வந்ததன் காரணம் என்னவோ?”

“வெண்ணெய் உண்ணும் வெண்மகனே! உனது கல்கி அவதாரத்திற்கு நிகழ்ந்த பெரும் சோகத்தை நான் கேட்டறிந்தேன்… என்ன சொல்வது… தேவர்கள் சொல்லில் அடங்காத் துயரில் தவித்துப் போயிருக்கிறார்கள். இப்பெரும் தவறை இழைத்த மனிதகுலத்தை, உனது அளவில்லா கருணையால் மன்னிக்க வேண்டுகிறேன், புருஷோத்தமா!”

“என்ன திமிர் இந்த மனிதர்களுக்கு?! அவர்களும், அவர்களது கருக்கலைப்பு விஞ்ஞானமும்… ச்சே!” வெறுப்பை கக்கினாள் லெட்சுமி தேவி, “கருவிலே ஒரு உயிரை அழிப்பதா? மனிதனுக்கு அகந்தை பெருகிவிட்டது… கம்சன் கூட தங்கையின் குழந்தைகளை பிறந்தபின்தான் சுவற்றில் தூக்கி அடித்தான்!”

“ஏதோ சாதாரண கரு என்றால் கூட பரவாயில்லை தேவி. ஒரு அவதாரத்தைக் கருக்கலைப்பு செய்திருக்கிறார்களே! அதுவும் கல்கி அவதாரத்தை!” நாரதரின் குரல் நடுங்கியது. “கலி இதைவிட முத்த முடியுமோ? இப்பொழுது என்ன நடக்கும் பிரபு? மாயர்கள் கூறிய டிசம்பர் 21ஆம் தேதியும் கடந்து விட்டது. தங்களை மீண்டும் ஓர் அவதாரத்தில் காண எப்பொழுது பாக்கியம் கிட்டும்? அதுவும் கடைசியாக ஓர் அவதாரம்…”

ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து, உலகத்தை கடலுக்கடியிலிருந்து ஒரு காலத்தில் மீட்டுத் தந்த வராகன், தற்போது நாரதரின் கேள்விக்குப் பதிலாக ஒரு புன்னகை மட்டுமே தந்தார்.

“அதானே! கடவுளின் செயல்களின் சூக்ஷமத்தை யாரால் புரிந்துகொள்ள முடியும்!” நாரதமுனியும் புன்னகைத்தார். “நல்லதே நடக்கும். தாங்கள் இருக்க பயமேன்!”

“பத்மனாபா! உன்னை கண்ட பரவசத்தில், நான் வந்த வேலையை மறந்துவிட்டேன்!” தனது தலையில் தட்டிக்கொண்டார் நாரதர்.

”அசுரர்களின் வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்கும் அளவிற்கு, தேவலோகமும் தொழில்நுட்பரீதியாக வளரவேண்டும் என்று குரு ப்ரஹஸ்பதி எண்ணுகிறார். ஆதலால், பிரஜாபதியின் மேற்பார்வையில், எல்லா ஏற்பாடுகளும் நடந்துவிட்டன. தேவலோகத்தில் இணையம் அமைக்கப்பட்டு, எல்லோருக்கும் ஒரு ஈ-மெயில் வழங்கப்பட்டு விட்டது! இனி பிரச்சனை என்றால், யாரும் வைகுண்டத்திற்கு மூச்சிறைக்க ஓடிவரத் தேவையில்லை. லாகின் செய்து, பெருமாளுக்கு ஒரு மெயில் தட்டினால் போதும்.”

“ஈ-மெயில் சரி… இந்த ஃபேஸ்புக்கென்று ஏதோ சொல்கிறார்களே… அதுவும் உண்டா?” இளித்துக்கொண்டே லெட்சுமி தேவி கேட்டாள்.

“ம்ம்.. எல்லாம் உண்டு தேவி. இது தான் அப்டேட் பகவானே!” நாரதர் தொடர்ந்தார், “தங்களுக்கு எந்த வலைத்தளத்தில் அக்கௌன்ட் வேண்டும் என்று கேட்கத்தான் வந்தேன். பேஸ்புக்கா, ட்விட்டரா, கூகிள் பிளஸ்ஸா? இல்லை திரிமூர்த்திகளுக்கு மூன்றிலும் அக்கௌன்ட் ஓப்பன் செய்துவிடலாமா?”

விஷ்ணுவால் சடாரென்று பதில் சொல்ல முடியவில்லை. குழப்பத்தில் சற்று தயங்கினார். பிரம்மாவின் சகல படைப்புகளிலும் விஷ்ணுவின் மனதிற்கு மிக நெருங்கிய படைப்பு நாரதன் தான். (லெட்சுமி தேவி பாற்கடல் கடையும் பொழுது வெளிவந்ததால், அவரை பிரம்மாவின் படைப்பென்று கணக்கில் எடுத்து கொள்ள முடியாது!) விஷ்ணுவிற்கு நாரதனிடம் பிடித்த விஷயமே அவன் ஒரு நிகரில்லா கலகக்காரன். சமநிலை ஏற்படும்பொழுது அமைதியை குலைப்பவன். அமைதி குலைய வேண்டும். அப்பொழுதுதான் சமநிலையை திரும்ப வரவழைக்க முடியும். ஏதும் நிலைகுலையாவிட்டால் திரிமூர்த்திகளின் வாழ்க்கை சலிப்படையாதோ?

மிகுந்த யோசனைக்குப்பின், “லெட்சுமியை கேட்போம்” என்று விஷ்ணு பரிந்துரைத்தார். இக்காட்சியை ஞானதிருஷ்டியால் பார்த்துக் கொண்டிருந்த பல கவிமுனிகள், பெண்ணின் கருத்துக்கு முக்கியத்துவம் தரும் பிரபுவைப் போற்றி சட்டென்று வரிகள் எழுதத் துவங்கினர்.

“ஃபேஸ்புக்!” என்று பதில் அளித்தாள் லெட்சுமி தேவி, முன்னரே முடிவு செய்துவைத்ததுப்போல்.

“தேவியின் சித்தமே எனது சித்தம்…” என்றார் பிரபு.

“கல்லிலும் இருப்பவனே! புல்லிலும் சிரிப்பவனே! உனது புகழ் இப்பொழுது ஃபேஸ்புக்கிலும்…”

“நாரதா! என்ன கூறினாய்?” அதுவரை அமைதியாக அனந்தசயனத்தில் இருந்த விஷ்ணு, நிமிர்ந்து உட்கார்ந்தார். பிரபு எதை கேட்கிறார் என்று புரியாமல், நாரதர் சற்றுத் தயங்கினார்.

“இப்பொழுது என்னை புகழ்ந்து ஒரு வாசகம் கூறினாயே…”

தவறாய் ஏதேனும் கூறிவிட்டோமோ என்ற அச்சம் நாரதருக்கு ஏற்பட்டது. “கல்லிலும் இருப்பவனே… புல்லிலும் சிரிப்பவனே என்றேன்…”, என்று மற்றொரு முறைக் கூறினார்.

விஷ்ணு லெட்சுமியை திரும்பி பார்த்தார். மணாளனின் கண்களை படித்தவுடன் லெட்சுமி தேவி புன்னகைத்தாள். இரு கரங்களையும் ஒன்றிணைத்துத் தட்டினாள். உடனே எங்கிருந்தோ சங்கு ஒன்று முழங்கியது. விஷ்ணு கண்களை மூடி, நிஷ்டையில் அமர்ந்தார்.

கலங்கிய கண்களும் கூப்பிய கைகளுமாய் நாரதமுனி பார்த்திருக்க, பெருமாளின் எல்லையில்லா நெஞ்சிலிருந்து ஓர் ஒளிப் பந்து வெளிப்பட்டது. வைகுண்டத்தின் கதவுகளை நோக்கி அப்பந்து பறக்க, முழங்கும் சங்கோடு பற்பல இசைக்கருவிகள் இணைய, வானெங்கும் அந்த தெய்வீக கச்சேரி ஒலிக்க, ஜயனும் விஜயனும் வைகுண்டக் கதவுகளைத் திறக்க, அந்த ஒளி பந்து பூமியை நோக்கிப் பறந்தது.

***

14 வருடங்களாக தூக்கமில்லா உழைப்பும், ஆராய்ச்சியும், பொறுமையும் அவரை மேரு மலையின் உச்சியில் நிற்கவைத்து, அவர் கண்முன் இருந்த அக்காட்சியைக் காணவைத்தது. என்ன ஒரு தருணம்! ஆர்க்கிமிடீஸ் ‘யூரேக்கா’ என்றலறியபடி அம்மணமாக ஓடியதும், ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் முதலடி எடுத்துவைத்ததும் போல, இதுவும் ஒரு சரித்திரத் தருணம். இத்தருணத்தின் நாயகன்தான் டாக்டர் வியாஸ். அவர் கண்முன் இருந்தது பளிச்சிடும் ஒரு செடி. பின்னர் அன்போடு அந்த செடியிற்கு ‘வியாசானோ வெரோனிகாஸ்திரம்’ என்று பெயரிட்டார் (இது அறிவியல் பெயர். பொதுப்பெயர் சுருக்கமாக ‘வெரோனி’). அது மட்டும்தான் செய்தார் டாக்டர் வியாஸ். அந்த செடியைக் கண்டுப்பிடித்து, அதற்கு தனது பெயரையிட்டு, பிறகு சுவிட்சர்லாந்தில் ஒரு பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்கக் கிளம்பிவிட்டார்.

ஆரம்பத்தில் வெரோனி செடியைப் பற்றி பெரிதாய் கூறுவதற்கு ஏதுமில்லை. டாக்டர் வியாஸ் அதை கண்டுப்பிடித்தபோது அச்செடிக்கு – ஒரு விஞ்ஞான இணைய இதழில் மூன்று வரிகள், ஒரு பிரிட்டிஷ் ரேடியோத் தொடரில் இரண்டு நிமிடங்கள் – இவை மட்டுமே கிடைத்தன. நறுமணம் சற்று தூக்கலாக இருந்தது. குறிப்பிட்ட வகை வெள்ளை பட்டாம்ப்பூச்சிகள் மட்டுமே அச்செடியில் அமர்ந்தன. வெரோனி செடியை பற்றி எல்லோருக்கும் தெரிந்தது இவ்வளவுதான்… டாக்டர் பரசு வரும் வரை.

டாக்டர் பரசு தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்திகொள்ள வேண்டும் என்ற கனவுடைய ஒரு விஞ்ஞானி. அதனால் ‘வாசனை மருத்துவம்’ என்ற துறையில் பயிற்சி மேற்கொண்டார். சில பல பூக்களின் வாசனைகளையும், மனித உடலில் அவை உண்டாக்கும் வேதி வினைகளையும் அலசி ஆராய்வது அவரின் முழுநேர பணி. ஒரு நாள் சகஜமாக ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், வெரோனி செடியை பற்றி கேள்விப்பட்டார். மேரு மலையை சுற்றி வாழ்ந்த ஆதிவாசிகளிடையே ஒரு நம்பிக்கை பரவியிருந்தது போலும். வெரோனி செடியின் வாசம் உடல் வலியை குறைக்கும் என்று. டாக்டர் பரசு உடனே குதித்தெழுந்து (ஆரக்கிமிடீஸ் போல) ஒரு குழுவை கூட்டி, மேரு மலைக்கு பறந்தார். சில வெரோனி பூக்களை கிள்ளியெடுத்து சோதனைகள் நடத்தினார். சில ஆய்வு கட்டுரைகளும், சில மாநாடுகளும் நிறைவேறியபின், வெரோனி செடிக்கு வலி நீக்கி தன்மை இருப்பது தெள்ளத் தெளிவானது.

வெரோனியைப் பற்றி மேலும் ஆராய்ச்சி நடக்கத் துவங்கியது. அச்சமயம், லாஸ் ஏஞ்சலஸ்ஸில் ஒரு பப்பில் ஓரமாக ஐ-பாட்டில் ஃபேஸ்புக்கைத் தடவிக்கொண்டிருந்த ஒரு திரைக்கதை எழுத்தாளரின் கண்களில், டாக்டர் பரசு எழுதிய கட்டுரை சிக்கியது. நல்ல வேளை, அவர் முழு மப்பில் இல்லாததாலும், அவருக்கு வாழ்வில் வெற்றிகொள்ள வேண்டும் என்ற வேட்கை இருந்ததாலும், அந்த ஒரு வினாடி ஒரு பிரம்மாண்டமான, உலகையே மிரள வைக்கும் ஹாலிவுட் திரைப்படம் உருவாக விதையானது. அத்திரைப்படத்தில் கதாநாயகன் வெரோனி செடியின் சக்தியைக்கொண்டு, வெள்ளி கோளிலிருந்து வந்த வேற்றுகிரக வாசிகளை விரட்டி விரட்டி அடிக்கும் காட்சிக்கு, விமர்சகர்கள் ஆஹா-ஓஹோ என்றனர். ஹாலிவுட் சரித்திரத்திலேயே சிறந்த புல்லரிக்கவைக்கும் காட்சிகள் பட்டியலில் 7-வது இடத்தை பெற்றது அக்காட்சி. இது வெரோனி செடியைப் பற்றி பொதுமக்கள் வைத்திருந்த பிம்பத்தை மெருகேற்றியது.

சில மாதங்களுக்குள், வெரோனியைப்பற்றி ஆச்சரியகரமான பல கண்டுப்பிடிப்புகள் வெளிவந்தன. அவற்றைக் கேட்டு ஊடங்கங்களுக்கு வாழை தோப்பைக் கண்ட யானைகளைப்போல் குஷி ஆகிவிட்டது. வெரோனி ஐஸ் க்ரீமின் சுவையைக் கூட்டுகிறது! வெரோனியை தண்ணீருக்கடியில் வளர்த்தால், நீர் மாசுபடுவதை தடுக்கிறது! வெரோனி இதை செய்கிறது! வெரோனி அதை செய்கிறது! பேச்சுவழக்கில் ‘வெரோனி’ என்ற வார்த்தையை ‘பன்முக திறமை’ அல்லது ‘ஆற்றல் மிகுந்த’ என்ற அர்த்தத்தில் மக்கள் உபயோகிக்கத் துவங்கினர்.

“மச்சி எப்படி உனக்கு அது தெரியும்? செம்ம வெரோனி ஆகிட்டப்போ!”

“23 சிக்ஸர்! வாவ்! கேப்டன் தோனிதான் நம்ம #வெரோனி!”

இவ்வாறு வெரோனி பேச்சிலும், சமூக வலைதளங்களிலும் சகஜமானது. (சில வட்டாரங்களில், ஒரே நேரத்தில் பல பெண்களுடன் சுற்றும் வாலிபர்களுக்கும் ‘வெரோனி’ என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.)

இந்த வெரோனி மயக்கம் உண்டாக்கிய இன்னொரு விளைவு, அது வளரும் மேரு மலையை நோக்கி பல கும்பல்கள் பாய்ந்தன. விதவிதமான கும்பல்கள். வலிநிவாரண தைலம் தயாரிக்கும் கம்பெனிகள், ஐஸ் கிரீம் மற்றும் சாக்லெட் உற்பத்தியாளர்கள், திரைப்பட யூனிட்டுகள், செய்திக் குழுவினர், ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள், மற்றும் ‘இயற்கையை தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று கொடிப்பிடிப்பவர்கள். இன்னொரு கோஷ்டியும் இருந்தது. வெரோனி செடிகள் மிக குறைந்த அளவில் மட்டுமே வளர்ந்ததால், சில விஞ்ஞானிகள் அதன் டீ.என்.ஏவோடு விளையாடி, பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியுமா என ஆராய்ந்தார்கள். பல பாராளுமன்றகளிலிருந்தும் வலைதளங்களிலிருந்தும் பணம் மேரு மலைக்குப் பறந்தது. சில நாட்களில் மரபு மாற்றப்பட்ட வெரோனி செடிகளை உண்டாக்க ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள். அப்போது தான் அந்த திடிக்கிடும் தகவல் வெளிவந்தது.

உலக அரசாங்கங்கள் அத்தகவலை மூடிமறைக்க முயன்றன. ஆனால் விக்கிலீக்ஸ் தனது வேலையைச் செய்தது. வெரோனி செடி அணுகுண்டுகளை மேலும் சக்திவாய்ந்ததாக ஆக்கும் என்பதே அந்த ஆராய்ச்சித் தகவல். மேரு மலை இருந்த அந்த சிறிய தேசம் திடீரென்று சகல உலகத்தின் கவன வட்டத்திற்குள் வந்தது. மேரு மலை இருந்த தேசத்திற்கு பக்கத்து தேசங்களில் திடீரென்று எல்லை தகராறுகள் தோன்றின. பக்கத்தில் இல்லாத தேசங்கள் மேரு மலை தேசத்திற்கு ஆதரவு தெரிவித்தன. மிக தொலைவில் இருந்த மற்ற தேசங்களோ, மேரு மலையில் அணுகுண்டு ஆயுதங்கள் இருக்குமோ என்று சந்தேகித்தன.

சமயக்குழுக்கள் கேடு விளைவிக்கும் வெரோனி செடியை வேரோடு பிடுங்கி எறிய அலறின. தீவிரவாத இயக்கங்கள் அச்செடியின் கொட்டைகளை கைப்பற்ற திட்டங்கள் தீட்டின. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுக்கள் வெரோனியை சட்டமுரண்பாடின்றி உபயோகிக்க அறிக்கைகள் விட்டன. இவை யாவும் தெரியாமல் மலையருகே வாழ்ந்த ஆதிவாசிகளோ, வெரோனி செடியை தெய்வமாய் வணங்கினர்.

நிலைமை கைமீறி எப்போது போனதென்றால், வெரோனி பற்றிய வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஏதோ இரண்டு தேசங்கள் போர் அறிவிப்பு செய்தன. அவ்விரு தேசங்களின் உண்மையான பிரச்சனை வெரோனி செடி அல்ல, அவர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கும் வேறு ஏதோ ஒரு விஷயம்தான் காரணம், என்று ஒரு பி.பி.ஸி செய்தியாளர் கருத்துத் தெரிவித்தார். அவரை கண்டுக்கொள்ளாமல் சில வாரங்களில், பல தேசங்கள் போரில் குதித்தன. எல்லோரும் பல காலமாக பேரச்சம் கொண்டிருந்த மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.

இந்த கோலாகலமெல்லாம் தன்னைச் சுற்றி நடக்க, மேரு மலை இருந்த நாடு அமைதியாய் நடுநிலை காத்துவந்தது. திடீரென்று ஏதோ ஒரு தேசம் மேரு மலை மீது குண்டு போட முடிவெடுத்தது. “எல்லா பிரச்சனைகளுக்கும் அந்த மலை தான்டா காரணம்! வெடிங்கடா அத!” என்று அலறினர். இதை அறிந்த வேறு சில தேசங்கள், “மவனே! மேரு மலை மேல எவனாச்சும் குண்டு போட்டீங்க, அப்புறம் உங்க வீட்டுலயும் விழும்” என்று மிரட்டினர்.

ஆகமொத்தத்தில், டிசெம்பர் 21, 2013 அன்று அது நடந்தது. எல்லோரும் சேர்ந்து குண்டு போட்டனர். மக்கள் இறந்தனர். மேரு மலை ஆதிவாசிகள் பயத்தில் மலை மீது ஒன்று கூடினர். மலையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அணுகுண்டுகள் வீசப்பட்டிருந்தன. நான்கு திசைகளிலிருந்தும் புகை மண்டலம் மேரு மலையை நோக்கி விரைந்தது. ஆதிவாசிகள் நடப்பது புரியாமல் பயத்தில் கண்களை மூடிக்கொண்டனர்.

அந்த அணுகுண்டு புகை மண்டலம் மேரு மலையின் அடிவாரத்தை வந்தடைந்தவுடன், அப்படியே நின்றது. ஆதிவாசிகள் மூடிய கண்களை திறந்து ஆச்சரியத்துடன் அக்காட்சியைப் பார்த்தனர். மலையின் மீது வளர்ந்த வெரோனி செடிகள் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத காப்புச்சுவரை உண்டாக்கியதுபோல், புகை மண்டலத்தை தடுத்து நிறுத்தின. எல்லா அணுவலைகளையும், புகையையும் அந்த வெரோனி செடிகள் தங்களுக்குள் இழுத்துக்கொண்டன. புகையெல்லாம் மறைந்தபின், ஆதிவாசிகள் இன்னும் மூச்சு விட்டுக்கொண்டுதான் இருந்தனர். ஏதும் நடக்காததுபோல் அந்த வெரோனி செடிகளும் காற்றில் ஆடின. உடனே எல்லா ஆதிவாசிகளும் குனிந்து ஒவ்வொரு வெரோனி செடியின் அடியையும் முத்தமிட்டனர்.

***

“அதுனால தான் பேராண்டி, நாம எல்லாரும் இன்னமும் உயிரோட இருக்கோம்! இந்த முழு உலகமே புகையால சூழ்ந்திருந்தப்போ… பகவான் இந்த வெரோனி செடிங்க உருவத்துல வந்து, நம்ம எல்லாரையும் அழிவிலிருந்து காப்பாத்தினார்”, என்று தன்னிலை மறந்து பேசினார் கிழவனார். “இந்த செடிங்க புகையையும், வெப்பத்தையும் மட்டும் உள்வாங்கிக்கல, நம்மோட பாவங்களையும் தான்! எல்லாம் எதுக்காக பேராண்டி? நாம நிம்மதியா மூச்சு விட்டு வாழ்வதுக்காக. அதுனால தான் சொல்லுறேன், நம்ம எப்பவுமே இந்த வெரோனி செடிகளுக்கு கடன் பட்டிருக்கோம்.”

கிழவனாரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த இளைஞன், இறுகிய புருவங்களோடு அவரைப் பார்த்தான். “எப்படி முழு உலகத்தையும் புகை சூழ முடியும்?” என்று அவன் மனதில் சந்தேகம் வந்தது. அது மட்டுமில்லாமல் பல கேள்விகள் அவன் கபாலக் காட்டில் பாய்ந்துத் திரிந்தன. “கடவுள் எப்படி திடீருன்னு இந்த செடிகளுக்குள்ள வந்தார்? அப்படி அவர் வந்திருந்தா, எங்கிருந்து வந்தார்? எங்கிருந்து அந்த புகை மண்டலம் வந்திச்சு? ஏன் கடவுள் எல்லாரையும் சாகவிட்டுட்டு, நம்ம இனத்தை மட்டும் வாழ வெச்சார்? அதான் நம்ம நகரத்த சுத்தி பலமான செவுருகளக் கட்டியாச்சே… இன்னும் எதுக்கு இந்த வெரோனி செடிகள் தேவை? ஏன் நம்ம தெனமும் செடிகள…”

ஒரு மென்மையான வளையல் அணிந்த கை அந்த இளைஞனின் தோளை லேசாக தொட்டது. அவன் திரும்பி அவளை பார்த்தான். லெட்சுமி கடாட்சம் நிறைந்த அவள் புன்னகையைக் கண்டதும், அவன் மனதிலிருந்த கேள்விகள் அனைத்தும் மறைந்தன.

***

Leave a Reply

%d bloggers like this: