This is an article in the April edition of Serangoon Times (a Tamil magazine in Singapore). I read 6 Singapore short story collections in English and Tamil and wrote down my thoughts on the similar themes in these books.
சமீபத்தில் சில சிறுகதைத் தொகுப்புகளை படிக்கும் போது எனக்கு சிங்கப்பூர் எம்.ஆர்.டியின் வரைபடம் நினைவுக்கு வந்தது. வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட ரயில் பாதைகள், வெவ்வேறு வளைவுகள், பல இடங்களில் ஒன்றுடன் ஒன்று இணையும் நிறுத்தங்கள். இத்தொகுப்புகளின் கதைகள் வெவ்வேறு கருக்களை கொண்டிருந்தாலும், பொதுவான சில புள்ளிகளில் சந்திப்பதாக தோன்றியது. அப்புள்ளிகளை ஆராயலாமே என்ற எண்ணம்தான் இக்கட்டுரை.
பெரும்பாலும் பல்லின கதாப்பாத்திரங்கள் கொண்ட சிங்கப்பூர் சிறுகதைகளைப் படிக்கும் போது எனக்கு பிரியா படத்தின் பாடல் வரி நினைவுக்கு வரும். “சீனர் தமிழர் மலாய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் சேர்ந்து வாழும் சிங்கப்பூர்!” இவ்வாறான கதைகள் போட்டிகளுக்காக எழுதப்பட்டிருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. அம்மாவுடன் ஸ்கைப்பில் பேசும்போது, என் அறையில் எந்தப் பக்கம் குப்பையாக இல்லையோ அந்தப் பக்கம்தான் காமிராவை நான் திருப்புவேன்.
அப்படி காமிராவை திருப்பி எதையும் மறைக்காமல், உள்ளதை உள்ளபடி லதா “நான் கொலை செய்யும் பெண்கள்” தொகுப்பில் எழுதியுள்ளார். மலாய் குடும்பத்தின் வீட்டில் ஓர் அறை மட்டுமே வாடகைக்கு எடுத்துத் தங்கும் இந்திய பெண்ணின் கதை தான் “அறை”. மலாய்க்காரர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும், பெரிதாகப் பேச்சுவார்த்தை நடத்தாமல் அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறாள். வாடகை கொடுக்கும் போது மட்டும் சில வார்த்தை பரிமாற்றங்கள். ஒரு கட்டத்தில் வீட்டின் உரிமையாளர் இறந்தது கூட தெரியாமல் அறைக்குள்ளே இருக்கிறாள். திடீரென்று அறையின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தால் உறவினர்களின் கூட்டமும் ஒப்பாரியும். தன்னையே அறை ஒன்றிற்குள் பூட்டிக்கொண்டு வெளியுலகில் பயணிக்கும் அனைவரின் பிரதிநிதியாக இக்கதையில் வரும் பெண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதே போன்ற பெண் லதாவின் இன்னொரு கதையிலும் வருகிறாள். “பயணம்” என்கிற இக்கதையில், கனமான பைகளை சுமந்தபடி சீன டாக்சி ஓட்டுநருடன் பயணிக்கிறாள். அனுபவங்களை பகிர்ந்துகொண்டாலும், அப்பெண்ணுக்கும் சீன டாக்சி ஓட்டுநருக்கும் இடையே கண்ணுக்கு தெரியாது சுவர் இருக்கவே செய்கிறது.
எம்.கே.குமாரின் “5.12pm” தொகுப்பில் வரும் “நல்லிணக்கம்” சிறுகதை அந்தக் கண்ணுக்கு தெரியாத சுவரை அங்கத கண்ணாடி வழியே பார்க்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. அனைவரும் நல்லிணக்கத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நக்கலடிக்கும் கதை இது. (பிரியா பட பாடலை இங்கே நினைவுகூரலாம்!) திரு.டேவிட் அவர்களின் வீட்டுக்கு எம்.பீ வரவிருக்கும் நேரத்தில், ஒரு குரங்கு வந்துவிடுகிறது. அதைச் சுற்றி ஒரு கூட்டமே கூடுகிறது. சீன பாட்டியும், மலாய்க்காரரும், எதிர்வீட்டுத் தமிழ் பெண்மணியும் ஆளுக்கொரு விதமாக குரங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் தமிழ் பெண்மணிக்குக் குரங்கு மீது கோபம். தான் கொடுத்த வாழைப்பழத்தை வாங்காமல், சீன பாட்டி கொடுத்த ஆரஞ்சை வாங்கிவிட்டதாம்!
Jeremy Tiang எழுதிய “It Never Rains on National Day” தொகுப்பில் வரும் “National Day” என்கிற கதை, இங்குப் பிறந்து வளர்ந்தவர்களுக்கும், வேலைக்காகக் குடியேறி வந்தவர்களுக்கும் இடையே சில சமயங்களில் ஏற்படும் இறுக்கத்தைச் சுட்டுகிறது. தேசிய தினத்தன்று, கட்டட தொழிலாளிகள் ஒரு குழுவாக அருகிலிருக்கும் தீவுக்கு செல்கிறார்கள். அங்கிருந்து வானவேடிக்கைகளை பார்த்துவிட்டு, உணவு சாப்பிட்டு இரவைக் கழிப்பது தான் திட்டம். குளிர்காய்வதற்குச் சிறிய தீ மூட்டியதும் அங்கிருக்கும் இன்னொரு கும்பலை சேர்ந்த ஒருவர் ஓடி வந்து “இங்கு தீ பற்ற வைக்கக் கூடாது!” என்கிறார். “நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லையே” என தொழிலாளிகள் சொல்லியும், “தீ பற்ற வைக்கக்கூடாது என்பது விதி! விதிகளைக் கடை பிடிக்கமுடியாவிட்டால் உங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்லுங்கள்!” எனக் கோபமாக கத்துகிறார். அவரிடம் வாதிட முடியாமல் அனைத்துவிடுகிறார்கள்.
“மோர்கன் எனும் ஆசான்” கதையிலும் இதே “நீயா நானா” தான். ஆனால் இருவேறு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் அல்ல. தமிழர்களுக்குள்ளேயே பிரிவினை! சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த ‘மோர்கன்’ என்னும் முருகன், இந்தியாவிலிருந்து வந்தவர் மளமளவென வளர்ச்சியடைவதைக் கண்டு பாதிப்படைகிறார். மோர்கன் மீது தீர்ப்பேதும் அளிக்காமல் எழுதிப்பட்டிருக்கும் அருமையான கதை. “5.12pm” தொகுப்பின் மிகச் சிறந்த கதையும் இதுவே.
லதாவும் எம்.கே.குமாரும் விவரிக்கிற பிரிவினைகளை “மாறிலிகள்” தொகுப்பில் இரு கதைகளில் சித்துராஜ் பொன்ராஜ் தகர்த்தெறிய முயல்கிறார். இன எல்லைகளைதாண்டி நடக்கும் உரையாடல்கள்தான் “இரண்டாம் வாய்ப்பாடு”. இந்திய ஆணுக்கும் பிலிப்பினோ பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்கிறது. இருவரும் என்.யூ.எஸ்ஸில் ஆராய்ச்சி செய்பவர்கள். நன்கு படித்தவர்கள். ஆனாலும் இந்திய ஆண்மகனுக்கு பிலிப்பினோ பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் ஏதோவொரு மனத்தடை இருக்கிறது. வீட்டில் தீபாவளி கொண்டாடுவது போல மனதில் கற்பனை செய்து பார்க்கிறான். அம்மா சமைத்துக்கொண்டிருப்பாள், அப்பா ஏதாவது படித்துக்கொண்டிருப்பார், தங்கை பட்சணம் தின்பாள். இந்தச் சூழலில் தனது பிலிப்பினோ காதலி பொருந்தவேமாட்டாள் என நினைக்கிறான். இந்திய ஆணுக்கும் ஜப்பானிய பெண்ணுக்குமான காதலைச் சொல்லும் கதை “தாளோரா நாரைகள்”. சித்துராஜ்ஜின் இரு கதைகளிலும் இடைவெளிகளைத் தாண்டிச்செல்ல கதைமாந்தர்களிடம் ஏதோவொரு மனத்தடை தெரிகிறது.
2014ல் சிங்கப்பூர் இலக்கிய விருது வென்ற “Ministry of Moral Panic” என்ற தொகுப்பை எழுதிய Amanda Lee Koeவும் இதே மனத்தடையைத் தொட்டிருக்கிறார். “Every Park on This Island” கதையில் சிங்கப்பூர் யுவதியும் அமெரிக்க இளைஞனும் சிங்கையிலுள்ள ஒவ்வொரு பூங்காவாக சுற்றுகிறார்கள். அவர்களுள் நடக்கும் உரையாடல் தான் கதை. ஒரு நாள் உணர்வுகள் பொங்க செடிகளுக்கு நடுவே தீண்டல்கள் சூடு பிடிக்கின்றன. ஆனால் ஏனோ தொடர முடியாமல், அமெரிக்க இளைஞன் தலையை குனிந்தபடி உட்கார்ந்துகொண்டு “என்னால் ஆசிய பெண்ணுடன் முடியாது“ என்கிறான். இக்கதையில் வரும் ஆசிய அமெரிக்க பரிமாற்றங்கள் அருமை. “சிங்கப்பூரைப் பற்றி சொல்” என்று அவன் கேட்க, “சிங்கப்பூரில் எளிதாக நடக்கலாம். மியூசியம், மால், எங்க வேணாலும் நடக்கலாம். ஆனா மியூசியம்ல உண்மையா எதுவும் இல்ல. மால் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்” என்பாள். அவள் அமெரிக்கா பற்றிக் கேட்கும் போது, “என் ஊர்ல ஏர்போர்ட் கூட கிடையாது. பக்கத்து மால்க்கு போக அரை மணி நேரம் கார் ஓட்டிக்கிட்டு போகணும். அதுவும் 4 மாடி தான் இருக்கும். உன்னால கற்பனை செஞ்சு பார்க்க முடியுதா? இங்கயே இருந்துடலாமான்னு தோணுது” என்பான் அமெரிக்க இளைஞன். வெவ்வேறு கண்ணோட்டங்கள்!
இதுவரை பார்த்த கதைகள் போலல்லாமல், இடைவெளிகளை உணர்வுகளால் தாண்டிவிடலாம் எனக் காட்டுகிறது “Birthday”. “Corridor: 12 short stories” என்கிற தொகுப்பில் Alfian Sa’at எழுதிய கதை. கலா என்கிற இந்திய பெண்ணுக்கும் ரோஸ்மினா என்கிற இந்தோனேசிய பெண்ணுக்கும் வேலையிடத்தில் ஏற்படும் நட்புதான் கதையின் கரு. வேலையில் சேரும் ரோஸ்மினா கர்ப்பமாக இருக்கிறாள். பிள்ளை பெற்றெடுக்க வேண்டும் என்கிற ஆசையோடு இருக்கும் கலாவிற்கு, உப்பிய வயிறுடன் ரோஸ்மினாவை பார்த்ததும் நெருக்கம் ஏற்படுகிறது. இரவு நேரம் கிளார்கியில் நதியருகே இருவரும் அமர்ந்து பேசும் விஷயங்கள், சில வேளைகளில் இனமத வேறுபாடுகளை உணர்ச்சிகள் தகர்த்தெறிந்துவிடுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம்.
இதுவரை நான் குறிப்பிட்ட 6 தொகுப்புகளிலும் வேறு சில பொதுவான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்து பார்ப்போம்.
பணிப்பெண்கள்
பார்த்ததும் டக்கென பரிதாபப்பட சிங்கையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒன்று பணிப்பெண்கள். இன்னொன்று கட்டிட தொழிலாளிகள். குடும்பத்தைப் பிரிந்து எப்படி வாடுகின்றனர் பாருங்கள்! முதலாளிகள் எப்படி கொடுமை படுத்துகிறார்கள் பாருங்கள் எனச் சட்டை காலரைப் பிடித்து உலுக்கும் கதைகள் பல படித்ததால், இப்போதெல்லாம் காலர் இல்லாத சட்டைகள்தான் அணிகிறேன்.
அப்படிப்பட்ட கோஷங்கள் எதுவுமில்லாமல் மனதை உலுக்கிய கதை தான் அமேண்டா எழுதிய “Two Ways to Do This”. இந்தோனேசியாவில் நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கைக்குத் தப்பிவருகிறவள் தான் சுரோத்துல். இங்குள்ள மெயிட் ஏஜென்சியில் சேர்ந்து பயிற்சி பெறுகிறாள். பொம்மைக்கு பால் ஊட்டுவதிலிருந்து, “sir”, “madam”, “sorry” என்ற ஆங்கில வார்த்தைகள் கற்றுக்கொள்வதுவரை பல விதமான பயிற்சிகள். ஒரு தம்பதி அவளைத் மெயிட்டாக தேர்ந்தெடுக்கின்றனர். சுரோத்துல் தன்னை தேர்ந்தெடுத்த முதலாளியுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறாள்.
சுரோத்துல்லை தூண்டுவது காமம் அல்ல. எல்லா விதங்களிலும் தனது முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வீட்டில் யாரும் இல்லாதபோது முதலாளியம்மாவின் உடைகளை அணிந்து பார்ப்பாள். மெத்தையில் அவள் உறங்கும் பக்கம் படுத்துப்பார்ப்பாள். இவர்களின் உறவு பற்றி முதலாளியின் மனைவிக்குத் தெரியவரும்போது, சுரோத்துல்லை வேலைவிட்டு மட்டுமில்லாமல் நாடு விட்டே நீக்குகிறார்கள். அவளுக்கோ அதிர்ச்சி. வேலைப் போனதற்காக அல்ல. “மனைவி என்ன செய்கிறாள்? நான் தான் வீட்டைச் சுத்தம் செய்கிறேன். அவரின் அம்மாவைக் கவனித்து கொள்கிறேன். அவருக்கும் சுகம் தருகிறேன். எதுவும் செய்யாத மனைவியுடன் இருக்க அவர் என்ன முட்டாளா?” விவகாரம் வெளிப்படும் போது அவர் தனது மனைவியின் பக்கம் இருப்பது அவளுக்கு புரியாததொன்றாய் இருக்கிறது. கிட்டத்தட்ட எந்திரன் திரைப்படத்தில் வசீகரனிடம் அப்படி என்ன இருக்கிறது என்று சனாவிடம் கேட்கும் சிட்டியின் எண்ணவோட்டம் போல.
லதாவின் “நாளை ஒரு விடுதலை” கதையில் வரும் பணிப்பெண் பேருந்தில் அமரும் போது பக்கத்தில் இருப்பவர்கள் சற்று திரும்பிக்கொள்வதைக் கவனிக்கிறாள். கண்ணாடியில் தனது பிரதிபலிப்பைப் பார்த்தால் தன்னையே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வேலை எல்லாம் முடித்து இரவு படுக்க போகும் போதுதான் சாப்பிடவேயில்லை என நினைவு வருகிறது. இப்படிப்பட்ட விவரங்கள் கதையை இன்னும் உண்மையாக்குகிறது.
கட்டிட தொழிலாளிகள்
முன்னே குறிப்பிட்ட “National Day” தொழிலாளிகளுடன் வாக்குவாதம் செய்யும் சிங்கப்பூரியர் பற்றிய கதை. இக்கதையில் ஓர் அழகிய தருணம் – படகில் செல்லும்போது சிங்கப்பூரின் வான்வரை கண்ணில்படும். “அதோ அங்க இருக்கற கட்டிடம் என்னுது. நான் கட்டியது” என்று ஒவ்வொரு தொழிலாளியும் தான் வேலைபார்த்த ஒவ்வொரு கட்டிடத்தையும் சுட்டிக்காட்டுவான். சித்துராஜ்ஜின் “முல்லைவனம்” என்கிற கதையில் எச்.டீ.பி கட்டிடத்தில் காவலாளியாக வேலை செய்யும் ஒருத்தர் கிளாரினெட் வாசிப்பவராக வருவார். இரண்டு கதைகளும் குறைந்த ஊதிய தொழிலாளிகளின் நிலை பற்றி மறைமுகமாகக் கருத்து தெரிவிக்கின்றன. காலரைப் பிடித்து இழுக்காமல் காதுக்குள் ஊசியை நுழைக்கின்றன.
மூன்றாவதாக ஒரு கதை, இத்தொழிலாளிகளின் வாழ்வியல் பிரச்சனையை அணுகுகிறது. அது எம்.கே.குமார் எழுதிய “பெருந்திணைமானி”. மொத்தம் பதினாறு பேராக ஒரே அறையில் தங்கி வேலைக்குச் செல்பவன் தான் அழகன். தனிமை என்பது அவனுக்கு இரவிலும் கிடையாது. இரவானால் சுயஇன்பம் கொள்வதை இன்னொரு தொழிலாளி கிண்டல் செய்கிறான். அமேண்டா எழுதிய “Pawn” கதையிலும், ஒரு சீன தொழிலாளிக்குத் தனது ரூம்மேட்டுகள் மீது கோபம் வரும்போது தனி அறை ஒன்றுக்குள் சென்று கதவை சடாரென்று சாத்திக்கொள்ளவேண்டும் போல இருக்கும். ஆனால் அப்படியெங்கும் செல்லயிலாது என்று தெரிந்தவுடன் கோவம் தணிவது போல எழுதியிருப்பார். ஒரே அறையில் பல பேருடன் வாழ்வதிலான சிக்கல்களை ஆராயும் கதைகள் இவை.
உறவு எல்லை கோடுகள்
கோமளாஸ்ஸில் தோசை சாப்பிட்டவர்களுக்கு தெரிந்திருக்கும். அங்கே தோசையுடன் கோக் அல்லது பெப்சி மீலாக வாங்கலாம். சிங்கப்பூரும் அப்படிப்பட்ட ஒரு கலவைதான். சாவிக்கொத்துகளிலிருந்து டி-சட்டைகள் வரைக்கும் ஆட்சிபுரியும் மெர்லயனும் ஒரு கலவை தானே? இந்த மெர்லயனை குறியீடாக வைத்து “Siren” என்றொரு சிறுகதை அமேண்டா எழுதியிருக்கிறார். பெண் உடையை அணிந்து வாடிக்கலையாளர்களை சுண்டியிழுக்கும் ஆண்மகனின் கதை. ஆங்கிலத்தில் இவர்களைக் குறிக்க Ladyboy என்ற சொல்லிருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவனைப் பள்ளிக்கூட நண்பன் தெருவில் பார்க்கிறான். அதிர்ச்சி அடைகிறான். அவனை ஆணாக மட்டுமே பள்ளியில் பார்த்திருக்கிறான். ஓர் இரவு ஒன்றாகக் கழிக்கிறார்கள். மெர்லயன் எனும் தொன்மத்தை இப்படி திருநங்கைக்கு குறியீடாக வைத்து அழுத்தமான கதை எழுதியதற்கு அமேண்டாவை பாராட்டவேண்டும்.
லதாவும் தொன்மத்தைத் தகவமைத்து “படுகளம்” என்றொரு கதை எழுதியிருக்கிறார். அபிமன்யு போல ஒரு பிள்ளையை வயிற்றில் சுமந்தபடி தீமிதியை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் கதை இது. சித்துராஜ்ஜின் “மோகவல்லி” கதையில் பெண்ணாக மாறிய நடேசன் என்கிற நடாஷா, தன்னைப் பெண்ணாக நிரூபித்துக்கொள்ள டேங்கோ நடனம் கற்கிறார். சமூகம் அமைத்த எல்லைகளை அவரால் கடக்க முடிகிறதா என்பதைக் கதை ஆராய்கிறது. “Cubicles” என்கிற கதையில் Alfian Sa’aat பாலிடெக்னிக்கில் படிக்கும் இரு யுவதிகளுக்கு இடையேயான உறவைச் சொல்கிறார். வாய்ப்புக்கிட்டும்போதெல்லாம் கழிவறையின் அறைகளினுள்ளே சேருகிறார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனசிதைவை கதை ஆராய்கிறது. செக்ஷன் 377ஏ பற்றி பலர் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்க, “மக்களின் மன நிலையைப் பிரதிபலிக்கும் அரசாகத்தான் சிங்கை இருக்கும்” என பிரதமர் லீ சியன் லூங் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டார். இக்கதைகள் மக்களின் மனநிலையை மாற்றுமா என்றெனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நம்மிடையே வாழும் மெர்லயங்களின் வாழ்வை, உணர்வுகளை புரிந்துகொள்ள உதவும்.
தொடல் கிட்டாத பெண்
சித்துராஜும் அமேண்டாவும் உருவத்தால் புறக்கணிக்க படுகின்ற பெண்ணை பற்றிக் கதை எழுதியுள்ளனர். “கர்ணயட்சிணி” கதையில் வரும் பெண் எந்த ஆணுடனும் உறவு வைத்துக்கொண்டதே இல்லை. கதையின் முடிவில் பெண்களும் அவளைப் புறக்கணிக்கும் அளவிற்கு ஆகிவிடுகிறது. அமேண்டாவின் “Pawn” கதையின் முதல் வரி – “டீலாவை பார்த்ததுமே சொல்லிவிடலாம் அவளை இதுவரை ஒரு ஆணும் தீண்டியதில்லை.” டீலாவிற்கு உணவுக்கடையில் வேலைசெய்யும் சீன ஊழியனை பிடித்துபோகிறது. அவனை டின்னருக்கு அழைத்துச்செல்கிறாள். அவனுக்கு பொருட்கள் வாங்கி கொடுக்கிறாள். “உன் மூஞ்சிய பாக்க சகிக்கல!” என்று அவன் கத்திவிட்டு எழும்போது, “போகாதே. உட்கார். நீ என்னோட இருக்க நான் காசு தரேன்” என்கிறாள். “எவ்வளோ?” என்று இவன் கேட்கிறான். பிறகு இருவரும் கைகோர்த்துக்கொண்டு கிளார்க்கி வழியே நடந்து செல்கையில் மற்ற பெண்களின் பொறாமையான பார்வை இவர்கள் மீது விழுகிறது. அந்த பார்வைகளை விழுங்கிக்கொண்டபடி நடக்கிறாள்.
மத வேற்றுமை
நான் தங்கியிருக்கும் காமன்வெல்த் பகுதியில் உள்ள தேவாலயத்தில் தான் பல வருடங்களுக்கு முன் பிரியா படத்திற்காக ரஜினிகாந்த் ஸ்ரீ தேவியை தேடி திரிவார். தேவாலயம் பக்கத்திலேயே முனீஸ்வரன் கோவில். இதைக் கடந்து செல்கையில் என் பாட்டி கைகளைக் கூப்பி முனீஸ்வரனுக்கும் ஏசுவுக்கும் சேர்த்தே ஒரு கும்பிடு போடுவாள். இப்படிப்பட்ட சிங்கை எப்போதும் இவ்வாறு இருந்ததில்லை. மரியா ஹெர்ட்டோ என்ற பெண்ணுக்காக 1950ல் ஒரு மதக் கலவரம் நடந்துள்ளது. அமேண்டா எழுதிய “The Diary of Maria Hertogh” கதை படிக்கும்போது தான் எனக்கு இது பற்றி தெரிய வந்தது. மேட்டர் இது தான். யூரோப்பிய பெண்மணி தனது மகளை ஒரு மலாய் குடும்பத்திடம் கொடுத்துவிட்டாள். அந்தச் சிறுமி தான் மரியா. மலாய் குடும்பம் அவளை முஸ்லீமாக வளர்க்க துவங்கியது. நத்ரா எனப் பெயர் மாற்றுகிறது.
ஆனால் சில வருடங்களில் யூரோப்பிய தாய் திரும்ப வந்து குழந்தையை கேட்கிறாள். சட்டப்பூர்வமாக எடுத்துக்கொண்டும் சென்றுவிடுகிறாள். அவளை திரும்ப கிறிஸ்தவராக மாற்றுகிறாள். இதனால் மதக் கலவரம் மலாயாவிலும் சிங்கையிலும் வெடிக்கிறது. அந்த சிறுமி நாட்குறிப்புகள் எழுதியது போன்ற தோரணையில் இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. மரியா வளர்ந்து கடைசியில் அமெரிக்காவில் ஏதோவொரு பெயர்தெரியாத விடுதியில் மேஜை அலமாரியைத் திறக்கும் போது, அதில் ஒரு பைபிளும் ஒரு குரானும் இருக்கிறது. இவை மேலே புத்தரின் புத்தகமும் இருக்கிறது. இவ்வாறு கதை முடிகிறது. “முகாந்திரம்” என்கிற கதையில் லதாவும் மதத்தினாலும், குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் உலகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால், சிங்கையிலுள்ள மக்களின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த வெவ்வேறு மதங்களைச் சார்ந்த நண்பர்களுக்கு இடையிலும் இது பிரிவுகளை ஏற்படுத்துகிறது.
விதி-உணர்வு மோதல்
பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நகராமல் நின்றிருந்ததைப் பார்த்து, ஏதோ பிரேக்டவுன் போல என்று நினைத்தேன். ஆனால் என் நண்பன் சொன்னான், “வேகமா ஓட்டிட்டு வந்திருப்பார். அடுத்த ஸ்டாப்புக்கு சீக்கிரமா போக கூடாது பாரு.” இப்படி எல்லாமே சரியான நேரத்தில், சரியான முறையில், பிசகு தட்டாமல் நடைபெறும் மாபெரும் அற்புதம் சிங்கப்பூர். விதிகள். நெறிமுறைகள். இவற்றால் சிக்கல் ஏற்பட முடியுமா? Jeremy Tiang எழுதிய “Harmonious Residences” கதையில் விபத்தில் உயிரிழந்த சீன கட்டிட தொழிலாளியின் மனைவி அவரின் உடலை அப்படியே சீனாவுக்கு எடுத்துச்செல்ல விரும்புகிறாள். ஆனால் செயல்முறைப்படி உடல் இங்கு எரிக்கப்படவேண்டும். சாம்பலை எடுத்துச் செல்லலாம் என்கிறார்கள். இதைக் கேட்டவள் சினமுற்று என்ன செய்கிறாள் என்பது தான் கதை. அமேண்டாவின் “The King of Caldecott Hill” கதையில் தற்கொலை செய்துகொண்ட வெள்ளைக்காரரைப் பற்றி அவரைக் கடைசியாக சந்தித்த ஜப்பானிய உணவக பணிப்பெண்ணிடம் விசாரிக்கிறார்கள். அவளின் உணர்ச்சியை புரிந்துகொள்ளாமல் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார்கள். எம்.கே.குமாரின் “பதி சதி விளையாட்டு” என்கிற கதையிலும் இதே விஷயம் தான். வர்க் பெர்மிட் வைத்திருக்கும் நண்பரின் மனைவியை மெயிட்டாக சிங்கைக்கு அழைத்துவர ஒருவர் உதவுகிறார். ஆனால் எம்.ஓ.எம்மிற்கு விஷயம் தெரிந்து போக, வீட்டுக்கு சோதனை செய்யவரும்போது மாட்டிக்கொள்கிறார். கதை படிக்கும் எவருக்கும், “சே பாவம்! வர்க் பெர்மிட் வெச்சிருக்கறவங்க மனைவி கூட இருக்க எவ்வளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு” என்று தோணும். ஆனால் விதிகளின் படி அவர்கள் செய்தது குற்றம். உணர்வுகளுக்கும் விதிகளுக்கும் ஏற்படும் மோதல்களை இது போன்ற கதைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன.
இக்கதைகள் அனைத்தும் என் மனதில் எம்.ஆர்.டி வரைபடம் போன்றதோர் சித்திரத்தை உண்டாக்கியுள்ளன. ஒன்று பக்கத்தில் ஒன்றும், தள்ளியும் அதனதன் இடங்களில் இவற்றை வைத்துப்பார்த்தால், குத்துமதிப்பாகச் சிங்கப்பூரின் வரைபடம் கிடைத்துவிடும். ஆனால் எல்லா நாட்டின் இலக்கியம் போல இன்னும் நிரப்பப்படாத பல இடங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து நிரப்புவது தற்போதைய எழுத்தாளர்களின் கடமை.
இந்தக் கதைகளைக்கொண்ட எல்லாத் தொகுப்புகளையும் கண்டிப்பாகப் படியுங்கள். மேம்போக்காகச் சிங்கப்பூரின் பிரச்சனைகளைச் சொல்லிச்செல்லும் கதைகளாக இல்லாமல், ஆழமான கேள்விகளை எழுப்பும் கதைகள் நிரம்பியிருக்கின்றன. தொகுப்புகளின் பட்டியல் கீழே. அவசியம் படியுங்கள்.
மாறிலிகள் – சித்துராஜ் பொன்ராஜ்
நான் கொலை செய்யும் பெண்கள் – கனகலதா
Ministry of Moral Panic – Amanda Lee Koe
It Never Rains on National Day – Jeremy Tiang
Corridor: 12 short stories – Alfian Sa’at