ஜி.ஜி.எஸ்ஸை விட்டு வெளியேறிச்செல்லும் புத்தகங்கள்

லிட்டில் இந்தியாவில் உள்ள எந்தெந்த உணவகங்களில் சிங்கப்பூர் தமிழர்கள் சாப்பிடுவார்கள், எங்கு இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் சாப்பிடுவார்கள் என்று ஆழமாக விவாதித்தப்படி நானும் பாலாவும் செராங்கூன் வீதியில் நடந்து சென்றோம். கோமள விலாஸ் கூட்டமாக இருந்தது. மெட்ராஸ் ஊட்லெண்ட்ஸ்ஸில் கை நனைத்துவிட்டு, லிட்டில் இந்தியா ஆர்கேட் நோக்கி நடந்தோம். நண்பர் கணேஷ் ஜி.ஜி.எஸ் புத்தக கடைக்கு தெளிவாக வழிக்காட்டியிருந்தார். “லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் பனானா லீஃப் உணவகம் இருக்கும். அதற்கு பக்கத்தில் ஒரு அலுவலக கதவு. அக்கதவை திறந்தால், ஒரு மின்தூக்கி வரும். அதில் இரண்டாம் மாடிக்கு சென்று புத்தக கடை என்று கேளுங்கள்.”

மின்தூக்கியில் செல்வதற்கு பதிலாக அலுவலக கதவை திறந்து படிக்கட்டுகளில் ஏறும்போது பாலா சொன்னார், “புத்தக கடைன்னா இப்படிவொரு லொகேஷன்ல தாங்க இருக்கணும். ஏதோ கஞ்சா வாங்க போற மாதிரியே போறோம்.” அப்படி இருந்தது படிக்கட்டு. மேலே சென்றால், மங்கிய வெளிச்சத்தில் ஒரே மாதிரி பல கதவுகள். ஒரு திறந்த கதவு வழியாக எட்டிப்பார்த்த போது, “எம்பிளாய்மென்ட் ஏஜென்சி” என்ற விளம்பரப்பலகைக்கு பின்னாலிருந்து கண்ணாடி அணிந்த இந்திய அங்கிள் என்னை முறைத்தார். நான் உடனே திரும்பிவிட்டேன். தொள தொள சட்டை பேண்ட் அணிந்த இன்னொரு அங்கிள் தள்ளுந்தில் எதையோ நகர்த்தி கொண்டிருந்தார். அவரிடம், “புக் ஷாப்?” என்று கேட்டவுடன், “வாங்க வாங்க இது தான்” என்று செவுத்தோரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 அட்டைப்பெட்டி டப்பாக்களை காண்பித்தார்.

ஒவ்வொரு டப்பாவும் இடுப்பு உயரம் இருக்கும். உள்ளே எத்தனை புத்தகங்கள் என்ற எண்ணிக்கை அதன் மீது எழுதப்பட்டிருந்தது. பாலா உடனே ஒரு வியூகம் சொன்னார். “ஒவ்வொண்ணா திறந்து முதல்ல புத்தகங்கள ஷார்ட்லிஸ்ட் பண்ணுவோம். அப்புறம் அதுலேர்ந்து எது வாங்கலாம்னு பார்க்கலாம்.” கடைக்காரர் இருவருக்கும் அமர நாற்காலி தந்தார். தள்ளுந்தில் ஒரு பெரிய அட்டை பெட்டியில் மேலும் சில புத்தகங்களை கொட்டிக்கொண்டிருந்தார். “இதெல்லாம் காயிலாங்கடைக்கு தான் போகுது. இதுல எதுவும் உங்களுக்கு உதவியா இருக்காது.” என்று வேறொரு ஓரமாக வைத்திருந்த 4 பெட்டிகளை சுட்டிக்காட்டினார்.

முதல் பெட்டிக்குள் கைவிட்டு ஐந்தாறு புத்தகங்களை அள்ளினோம். ஒவ்வொன்றாக பார்த்தோம். சிலவற்றை தலைப்பு பார்த்துவிட்டு தள்ளி வைத்தோம். சிலவற்றை அட்டையில் இருக்கும் படத்தை பார்த்தே நிராகரித்தோம். சற்று ஆர்வம் தூண்டியவற்றை புரட்டி பார்த்தோம். சில புத்தகங்கள் தலை கீழாக இருந்தாலும் அவற்றை பார்த்தாலே “ரிஜெக்டெட்” என்று தோன்றியது. சில புத்தங்கங்களை டப்பாவிலிருந்து வெளியே எடுக்க்காமலே விட்டுவிட்டோம். ஒரு ஓரமாக ஷார்ட்லிஸ்ட் செய்த புத்தகங்களை அடுக்கினோம். ஒரு அட்டைப்பெட்டியில் கிட்டத்தட்ட 140 புத்தகங்கள். அதில் நாங்கோ ஐந்தோதான் ஷார்ட்லிஸ்டுக்கு தேறியது. மெதுவாக ஷார்ட்லிஸ்ட் அடுக்கு வளர்ந்தது. பாலாவின் நெற்றியிலிருந்து வேர்வை வழியத்துடங்கியது.

“திருச்சியில நான் புத்தகம் வாங்குற இடம் இப்படிதாங்க இருக்கும். வெளிச்சம் கெடையாது, விசிறி கூட கிடையாது. வேர்க்க விறுவிறுக்க தான் புத்தகம் தேடணும்.” சென்னையில் லேண்ட்மார்க்கில் நுழைவு வாயிலில் என்னை சல்யூட் அடித்து வரவேர்த்த பாதுகாவலரையும் குளுமையான ஏ.ஸி காற்றையும் நினைத்து பார்த்தேன்.

கடை உரிமையாளர் சில புத்தகங்களை அடுக்குவதற்கு வெளியே வந்தபோது பேச்சு கொடுத்தார். “இனிமே ஸ்கூல் புத்தகங்கள் தான் விக்க போறேன். கீழ இருக்கற இடம் காலி செஞ்சுட்டு இங்க மேல மட்டும் ஒரு டிஸ்பிளே வெக்க போறேன். ஆன்லைன்ல ஆர்டர் செய்யுற மாதிரி செட் பண்ண போறேன்.”

“முன்னவிட இப்போ புத்தகம் வாங்குறது குறைஞ்சிடுச்சா?”

“கண்டிப்பா. தொண்ணூறுல நல்ல சேல்ஸ் நடக்கும். ஒரு வருஷத்துக்கு half a million turnover இருக்கும்! 23 வருஷமா இந்த வியாபாரம் பண்றேன். இப்போ ரொம்ப கொறஞ்சு போச்சு. இதுக்கு முன்னாடி என் கடைக்கு வந்திருக்கீங்களா?”

“இல்லீங்க. இங்க புத்தக கடை இருக்குன்னே பாரதி சொல்லிதான் எங்களுக்கு தெரியும்.”

“என் கடையை தெரியாம இவ்வளோ நாள் சிங்கபூருலே நீ எப்படி இருந்த?” என்பது போல என்னை பார்த்தார். நானும் லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் காராசேவ் வாங்கியிருக்கிறோம் ஆனால் புத்தகம் வாங்கவில்லையே என்ற குற்றவுணர்ச்சியில், திரும்ப புத்தகங்களை அள்ளுவதில் மும்முரமானேன். பிறகு அவர் கடைக்கு வரும் நபர்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார். இவர் வருவார், அவர் வருவார் என்று சிலபல பெயர்களை சொன்னார். அந்த பெயர்கள் எல்லாம் வாட்ஸாப்பில் பகிரப்படும் வண்ணவண்ண இலக்கிய அழைப்பிதழ்களில் பார்த்த ஞாபகம்.

“ஓஹோ” என்பதை தவிர எங்களிடமிருந்து வேறு ரியாக்ஷன் வரவில்லை. பிறகு நேரடியாக, “நீங்க இரெண்டு பேரும் எந்த க்ரூப்பு?” என்று கேட்டார். நானும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, “எந்த க்ரூப்பும் இல்ல” என்றோம். சாதியை மறைமுகமாக கேட்பவர்களை போல, பல பெயர்களை ஆரம்பத்தில் சொல்லி எந்த க்ரூப்பென்று துப்பறிய முனைந்தது தோற்றபின், நேரடியாக கேட்டிருக்கிறார் என புரிந்தது.

“நீங்க எந்த வட்டம்?” என்று நான் கேட்டேன்.

“நான் எல்லாத்தையும் தள்ளி நின்னு பாக்குறவன்” என்றார்.

“சூப்பர்! அப்படி தான் இருக்கணும்!”

“வெளிப்படையா ஏதாச்சும் சொன்னா அப்புறம் பிரச்சனை வருது பாருங்க. நீங்க இரெண்டு பேரும் எழுதுவீங்களா? கதையா கவிதையா?”

“இவர் சூப்பரா கவிதை எழுதுவார்!” என்று பாலாவை சுட்டிக்காட்டினேன். “இவர் கதை எழுதுவார்” என்றார் அவர்.

ஏன் என்று தெரியவில்லை திடீரென்று என்னை பார்த்து, “உங்களுக்கு பிடிச்ச நாவல் எது?” என்று கேட்டார். புத்தகக்கடை உரிமையாளரிடம் பொய் சொல்வதா என்ற எண்ணத்தில், “இன்னும் நான் தமிழ்ல நாவல் எதுவும் படிச்சதில்ல” என்றேன். மீண்டும் அதே அதிருப்தியான முகபாவத்துடன் என்னை பார்த்தார்.

அவரை சாந்தப்படுத்த “சிறுகதை படிப்பேன். அசோகமித்திரன் சுஜாதா இரெண்டு பேரும் பிடிக்கும்.”

“சுஜாதா எனக்கு சுத்தமா பிடிக்காது!” என்று அறிவித்தார், “நீங்க லட்சுமி ஓட எழுத்து படிங்க. ரொம்ப நல்லா இருக்கும். யண்டமூரி விரேந்திரநாத்னு இன்னொருத்தர். அவரோட கதைகள் மொழிபெயர்ப்புல படிச்சிருக்கேன். ஒவ்வொருகதையும் அருமையா இருக்கும்.”

“எந்த மொழில எழுதுவார் அவர்? மலையாளமா?”

“இல்ல. அது சரியா நினைவில்ல. ஆனா அவர் கதைகள் எடுத்தா கீழ வெக்கமுடியாது. நீங்க சிவசங்கரி படிப்பீங்களா? நான் படிக்கமாட்டேன். அந்தம்மா எப்பவும் ஆண்களை குறைசொல்லியே எழுதுவாங்க. எது நடந்தாலும் அதுக்கு ஆண்கள் தான் காரணம். சரி நீங்க புத்தகங்கள் பாத்துட்டு இருங்க. நான் போயிட்டு வந்துடறேன்” என்று சட்டைப்பையில் தொங்கும் கைபேசியை வெளியே எடுத்து தட்டிக்கொண்டே கிளம்பினார்.

பாலா உடனே, “புத்தககடை வெச்சிருக்கறவங்களுக்கு இப்படி குறிப்பிட்ட எழுத்தாளரை பத்தி மதிப்பீடு இருக்க கூடாதுங்க. அப்புறம் பிடிக்காத எழுத்தாளரோட புத்தகங்களை வாங்கிவெக்க மாட்டாங்க இல்லாட்டி வேண்டாவெறுப்போட தான் வாங்குவாங்க.”

“சரி தான். யாருங்க அது லட்சுமி?”

“தெர்லயே. ஒவ்வொரு டப்பாலேர்ந்தும் மூணோ நாலு புத்தகம் தான் தேறுது. ம்ம்…”

“நமக்கு முன்னாடி கணேஷ் பாபு வந்துட்டு போயிருக்காருல. அதான். இருங்க நான் அந்த காயிலாங்கடைக்கு போற டப்பாக்களை பாக்கறேன். அதுல ஏதாச்சும் தேறும்னு தோணுது.”

“ஆமாங்க… அவரு பேசினதுபார்த்தா அந்த டப்பாலதான் நல்ல புத்தகம் இருக்கும்னு தோணுது.”

ஆனால் காயிலாங்கடைக்கு செல்லும் டப்பாவை சற்று நோண்டி பார்த்ததில் தொழிலில் செழிப்பது பற்றியும், ஆன்மீகம், குழந்தைகள் நூல்கள் தான் இருந்தன. திரும்ப வந்து எனது ஸ்டூலில் அமர்ந்து புத்தகங்களை பொறுக்க ஆரம்பித்தேன்.

“இந்த கடை மூடாம இருந்திருந்தா, இந்த புத்தகங்களெல்லாம் நாம ஏறெடுத்துகூட பாத்திருப்போமா பாலா? சில சமயம் சில கடைகள் மூடுறது நல்லது தான்.”

“ஆமாங்க. நாம இப்போ செய்யுறது ஒவ்வொரு எழுத்தாளரும் செய்யவேண்டிய வேலை. அப்போ தான் எத்தனை புத்தகங்கள் வேஸ்ட்டா டப்பாக்குள்ள கெடக்குனு புரியும். இன்னொரு புத்தகம் அச்சிடறதுக்கு முன்னாடி கொஞ்சமாச்சும் யோசிப்போம் பாருங்க.”

“யாருங்க இந்த அ.மார்க்ஸ்? அவரு புத்தகம் தான் ஜாஸ்தியா கையில வருது. இவ்வளோ புத்தகம் இருக்குன்னா, ஒன்னு அவரு ரொம்ப பிரபலமா இருக்கணும் இல்லாட்டி அவர் புத்தகத்தை யாரும் வாங்காம இருக்கணும்.”

“அவர் ஒரு பேராசிரியருங்க. அட! இங்க பாருங்க பொக்கிஷம்!” என்று ஒரு புத்தகத்தை தூக்கி காண்பித்தார் பாலா. ஒரு பிரபல சிங்கப்பூர் எழுத்தாளர். தமிழர் மரபு கருதி அது யாரென்று நான் குறிப்பிட விரும்பவில்லை. ஷார்ட்லிஸ்ட் பட்டியலில் அதை சேர்த்தோம், ஆனால் எனக்கும் பாலாவுக்கும் தெரியும், அதை வாங்கமாட்டோம் என்று.

பல மொழிபெயர்ப்பு நூல்கள் கையில் அகப்பட்டன. “ஓ! பாஸ்கர் சக்தி Roald Dahl கதைகளை மொழிபெயர்த்திருக்காருங்க. மாலன் கிட்ட நான் கேட்டேன் பாலா, ஐசாக் அசிமோவ் கதைகளை யாராச்சும் மொழிபெயர்த்திருக்காங்களான்னு. ஆனா அவர் நீங்க சொந்தமா எழுதுங்க, மொழிபெயர்ப்புல நேரம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டார்.”

சிறிது நேரத்துலயே ஐசாக் அசிமோவின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று கையில் சிக்கியது ஆச்சரியமாக இருந்தது. “பாருங்களேன் ஒருத்தர் ஆல்ரெடி செஞ்சிருக்கார்.” ஷார்லிஸ்ட்டில் வைத்தேன். சத்யஜித் ரேவின் பெலுடா கதைகள் மற்றும் அகன்டுக் திரைப்பட திரைக்கதையின் தமிழ் மொழியாக்கம் சிக்கியது. பழைய தமிழ் நடிகர் ராஜேஷ் உலக சினிமா பற்றி எழுதிய பல நூல்களும் இருந்தன.

சென்னையில் என் அம்மாவின் அலுவலகத்தில் ஏ.செல்வமணி என்றொருவர் இருக்கிறார். சாதுவான, மென்மையான மனிதர். எப்போதுமே அவரை நான் சீருடையில் தான் பார்த்திருக்கிறேன். பல இந்திய தலைவர்களை பற்றி விவரங்கள் சேகரித்து புத்தங்கள் வெளியிடுவார். “பாரதம் கண்ட பாரத ரத்னாக்கள்” என்றொரு நூலை அவரை சந்த்தித்த போது எனக்கு தந்திருந்தார். பாரத் ரத்னா வென்ற இந்தியர்களின் வாழக்கையை பற்றிய தகவல் சேகரிப்பு. “இதெல்லாம் விக்கிபீடியாலயே இருக்குமே அங்கிள்?” என்று எனக்கு சொல்ல தைரியம் வந்ததில்லை. ஏதோ அவரின் வேலைகளுக்கு நடுவே இப்படி சிறுசிறு தகவல்களை சேர்த்து அடுத்த தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறார். அவரின் நூல்களும் ஒன்றிரண்டு கையில் சிக்கின. “பரவாயில்லையே சிங்கப்பூர் வரைக்கும் வந்திருக்கே” என்று மனதில் சந்தோஷப்பட்டுக்கொண்டு பாலாவுக்கும் காண்பித்தேன்.

அடுத்து அட்டையில் விண்கப்பலின் படத்தைக்கொண்ட ஒரு விஞ்ஞான சிறுகதைகள் நூல் பார்த்ததும், பாலாவிடம் காண்பித்தேன், “பாலா இது நல்லா இருக்கும்னு நினைக்கறீங்களா?” அவர் தலைப்பை படித்தார். “‘புதுமையான விஞ்ஞான கதைகள்’. அது என்ன ‘புதுமையான’? கண்டிப்பா நல்லா இருக்காது. வெச்சிருங்க. தலைப்புலயே ‘புதுமையான’ன்னு போட வேண்டியது. ஓ! இவரோட புத்தகம் இருக்கா?” என்னிடம் ஒரு புத்தகத்தை காண்பித்தார் பாலா, “இவரை பத்தி ஜெயமோகன் நிறையா சொல்லிருக்காருங்க.” ஷார்லிஸ்ட் பட்டியலுக்கு அந்த நூல் சென்றது.

அப்புறம் திடீரென்று எங்கிருந்தோ வந்து எங்களிடம் ஒரு தடித்த புத்தகத்தை கடை உரிமையாளர் தந்தார். “பாரதிதாசன் கவிதைகள். என்னோட புத்தகம். இந்த தொகுப்பு இப்போ எங்கயும் கெடைக்கறதில்லை.” திரும்ப “ஓஹோ” என்றுவிட்டு மரியாதைக்காக புத்தகத்தை புரட்டிவிட்டு ஓரமாக வைத்தோம். “இது வேணுமா பாருங்க” என்று கண்ணதாசனின் பாடல் வரிகள் நூலை கடைக்காரர் நீட்டினார். வேண்டாமென்று நானும் பாலாவும் பணிவாக சிரித்தோம்.

அதிகமாக கேள்வி பதில் நூல்கள், ஏதாவதொரு சாமியாரின் அறிவுரைகள், கம்யூனிச சித்தாந்த உரைகள் என்று தான் வந்துக்கொண்டே இருந்தது. பள்ளி வாழ்க்கை நினைவுக்கு வந்தது. கேள்வி பதில் நூல்களை வெறித்தனமாக வாங்குவேன். பல வினாடி வினா போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. கூகிள் பிரபலமான பிறகு ஏனோ வினாடிவினா போர் அடித்து போனது. அந்த நூல்களின் ஈர்ப்பும் குறைந்து போனது. பத்தே வருடங்களில் இவ்வளவு மாற்றம்.

இன்னும் சிலர் வந்தார்கள். கழுத்தை சுற்றி காதணிகள் தொங்க ஒரு நடுத்தர வயதவரும், இரு தம்பதியினரும். ஒரு தம்பதி தள்ளுவண்டியில் குழந்தை வைத்திருந்தார்கள். நானும் பாலாவும் பார்த்து முடித்த பெட்டிகளை அவர்கள் திறந்து நோண்ட துவங்கினார்கள். காதணிகள் வைத்திருந்தவர் ஐந்து நிமிடம் நோண்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். பெட்டிக்குள் ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையின் தோளை தட்டிய தந்தை, கலைஞரின் படம் போட்ட புத்தகத்தை நீட்டி, “உங்க அம்மாக்கிட்ட கொடு” என்றார்.

ஒரு வழியாக பத்து பெட்டிகளையும் முடித்துவிட்டு ஷார்ட்லிஸ்ட் பட்டியலை அலச ஆரம்பித்தோம். அதிலிருந்த பல புத்தகங்களை தள்ளிவைத்தோம். கடைசியில் என்னிடம் ஐந்து மிஞ்சியது. பாலாவிடம் ஒரு குவியலே இருந்தது. “பெரும்பாலும் கவிதை தொகுப்புகள் தாங்க” என்றார். இருவரும் எழுந்து கைகளை தட்டிக்கொண்டோம். பல புத்தகங்களை புரட்டியதில் இரு கைகளிலும் கருப்பாக அழுக்கு. புத்தகங்களை எடுத்துக்கொண்டு கடைக்காரரின் அறைக்குள் சென்றோம். அவர் பல வேலைகள் இருக்கின்றன என்பது போல பரபரப்பாக சுற்றிக்கொண்டிருந்தார். “பல வருஷங்களா சேர்த்த புத்தகங்க பாருங்க. இதெல்லாம் க்ளியர் பண்றதே பெரிய வேலை. இன்னிக்கு உதவிக்கு சில பேர் வரேன்னு சொல்லிருந்தாங்க ஆனா இன்னும் வரக்காணோம். மொத்தம் எவ்வளோ புத்தகம் எடுத்திருக்கீங்க? நீங்களே எண்ணி சொல்லிடுங்க” ஒரு புத்தகத்துக்கு 2 வெள்ளி. நான் 10 வெள்ளியும் பாலா 46 வெள்ளியும் கொடுத்துவிட்டு விடைப்பெறுகையில், “இருங்க. இந்தாங்க இதுவும் ஆளுக்கு ஒன்னு எடுத்துக்கோங்க.” என்று ஏதோவொரு புத்தகத்தை கையில் திணித்தார். என்னெவென்று பார்த்தால் திருக்குறள். புத்தக கடை உரிமையாளர் தரும் புத்தகத்தை நிராகரிக்கக்கூடாது என்று வாங்கிக்கொண்டோம். “பை ராம்” கைகுலுக்கிவிட்டு பாலா கிளம்பினார்.

எனக்கு லேசாக பசித்தது. கையை சோப்புப்போட்டு கழுவிவிட்டு பக்கத்தில் இருக்கும் ஆனந்த பவனுக்கு சென்றேன். பஜ்ஜி கண்ணை ஈர்த்தது. “இரெண்டு வாழைக்காய் பஜ்ஜி” என்று கேட்டேன். “மூனாத்தான் வரும்” என்றுவிட்டு என்னையே வெறித்துப்பார்த்தார் கவுண்ட்டர் பெண்மணி.

“சரி மூணு குடுங்க. அப்படியே பொடி இட்லி டேக் அவே.”

“6 வெள்ளி”

ஒரு புத்தக பையும், ஒரு அனந்த பவன் டேக் அவே பையும் பிடித்துக்கொண்டு சாலையை கடந்தேன். கைபேசியை எடுத்து கணேஷ் வாட்ஸாப்பில் பகிர்ந்திருந்த “ஓமல்லாஸ்ஸை விட்டு வெளியேறி செல்பவர்கள்” சிறுகதையை படிக்க துவங்கினேன்.

image

Leave a Reply

%d bloggers like this: