சிட்டி ஹால் எம்.ஆர்.டி ஸ்டேஷன் வாசலில்… மன்னிக்கவும் நகர மண்டபம் ஸ்டேஷன் வாசலில், என் நண்பன் அஜய் வருவதற்காக காத்துக்கொண்டிருந்தேன். சனிக்கிழமை காலை 10 மணி. எதிரே பற்பல அறைகள் கொண்ட ஒரு வெள்ளை மாளிகை. கேப்பிட்டல் பில்டிங் என நினைக்கிறேன். அஜய் வந்ததும், “மச்சி… இந்த பில்டிங் விலை எவ்வளோ இருக்கும்?” என்றேன். அவன் தனது கிட்டாரை முதுகுப்புறம் தள்ளியபடி, யோசித்தான். “சுமார்… 10 மில்லியன்…?”
“வாங்கறோம். வாங்கி இந்த முழு பில்டிங்கையும் ஆர்ட்ஸ்க்கு அர்ப்பணிக்கறோம்! உண்மையான ஆர்ட்டிஸ்ட் யாரா இருந்தாலும், நம்ம இடத்தை ஆர்ட்காக யூஸ் பண்ணிக்கலாம்!”
இவ்வாறு பேசிக்கொண்டே ஆர்ட்ஸ் ஹவுஸ் முதல் மாடியில் ஒரு அறையை சென்றடைந்தோம். மூடிய கதவுகள். அதை திறக்க போகும் போது, சிங்கப்பூருக்கே உரிய பாணியில், “சாரி!” என்றபடி இரு பெண்கள் வந்தார்கள். “தனிமையை எப்படி எழுதுவது?” தலைப்பில் சிரில் வாங் மற்றும் இருவேறு எழுத்தாளர்கள் பேசும் நிகழ்வு. அறை நிரம்பிவிட்டது. உள்ளே செல்லமுடியாது என்றனர்.
“ஷிட்!” என்றான் அஜய். அது ஏனோ அந்த பெண்களுக்கு சிரிப்பு மூட்டியது.
“கட்டுறா இந்தியா” என்ற தலைப்பில் மூன்று இந்திய அறிஞர்கள் பக்கத்து அறையில் பேசுகிறார்கள். அங்கு இன்னும் ரொம்பவில்லை. வேண்டுமென்றால் அங்கே சென்று பாருங்களேன் என பரிந்துரைத்தார்கள்.
“என்னடா? இந்திய அறிஞர்களாம்… போணுமா?” என்பது போல் நானும் அஜயும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம்.
உள்ளே சென்றால், அமர்தீப் சிங், நிசித் ஹஜாரி, ரவி வெள்ளூர் என்ற மூவர் பேசிக்கொண்டிருந்தனர். பார்ட்டிஷன் காலத்திலிருந்தே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சனை தீர்வுபெற, இரு நாட்டு மக்களுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம் வேண்டும். இது தான் அந்த உரையாடலின் மய்யம்.
அமர்தீப் சிங் ஏதோ சொல்லி முடிக்க, ரவி வெள்ளூர் உடனே, “அவர் சொன்னதற்கு நான் ஓர் அடிக்குறிப்பு இட விரும்புகிறேன்” என்றார். சாதாரணமாக “நான் இன்னொரு விஷயம் சொல்லுறேன்” என்று சொல்லலாம். ஆனால் அடிக்குறிப்பு இட விரும்புகிறேனா? ஆகா! திஸ் இஸ் வாட் ஐ வாண்ட்! ரைட்டர்ஸ் பெஸ்டிவலின் சூழல் என்னை விழுங்கியது.
1947இல் முஸாபராபாத்தில் கலவரம் நடந்து, பல சீக்கியர்கள் கொல்லப்பட்ட சமையத்தில், தனது தந்தை இருந்தாரென்றும், அந்த நினைவுகள் வாழ்நாள் முழுதும் அவரை துரத்தி கொண்டிருந்தன என்றும் அமர்தீப் சிங் பகிர்ந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் தனது தந்தை வாழ்ந்த இடத்தை சென்று பார்த்து, Lost Heritage — The Sikh Legacy in Pakistan என்ற நூலை எழுத இதுவே தூண்டியது என்றும் சொன்னார். மூவரில் இவர் மட்டுமே தெளிவுடன் பேசுவதாக எனக்கு தோன்றியது. சிலபல பேர் கேட்ட கேள்விகளில் கடுப்பாகி, “கலாச்சார பரிமாற்றம் தான் தேவை என்று சொல்கிறீர்களே, தற்போது இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் ஏதேனும் பொதுவான தளங்கள் உள்ளனவா?” என்று அஜய் மைக்கை பிடிங்கி கேள்வி கேட்டான்.
“முதலில் வரலாறுரீதியாக என்ன ஒற்றுமை இருந்தது என பார்க்க வேண்டும். பிரிவினைக்குமுன் பாபா பாரித் போன்ற கவிஞர்கள் பஞ்சாபில் பிரபலம். அவரின் கோவில் இந்தியாவின் எல்லையிலிருந்து நாற்பதே கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. ஆனால் இன்றைய பஞ்சாபில் வசிப்பவர்கள் யாருக்கும் அவரை தெரியாது. பார்டிஷனுக்கு பிறகு அவரை இந்தியாவில் மறந்துப்போய்விட்டார்கள். பாகிஸ்தானில் அவரை எல்லோருக்கும் தெரியும். இது போல இந்தியாவில் உள்ள பல கவிஞர்களை பாகிஸ்தான்காரர்களுக்கு தெரியாது. உரையாடல் துண்டித்து போனது. இரு தேசங்களின் மக்கள் ஒருவரை ஒருவர் கலை, கலாச்சாரம் மூலமாக புரிந்துக்கொண்டு, அவரவரின் அரசாங்கத்தை அழுத்தினால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.”
வெளியே வந்ததும், “ஐஸ்லாந்து பெண் கவிஞர் ஒருத்தங்க Norse Mythology வெச்சு எப்படி கவிதை எழுதறாங்கன்னு பேசுறாங்க. போலாமா?” என்று நான் அஜயை கேட்டேன். நாங்கள் வெளியேறிய அறையின் வாசலில் பெரிய கூட்டம். எதற்காக இவ்வளவு மக்கள் திரண்டிருக்கிறார்கள் என்று எட்டி பார்த்த்தோம். “ஜப்பானிய இலக்கியத்தின் தற்போதைய நிலை“ என்ற தலைப்பில் இரு ஜப்பானிய எழுத்தாளர்களுடன் கலந்துரையாடலே அடுத்த நிகழ்ச்சி.
“இவ்வளோ கூட்டம் நிக்குதே. கண்டிப்பா நல்ல எழுத்தாளரா இருப்பாங்க” அஜய் சொன்ன லாஜிக்கை என்னால் மறுக்க முடியவில்லை.
தொப்பியும் சீருடையும் அணிந்த வெள்ளை முடியுடைவர் Taiyo Fujii. ஜப்பானிய மொழிபெயர்ப்பாளருடன் அமைதியாக அமர்ந்திருந்தவர் Risa Wataya.
“ஐ-போனிலேயே நாவல் எழுதினேன். எனக்கு பிடித்த புத்தகம் ரிச்சர்ட் டாக்கின்ஸின் “The Selfish Gene”. அதை சயன்ஸ் பிக்ஷனாகவும் பார்க்கலாம். நாவலின் ஒரு பகுதியை படி என்று நீங்கள் ஜப்பானிய எழுத்தாளரை கேட்டால், அவர் ஓடி ஒளிந்து கொள்வார். காரணம், ஜாப்பனீஸ் மொழியின் காஞ்சி எழுத்துக்கள். அவற்றின் ஓசை முக்கியம் அல்ல. அவை பார்வைக்குரியவை. எழுத்துக்கள் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கின்றன என்பது தான் முக்கியம். அதனால் தான் ஓசைக்கு ஜப்பானிய எழுத்தாளர்கள் முக்கியத்துவம் தருவதில்லை.” என்றெல்லாம் சொன்னார் Taiyo Fujii. அவரின் Gene Mapper என்னும் நூலை படித்து பார்க்க வேண்டுமென்று மனதில் குறித்துக்கொண்டேன்.
Risa Wataya மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசினாலும், மனதிலிருந்து பேசியதாக எனக்கு பட்டது. எழுதும்போது பல முறை “நமக்கு மட்டும் இப்படி தோன்றுகிறதோ? மற்றவர்களுக்கு நாம் எழுதுவதை உணர முடியுமா?” என்று சந்தேகம் அவரை பற்றிக்கொள்ளுமாம். ஆனால் எந்த அளவுக்கு அவர் கதைகளில் தனிப்பட்ட உணர்வுகளை விரித்து எழுதுகிறாரோ, அந்த அளவுக்கு மக்களிடம் அது சென்றடைகிறது என்றார். அவரின் மனதிற்கு நெருக்கமான படைப்பு Osamu Dasai எழுதிய Ningen Shikaku என்றார். “மாங்கா காமிக்ஸ் டா. செம்மையா இருக்கும்.” என்று விக்கிப்பீடியா பக்கத்தை அப்போவே உருட்டியபடி அஜய் சொன்னான்.
கேள்வி நேரத்தில் ஒரு கண்ணாடி அணிந்த இளைஞன் Risa Watayaவின் “I want to Kick you in your back” படித்ததாகவும், அது அவனின் ஜப்பானிய சக மாணவனை புரிந்துக்கொள்ள உதவியதாகவும் சொன்னான். (இந்த இளைஞனை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வேறு இடத்தில் வருவான்.)
சினிமாவிற்கும் இலக்கியத்திற்குமான உரையாடல் ஜப்பானில் தற்போது எவ்வாறு உள்ளது என நான் கேட்ட கேள்விக்கு, “கிட்டத்தட்ட எல்லா சினிமாக்களும் இலக்கியத்தை தழுவியே எடுக்க படுகின்றன. சினிமாக்காரர்கள் சொந்தமாக யோசிப்பதில்லை. வருத்தத்திற்குரிய விஷயம்.” என்றார் Taiyo. இங்கு தமிழ் சினிமாவில் இலக்கியத்தின் பங்களிப்பே இல்லை என நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். இவர் ஆப்போஸிட்டாக வருந்துகிறாரே என ஆச்சரியம்.
வெளியே வெங்கட் காத்திருந்தார். “ஐஸ்லாந்து கவிஞர் பேச்சு எனக்கு பிடிக்கல. என்னமோ Norse Mythology ஆணாதிக்கத்த குறிக்கற மாதிரியும், இவங்க தன் கவிதைகள் மூலமா அதை விடுவிக்கிற மாதிரியும் பேசினாங்க.”
அஜய் முகத்தை சுழித்தான். தேவை இல்லாமல் குழப்பி கொள்ளும் கலைஞர்களை அவனுக்கு பிடிக்காது. ஐங்மார் பெர்க்மான் மற்றும் வுட்டி ஆலன் ரசிகன் அவன். இப்போது அவனுக்கு பசி வேறு. “சரி சாப்பிட போலாமா?” என்றான்.
“1.30 மணி வரைக்கும் ஒரு தமிழ் நிகழ்ச்சி இருக்குடா. அது பாக்கலாமே.” என்றார் வெங்கட். அவர் இதுவரை சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய கூட்டங்களுக்கு சென்றதில்லை.
“வெங்கட்காகடா. போவோம்.” என்று பசியுடன் இருந்த அஜயை இழுத்துக்கொண்டு, “விமர்சனம் தேவையா?” என்ற விவாதம் நடக்கும் அரங்கின் கடைசி வரிசையில் சென்றமர்ந்தோம். மூன்று பேர் மேடையில் — சித்ரா ரமேஷ், கண்ணபிரான் சார், கனகலதா. நாங்கள் சென்ற சமயம், கனகலதா தனது பேச்சை முடித்தார். அரங்கில் குளிர் அதிகமாக இருந்தது. கமலாதேவி அரவிந்தன் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார். கண்ணபிரான் சார் தலையை கவிழ்த்தப்படி மெளனமாக அரங்கில் நடக்கும் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். 10 நிமிடம் இருக்கும். அஜயும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். வெங்கட்டின் காதில், “நாங்க சாப்பிட போறோம்” என கிசுகிசுத்துவிட்டு கெழண்டு கொண்டோம்.
நலன் உணவகத்தில் மசால் தோசை நன்றாக இருந்தது. நானும் அஜயும் பிரிந்தோம். அவனுக்கு சிரியா பிரச்சனை முக்கியமாம். அதை பற்றி Atia Abawiயின் பேச்சை கேட்க கிளம்பிவிட்டான். எனக்கோ “கலப்பு ஊடகங்களில் கவிதைகள்” என்ற விவாதத்தில் நாட்டம்.
Brazilian Concrete Poetry, Noigandres, Augusto de Campos, Decio Pignatari, Haroldo de Campos, verbivocovisual, Poetamenos, Race Card performance, Hellocasts, Ground I stand on is not my ground… இப்படி சுத்தமாக தெரியாத பல விஷயங்கள் துப்பாக்கியிலிருந்து வெடிப்படும் தோட்டாக்கள் போல மூளையை தகர்த்தன. குருதிப்புனல் கிளைமாக்ஸ் கமல் போல “ஷூட் மீ!” என்று ஜாலியாக எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டேன். Augusto de Camposஇன் இந்த “கவிதை” ஒரு புதிய அனுபவம்.
அடுத்து வெங்கட் “துன்பத்திலும் எழுத்து” என்ற தலைப்பில் மூன்று எழுத்தாளர்கள் பேசும் நிகழ்வுக்கு செல்வோம் என்றார் — Deborah Emmanuel, Sabata-mpho Mokae மற்றும் Ryoichi Wago.
Deborah போதை மருந்து உபயோகித்ததற்காக, சிங்கப்பூரில் சாங்கி சிறைச்சாலையில் ஒரு வருடம் சிறை வாசத்திற்கு பிறகு, கவிதை எழுத தொடங்கியவர். Sabata-mpho தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிர்த்து எழுத்துப்போராட்டம் செய்பவர். Ryoichi ஜப்பானின் Fukushimaவை சேர்ந்த கவிஞர். ட்விட்டரில் fukushima பற்றி ஹைக்கூ கவிதைகள் எழுதிவருபவர். மூவரும் தங்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள், அவற்றை எழுதுவது மூலம் கண்டடைந்த நிம்மதியை பற்றி பேசினார்கள். Ryoichi ட்விட்டரின் எழுத்து கட்டுப்பாடு, ஹைக்கூ மற்றும் தன்கா கவிதை வடிவங்களின் வரம்புகளோடு ஒத்திசைந்திருப்பதாக சொன்னார்.
“ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் தேவை. ஆன்மா, உடல் மற்றும் பாஸ்போர்ட்” என்ற வாக்கியத்துடன் ஷோபா ஷக்தி தனது பேச்சை துவங்கினார், “இதுல பாஸ்ப்போர்ட், உடல் — இது ரெண்டும் என் கிட்ட இல்ல. என் ஆன்மா மட்டும் உயிரோட வெச்சிருக்கேன். சொல்லப்போனா இலக்கியம் தான் என் ஆன்மாவை உயிரோட வெச்சிருக்கு.”
“தேசபக்தியைவிட பசி வலியது. தொழிலாளருக்கு தாய் நாடு இல்லை. இடம் பெயர்ந்தவர்கள் இலங்கை பற்றி பேசினாலும், யாரும் தாய் நாட்டிற்கு திரும்பி செல்வதில்லை. அப்படியே சென்றாலும், வெறும் ஹாலிடேக்கு மட்டும் தான். தமிழ் சினிமா தான் ஐரோப்பாவில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழை கொண்டுசேர்க்கும் பணியை செய்கிறது. தமிழ் சினிமாவை பார்த்து தான் வளைகாப்பு கூட கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். எஸ்.பொ துரோணர். நான் ஏகலைவன். இப்போது காந்தியின் சித்தாந்தம் என்னை ஈர்க்கிறது. உனது இலக்கு மட்டும் உன்னதமாக இருந்தால் போதாது, அதை சென்றடையும் பாதையும் உன்னதமாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். கபாலி படம் போல அல்ல. கூண்டில் இருக்கும் பறவையை விடுவிக்க வசனம் சொல்லிவிட்டு, அதற்கு முன்பும் பின்னரும் எல்லாரையும் சுட்டு வீழ்த்துகிறார்.” இப்படி பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
“கேள்வி கேட்கலாம்” என்றவுடன் அந்த ஜப்பானிய எழுத்தாளரை கேள்வி கேட்ட இளைஞன் ஞாபகம் இருக்கா? அவன் முதல் வரிசையிலிருந்து கை தூக்கினான். மைக் வந்ததும், “நீங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பார்க்கும் போது, வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்?” என்று தமிழில் கேட்டான்.
ஷோபா சக்தி அவனை பார்த்து விட்டு, “வாழ்க்கையின் அர்த்தமா? தத்துவமா? தம்பி, இந்த கேள்வி நீ ரெண்டு மாசம் முன்னாடி கேட்டிருக்கணும். ஜெயமோகன் இங்க வந்தாருல்ல? அவர் பதில் சொல்லிருப்பார்!”
அனைவரும் சிரித்து முடித்த பிறகு, “ஒண்ணே ஒன்னு சொல்லுறேன் மனசுல வெச்சுக்கோ…” தலையை கையால் தட்டி கொண்டே, “புத்தர் சொன்னது. வாழ்க்கை துயரமானது.”
“இலங்கையின் தற்போதைய எழுத்தில், யுத்தம் தவிர வேறு எழுத்து உள்ளதா?”
“40 ஆண்டுகளுக்கு மேல் மக்களின் வாழ்வை பாதித்தது இந்த யுத்தம். அதை பற்றி எப்படி எழுதாமல் இருக்க முடியும்? மூன்று தலைமுறையினர் படிக்கவே இல்லை. அங்கு இருக்கும் சிறுவனுக்கு ஆகாயத்தில் கேட்கும் சத்தத்தை வைத்து அது எந்த ஜெட் என்று சொல்லிவிட முடியும். ஆனால் அதே சிறுவன் சாதாரண ரயிலை வாழ்வில் பார்த்ததே இல்லை. இப்படிப்பட்டவர்கள் உயிருடன் இருக்கும் வரை, யுத்தம் தான் எழுதப்படும்.”
“உங்கள் எழுத்து நடை ஒரே மாதிரி இருக்கிறதே?” என்ற கேள்விக்கு, “நான் இலங்கையிலிருந்து தப்பி தாய்லாந்து சென்றபோது என்னிடம் இருந்த புத்தகங்கள் இரண்டு. ஒன்று பைபிள், இன்னொன்று பாரதியார் கவிதைகள். அந்த பைபிளின் உரை நடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடை பிடித்திருந்ததே தவிர, அந்த பைபிளை படித்து முடித்தவுடன் போன கடவுள் நம்பிக்கை இன்று வரை திரும்பவில்லை”
“எதிர்காலத்தில் தமிழ் வாழுமா?”
“பிஜியில் தமிழ் இல்லாமல் போய்விட்டது. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழ் நாட்டுடன் தொடர்பு இருப்பதால், தமிழ் இருக்கிறது. ஐரோப்பாவில் வளரும் அடுத்த தலைமுறையினர் ஐரோப்பியர்களாக தான் வளர்கிறார்கள். தமிழர்களாக அல்ல.” கடைசி வாக்கியத்தை எந்தவொரு சோகமும் இல்லாமல், சாதாரணமாக சொன்னார். அந்த தொனியே சரியான பதிலாக தோன்றியது.
“இலங்கையில் இப்போதைக்கு தோற்று விட்டோம். அந்த போராட்டம் மீண்டும் துவங்க வாய்ப்பு உள்ளதா? அப்படி துவங்கினால் உங்களின் பங்கு என்னவாக இருக்கும்?” இது இறுதி கேள்வி.
“நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும். ஈழ தமிழர்களும் உங்கள மாதிரி சாதாரண மனுஷங்க தான். அவங்களுக்கும் தங்களோட குழந்தைகளை படிக்க வெக்கணும், சேர்ந்து சாப்பிடணும், டி.வி பார்க்கணும் போன்ற ஆசைகள் இருக்கு. போர் யாருக்கும் வேண்டாம். அவங்க யாரும் “நாம ஜெயிக்கணும்!”னு கோஷம் போடல. நான் ஒரு தோல்வி அடைந்த போராளி. நாங்கள் இனி சாக தயாராயில்லை. நாங்கள் வாழ தான் போகிறோம்.” என்று அவர் முடித்தவுடன் பலத்த கரவொலி. கைத்தட்டலை கேட்டவுடன் அவரும் விடுக்கென தனது கைகளை தட்டினார்.
முதல் முறை என் வாழ்வில் புத்தகத்தில் அதன் எழுத்தாளரிடமிருந்து கையெழுத்து வாங்கினேன். ஷோபா சக்தியின் “கண்டிவீரன் சிறுகதைகள்”. பாக்ஸ் கதை புத்தகம் காணுமே என்று சிறிது நேரம் தேடி கண்டுபிடித்து, வெங்கட்டும் கையெழுத்து வாங்கினார். திரும்பியதும் கனகலதா நின்றுக்கொண்டிருந்தார். நானும் பாலாவும் அவரிடம் சென்று, “நேத்திக்கு தான் உங்க அலிசா கதை படிச்சோம். சூப்பரா இருந்துச்சு. ஆனா One Hour to Daylight படத்துல உங்க கதையை குதப்பி வெச்சுட்டாங்க” என்று புகார் செய்தோம். அந்த படத்தில் 4 கதைகளிலிருந்து கதாப்பாத்திரங்களை மட்டும் எடுத்து, கதையை மாற்றியிருக்கின்றனர் என விளக்கம் அளித்தார். அலிசாவின் அம்மா ஏன் வரவில்லை என்று கேட்டேன். புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. பாலா “அலிசா ஒரு அகதி தானே?” என்று அவரின் கண்ணோட்டத்தை பகிர, “அப்படியெல்லாம் இல்லை. தாத்தா பாட்டியோட இருக்கா. அவ்வளவு தான்.” என்றதும் “சரி இனிமே இவங்களை கேள்வி கேட்டு குடைய வேண்டாம்” என்று முடிவு செய்தோம்.
இறுதியாக “பெண்களின் உடல் சித்தரிப்பு” என்ற தலைப்பில் மூன்று சிங்கப்பூர் பெண் ஓவியர்கள் பேசினார்கள். Teeteeheehee, Weng Pixin, Anngee. அவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் பெண் ஓவியர்கள், அவர்களின் ஓவியங்கள் மூலம் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்துதல், பெண்ணாக இருப்பதால் ஓவிய துறையில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், பாலினமே இல்லாத உலகம் வேண்டும் என சென்றது.
இரவு 9.30 மணிக்கு, ரைட்டர்ஸ் பெஸ்டிவல் டேக்கை மடித்து பைக்குள் வைத்து, ஆர்ட்ஸ் ஹவுஸ் விட்டு வெளியே வருகையில், ஏனோ கற்றது தமிழ் படத்திலிருந்து “பறவையே எங்கு இருக்கிறாய்” பாட்டு கேட்க தோன்றியது. டாக்சிக்காக கை நீட்டும் பெண்கள், ரோட்டோரமாக அமர்ந்து மது பருகும் தொழிலாளர்கள் — இவர்களை தாண்டி, எம்.ஆர்.டி ஸ்டேஷன் நோக்கி நடந்தேன். காதில் இயர்போன்ஸ் மாட்டி, நா.முத்துக்குமாரின் வரிகளில் மிதந்தபடி…