உலக சினிமா – பாகம் 1

இந்த உலக சினிமா உலக சினிமான்னு சொல்லுறாங்களே… அப்படின்னா என்ன?

சிம்பிள்.

  1. சப்டைட்டில்ஸோடு பார்க்கும் போதே நம்மால படத்தோட ஒன்ற முடிஞ்சா
  2. நமக்கு தெரியாத ஒரு சமூக சூழல்ல இருக்கற கதாப்பாத்திரங்களோட உணர்ச்சிகள நம்மால புரிஞ்சிக்க முடிஞ்சா, உணர முடிஞ்சா

அது உலக சினிமா.

எனக்கு ரொம்ப பிடித்த 2 உலக சினிமாக்கள வெச்சு ஆரம்பிக்கறேன். இரண்டு படங்களுமே நான் அறியாத சமூக சூழல்ல அமைந்தவை. ஒன்னு 1960களில் இருந்த கல்கத்தா நகரில். இன்னொன்னு இந்த நூற்றாண்டுல ஈரான்ல நடக்குற படம். இரண்டு படங்களுமே குடும்பத்தை மய்யமா வெச்சு தான் சுழலுது.

மகாநகர் (1963)

கதை என்ன? 

1960கள்ல கல்கத்தாவுல, ஒரு நடுத்தர பழமைவாத குடும்பத்துல இருக்குற பெண், சேல்ஸ் கேர்ளா வேல செய்ய முடிவெடுத்ததும், அவள் குடும்ப உறவுகள்ல நடக்குற மாற்றங்கள்.

image

ஏன் நான் இந்த படத்த பாக்கணும்?

வங்கியில கிளார்க் வேலை செய்யுற ஒரு ஆள். அவரின் மனைவி. ஒரு இளம் பெண். ஒரு சுட்டி பய்யன். அந்த கிளார்க்கோட வீட்டுலேயே தங்கும் அவரின் அப்பா அம்மா. இவங்க தான் இந்த கதையின் மாந்தர்கள். பரவலா பெண்கள் வேலைக்கு போகாத ஒரு காலத்துல, ஒரு நடத்தற குடும்பத்து பெண் பண நெருக்கடினால வேலைக்கு போகும் போது, அவளோட மாமனார், மாமியார் அத எப்படி எடுத்துக்கறாங்க, அவளுக்கு ஊக்கம் கொடுக்கற கணவருக்குள்ள எதாச்சும் மாற்றம் வறுதா? அந்த பெண்ணுக்குள்ளையே என்ன மாற்றம் வருது? இந்த விஷயங்கள யதார்த்தமா சொல்லியிருக்கற ஒரு டிராமா.

டிராமான்னா சீரியல் மாதிரியா? பயங்கர உணர்ச்சிகரமா இருக்குமோ?

நம்ம ஊரு சீரியல் பண்ணிருக்கற ஒரு மிக பெரிய தப்பு, டிராமானாலே மிகைன்னு ஒரு எண்ணத்த நம்ம மண்டைக்குள்ள திணிச்சது தான். இந்த படம் பார்க்கும் போது டிராமாவோட உண்மையான அர்த்தம் புரியும். டிராமாவோட அடித்தளம் – ஒரு மோதல். அது எண்ணங்களோட மோதலா இருக்கலாம், இரு ஆட்களோட மோதலா இருக்கலாம். இந்த படத்துல பழமையும் புதுமையும் ஒரு மாநகரத்துல மோதிக்குது.

இதை பார்ப்பதால் என்ன பயன்?

சமீபத்துல நான் வாசகர் வட்ட சந்திப்பில ஒரு குறும்படம் திரையிட்டபோ, இதே கேள்வி தான். “இந்த படம் பார்ப்பதால் என்ன பயன்?”ன்னு கேட்டார் ஒருத்தர். சத்தியமா சொல்லுறேங்க… எனக்கு தெரியாது! என்னால சொல்லவும் முடியாது. பார்த்துட்டு நீங்களே முடிவுக்கு வாங்க.

இது சத்யஜித் ரே படம் தானே?

ஆமா! எப்படி கரெக்டா கண்டுப்பிடிச்சீங்க? அவர் பண்ண இந்த படம் பாத்துட்டு எனக்கொரு சிந்தனை. என் பேர சத்யஜித் தாசன்னு மாத்திக்கலாமான்னு…

image

தமிழ் சினிமால இல்லாதது அப்படி என்ன இந்த பெங்காலி படத்துல கண்டுட்டீங்க?

உறவுகளுக்குள்ள நடக்குற பேச்சுவார்த்தைகளோட யதார்த்தம். நமக்கு ரொம்ப நெருங்கிய ஒருத்தரோட, நாம தினமும் பாக்கற ஒரு குடும்ப உறுப்பினரோட, நாம முகம் பார்த்து தான் பேசனும்னு கட்டாயம் கிடையாது. பெண்டாட்டி சேலை மடிசிக்கிட்டு இருக்க, கணவன் வேலை விஷயம் ஏதோ செஞ்சுக்கிட்டு இருக்க, ஆனா இரண்டு பேரும் ஒரு சீரியஸான விஷயம் பேசிக்கிட்டு இருக்க முடியும். அந்த யதார்த்தம். பிளஸ் கதைக்கரு. சாமானிய மக்களை கதை மாந்தர்களா வெச்சு எழுதறது தமிழ்ல அரிது. பழி வாங்க நினைக்கும் பேய், மகளுக்காக அடிதடியில இறங்குற ரிட்டையர்ட் போலீஸ் அதிகாரி, தன்னோட அறிவால வில்லன கவுக்குற காமெடி கான்ஸ்டபில் – தமிழ்ல நமக்கு இவங்க தானே கதை மாந்தர்கள்?

ஹல்லோ பாஸ்! தமிழ்ல காக்காமுட்டை, பாபநாசம் போன்ற படங்களும் வந்திருக்கு. சரியா?

ஆமாங்க. காக்காமுட்டை கூட உலக சினிமா தான். இங்க யாரும் தமிழ் சினிமாவுக்கு எதிரி இல்ல! பாபநாசமும் ஒரு சாமானியனோட கதை தான். அதே போல தான் மகாநகரும்.

1960ன்னு சொல்றீங்களே? ப்ளேக் அண்ட் வைட் படமா?

எஸ்! கலர் இல்லாட்டியும் விஷுவல்ஸ் செம்மையா இருக்கு.

சப்டைட்டில்ஸ் வெச்சுக்கிட்டு படம் பார்க்கனுமா? அதுக்கு பேசாம நான் தமிழ்ல எதாச்சும் ஒரு டிமான்ட்டி காலணியோ இல்ல டார்லிங்கோ பாத்துட்டு போறேனே…

உங்க இஷ்டம். படத்தோட ட்ரெயிலர் இதோ!

ஏ செபரேஷன் (2011)

கதை என்ன?

11 வயது பெண் குழந்தை இருக்கும் ஒரு தம்பதியினர், ஒரு கடினமான முடிவு எடுக்க வேண்டும். ஈரானிலேயே இருந்து அல்சைமர்ஸ் இருக்கும் தாத்தாவை பார்த்துக்கொள்வதா? இல்லை மகளின் எதிர்காலத்திற்காக ஈரானை விட்டு வெளியூர் புலம் பெயர்வதா?

image

இந்த படத்துல என்ன ஸ்பெஷல்?

படம் ஆரம்பமே ஒரு கணவனும் மனைவியும் விவாகரத்து கேட்டு ஒரு ஜட்ஜ்கிட்ட பேசறாங்க. அவங்க பேச்சின் மூலமா அவங்க ஆழ் மனசுல இருக்கற பிரச்சனை நமக்கு தெரிய வருது. இந்த படத்துல ஈரான்ல நடக்கற அரசியல் பிரச்சனைகள வெளிப்படையா காட்டலனாலும், அந்த மனைவி இந்த ஊர விட்டே போகணும்னு சொல்லுறது மூலமா, அந்த நாட்டுல இருக்கற பிரச்சனைகள் பூடகமா பதிவாகுது.

படத்துல இன்னொரு ஸ்பெஷல் – முக்கிய கதாப்பாதிரத்துல நடிக்கும் நடிகர். அது மட்டும் இல்ல. 2012ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு படம்னு ஆஸ்கார் வாங்கிருக்கு இந்த படம்.

இந்த படத்த ஏன் பாக்கணும்?

ஒரு படம் வெறும் பொழுது போக்கு மட்டும் கெடையாது. அது ஒரு புது உலகத்துக்கான ஜன்னல்னு கூட சொல்லலாம். ஈரான் போன்ற ஒரு நாட்டுல இருக்கற சாமானியர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள், இதெல்லாம் தெரிஞ்சுக்கலாம்.

வயசான தாத்தா ஒருத்தர பாத்துக்க ஒரு வேலைக்கார அம்மா வருவாங்க. அந்த தாத்தா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடுவார். ஆனா இந்த அம்மா போய் தூக்க தயங்குவாங்க. ஏன்னா அவங்க சமூக விதிபடி வேறொரு ஆனை தொடக் கூடாது!

ஒரு அழகான தந்தை மகள் உறவு இருக்கு. மனைவியும் கனவனுக்குமான கருத்து வேறுபாடு செம்மயா சித்தரிக்கப்பட்டிருக்கு. ஒண்ணுமே இல்லாத ஒரு சின்ன பிரச்சனை, வெடிச்சு பெருசாகும். அந்த பிரச்சனை மூலமா தந்தை மகள் உறவு என்ன ஆகுது, கணவன் மனைவி உறவு என்ன ஆகுது… இது தான் கதை.

அப்பா மகள் உறவு… இது ராமின் தங்கமீன்கள்லயே வந்துடுச்சே…

இது கொஞ்சம் வேற மாதிரி. அப்பா மேல ஒரு குற்றம் சாட்டப்படும். அது அவர் செஞ்சாரா இல்லியான்னு பொண்ணுக்கே ஒரு குழப்பம். ஆனா இதெல்லாம் விட படத்துல என் மனசுல நின்ன ஒரு காட்சி. யதார்த்தமா நம்ம வாழ்க்கையில பார்க்க கூடிய ஒரு காட்சி தான். பெட்ரோல் பங்க்ல வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு பொண்ணு கிட்ட காசு கொடுத்து போய் கொடுக்க சொல்லுவாரு அப்பா. பெட்ரோல் பங்க் காரன் சரியான சில்லறை கொடுக்க மாட்டான். பொண்ணு திரும்ப வர்றப்போ, அவள போய் சரியான சில்லற வாங்கி வரசொல்லுவார் அப்பா.

image
image

அப்புறம் ரியர் வியூ மிர்ரர்ல அவ எப்படி தைரியமா பெட்ரோல் பங்க் ஆளு கிட்ட போய் பேசறான்னு ஒரு புன்னகையோட பாப்பாரு. வார்த்தைகளே இல்லாம ரியர் வியூ மிர்ரர் வழியா, அப்பா பெண்ணை பார்க்கும் அந்த பார்வை தான் உலக சினிமா!

அந்த காட்சியின் லிங்க் இதோ – https://www.youtube.com/watch?v=-3pgz4puK8s&t=20m42s

இந்த படத்தின் ட்ரெயிலர் இதோ!

Leave a Reply

%d bloggers like this: