வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை

“எனது கதைகள் விமர்சகர்களின் அளவுகோல்களுக்குள் அடங்காதவை. என் கதைகளின் அருகில் அளவுகோல்களை வைப்பதன் மூலம், அவர்கள் என் கதையை அளக்கவில்லை. அவர்களின் அளவுகோல்களை அளந்துகொள்கிறார்கள்.” சொன்னது புதுமைப்பித்தன். அவர் சொன்னது என்னுள் உண்டாக்கிய தயக்கத்துடன் வல்லினம் 100 தொகுப்பில் இடம்பெற்ற 11 சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறேன்.

வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை, எளிமையாகக் கடந்துபோக விடாமல், நம்மைப் பிடித்து நிற்கவைத்து, உற்றுநோக்கவைப்பதே கதைகளின் வேலை. இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இதைச் சிறப்பாக செய்கின்றன.

ரப்பர் தோட்ட தொழிலாளிகள், டாக்சி ஓட்டுநர்கள், மசாஜ் செய்யும் பெண்கள், கஞ்சா விற்பவர்கள், அவர்களின் குழந்தைகள், செக்யூரிட்டி கார்ட்ஸ், வெளிநாட்டிலிருந்து தொழிலாளிகளை கொண்டுவந்து இறக்கும் ஏஜென்ட், கடன் வசூலிப்பவர்கள். இவர்களே இக்கதைகளில் உலாவும் மாந்தர்கள். கையில் அதிகாரம் இல்லாதவர்கள், சூழ்நிலையின் கைதிகள், அடக்கப்படுபவர்கள். தன்னை தானே புழு போல, நுரை குமிழி போல உணர்பவர்கள். பல கதைகள் இம்மக்களின் துன்பங்களையும், வாழ்க்கையையும் விவரிக்கின்றன. இதற்கு முதல் எடுத்துக்காட்டு கோ.புண்ணியவான் எழுதிய ‘ஈ’.

சிவப்பு ஐ.சி வைத்திருக்கும் வேலையா என்கிற ரப்பர் தோட்ட தொழிலாளியின் கதை “ஈ”. தொடர்ந்து வேலை செய்ய, அவன் ஓர் அதிகாரியிடமிருந்து கையெழுத்து வாங்க வேண்டும். கிராணியிடம் ஒரு கடிதத்திற்காக கெஞ்சி, பிறகு ஆபிசில் ஒரு பாரம் கொடுக்க ரைட்டரிடம் வரிசையில் நின்று, கடைசியில் பெற்று வெளியேறுவது தான் கதை. கதை முழுக்க அவன் காதில் குடைச்சல் கொடுக்கும் நீரும், மாட்டுச்சாணத்தில் மொய்க்கும் ஈக்களும் அவனின் நிலையற்ற வாழ்க்கையைக் குறிக்கின்றன. இத்தகைய தொழிலாளிகளின் நிலை மிக அழகாக நுரைக்குமிழியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. “வேலைக்காக வேரோடு பெயர்வது, பழகிய மனிதர்களைத் துறப்பது, வாழ்ந்த நிலத்தை விட்டு விலகுவது வலி மிகுந்தவை. ஒவ்வொரு தோட்டக் கிராணியின் கைகால்களைப் பிடிக்கும் அவலம்தான். அவை உடைந்து மறையும் நுரைக் குமிழி வாழ்க்கை.” இவ்வரியின் சாரம் கதையோட்டத்தின்வழி பூடகமாக சொல்லப்பட்டிருக்கலாம் எனத் தோன்றினாலும், இது பொருத்தமான ஒரு காட்சி படிமம்.

அடுத்த சிறுகதை சண்முக சிவா எழுதிய ‘கனவு’. அருணா எனும் சிறுமியின் தாய் தந்தை கஞ்சா விற்று போலீசிடம் மாட்டிக்கொண்டவர்கள். அருணா சதா கனவுலகில் வாழ்கிறவள். தான் கண்ட கனவை அருணா ஆசிரியரிடம் விவரிப்பதுடன் கதை தொடங்குகிறது, இன்னொரு கனவை விவரிப்பதோடு கதை முடிகிறது. கச்சிதமான கதை வடிவம். பெற்றோர்களின் அன்பில்லாமல், பலவித அதிர்ச்சிகளுடன் வளரும் ஒரு சிறுமி தன்னைக் கனவுகளுக்குள் மூழ்கடித்துக்கொள்ளும் கதைக்கரு அருமை.

வாடகை வண்டி ஓட்டுநர்கள் இருவரை இரு கடன் வசூலிப்பவர்கள் போட்டு அடித்து உதைக்கும் கதை மதியழகன் முனியாண்டி எழுதிய ‘குளத்தில் முதலைகள்’. முழுக்கதையும் ஓர் இரவில் குளத்தருகே இருக்கும் அய்யனார் கோவிலில் நடக்கிறது. நடப்பவை அனைத்திற்கும் அய்யனார் மௌன சாட்சியாக இருக்கிறார். “பணம் இல்லாவிட்டால் வீட்டில் பிரச்சனை வரத்தானே செய்யும். வீட்டில் பிரச்சனை சீன பட்டாசுப் போல பட பட படவென வெடிக்கத் தொடங்கியது.” இப்படியான மண்சார்ந்த உவமைகள் கதைக்குள் வந்திருப்பது சிறப்பு.

ம.நவீன் எழுதிய ‘மசாஜ்’ சிறுகதையில்திருநாவுக்கரசு தனது நண்பனான கதைசொல்லியை விதவிதமான மசாஜ் பார்லர்களுக்கு அழைத்துச் செல்கிறான். ஒவ்வொரு மசாஜையும் அனுபவிக்கிறான். ஆனால் கதைசொல்லிக்கு கூச்சமும், ஏமாற்றப்படுகிறோம் என்கிற உணர்வும் மேலோங்கி நிற்கிறது. இந்த மசாஜ் அனுபவங்களும், கதைசொல்லி சிறுவயதில் தன் அப்பா ஆடும் காமன் ரதி கூத்தை பார்த்த நினைவுகளும் கதையில் இழையோடுகின்றன. ரதியாக அரிதாரம் பூசிக்கொண்ட தனது தந்தை மன்மதன் மரணத்திற்கு அழும் ஒப்பாரியும், நாட்டை மற்றும் உறவுகளை இழந்த மசாஜ் செய்யும் பெண்ணின் கண்ணீரும் இறுதியில் கலக்கின்றன. இந்தக் கண்ணீரும் ஒப்பாரியும் காமம், இன்பம், பிரிவு, சோகம் பரவியிருக்கும் ஆழ்ந்ததோர் வெளிக்கு நம்மை இழுத்துச் செல்கின்றன.

சூழ்நிலை கைதிகளை பற்றிய சிறந்த கதை உமா கதிர் எழுதிய ‘பிணை’. சிங்கையில் வேலைக்கு வரும் செந்தில், அவனைப் போன்ற தொழிலாளிகளை இங்கு இறக்கும் ஏஜென்ட் ரெங்கசாமி, ரெங்கசாமியிடம் ஆட்கள் கேட்கும் நிறுவனம், இந்த தொழிலாளிகளுக்காக கொண்டுவரப்படும் விலைமகளிர், அவர்களின் ஏஜென்ட் சரவணன், அவனிடமிருந்து காசு வசூலித்துச் செல்லும் மீசுங், பிரச்சனை வந்தால் வரும் வழக்கறிஞர் – சிங்கையில் இப்படி ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் எல்லாரும் “பிணை” கதையின் மாந்தர்கள். சிறுகதையில் பல கதாப்பாத்திரங்கள் இருந்தால் குழப்பில்லாமல் கதை சொல்வது கடினம். அதை இக்கதையில் நேர்த்தியுடன் செய்திருக்கிறார் உமா கதிர். மாந்தர்கள் மட்டுமில்லாமல் ரெங்கசாமியின் கைப்பேசி, லாயர் அலுவலகத்தில் இருக்கும் கணினிகள், மீசுங்கின் சைக்கிள், டாட்டூ – இவையும் இந்த தொடர் சங்கிலியின் பாகங்களாக எனக்குப் பட்டது. ஒரே சம்பவம் மற்றும் அது உண்டாக்கும் அதிர்வலைகளைக் கதை பின்தொடர்ந்து செல்கிறது. கதைக்கு இதுவொரு சிறப்பான வடிவத்தைத் தந்துள்ளது.

சிங்கப்பூர் மலேசியா போன்ற பல்லின சூழலுள்ள நாடுகளுக்கே உரித்தான சில பிரச்சனைகள் உண்டு. இனக்குழுக்கள் தங்களின் எல்லைகளைத்தாண்டி உரசிக்கொள்ளும் போது ஏற்படும் தீப்பொறிகள். இவற்றை மூன்று கதைகள் தொடுகின்றன.

அரு.சு.ஜீவனந்தன் எழுதிய ‘சக்கரம் சுழலும்’ என்கிற கதை இப்படிப்பட்ட ஒரு தருணத்தை சுற்றி சுழலுகிறது. திடீரென தெருவில் ஒரு விபத்து நடக்கும் போது, விபத்திற்குக் காரணமானவர் வேறு இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், நிலைமை எப்படி கடகடவென்று கைமீறி செல்லக்கூடும் என்பதைச் சுட்டுகிறது.

“உரசல்கள் வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்களிடையே மட்டும் தான் ஏற்படுமென அவசியமில்லை, எங்களுக்குள்ளையே அடித்துக்கொள்வோம்” என்று உணர்த்தும் கதை எம்.கே.குமாரின் ‘மோர்கன் என்றொரு ஆசான்’. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த மோர்கன் என்கிற செக்யூரிட்டி கார்டுக்கும், இந்தியாவிலிருந்து குடியேறி வந்து வேலையில் மளமளவென வளரும் செந்திலுக்குமான உறவைப் பற்றிய கதை. சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த லிட்டில் இந்தியா கலவரம், மோர்கன் போன்ற சிங்கப்பூர் தமிழரின் மனதில் தமிழ்நாட்டிலிருந்து வந்தவரிலிருந்து தன்னை தனித்துப் பார்க்கும் எண்ணத்தை விதைக்கிறது. மோர்கன் மீது தீர்ப்பேதும் அளிக்காமல் இதைச் சுட்டியிருப்பதே இக்கதையின் வெற்றி.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கதை கே.எஸ்.மணியத்தின் ‘பென்டாத்தாங்’. “பென்டாத்தாங்” என்கிற சொல்லை மையமாகக்கொண்ட கதை. “பென்டாத்தாங்” மலாய் சொல், குடியேறிகளைக் குறிப்பதற்கு  புழக்கத்தில் வந்து, பிறகு வசைச்சொல் போல மாறியிருக்கிறது. சிங்கையில் “வந்தேறி” என்கிற சொல் பலரின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறது. அது போலவே தனது நண்பர் “பென்டாத்தாங்” என்றவுடன் தூக்கம் இழந்து சிந்தனையில் மூழ்கும் கிருஷ்ணனின் கதை. அச்சொல்லை வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு அர்த்தங்களில் பார்க்கும் கதை. அச்சொல்லின் வழியாக மலேசிய வரலாறு மட்டுமின்றி உலக வரலாற்றையே தொட்டுப் பேசும் கதை. அடர்த்தியான மொழியாலும், எழுதப்பட்டிருக்கும் விதத்தாலும் இக்கதை பிற கதைகளிலிருந்து தனித்து நிற்கிறது. கதையின் முடிவில் வரும் சில வரிகள், யார் குடியேறி என்கிற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

“ஆம் நான் எப்போதும் வந்துகொண்டிருப்பவன்தான். வந்துகொண்டே இருக்கிறேன். ஆனால், வந்தடையப் போவதில்லை. வந்தடைதல் என்பது மரணம். வந்தடைந்துவிட்டால் பிரயாணப்படுதல் இல்லை. எங்கே வந்தடைவது? எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் எப்போதும் வந்துகொண்டிருப்பவன்தான். அடைவை வந்தடையாதவன். வந்துகொண்டிருப்பவன்”.

பல படிமங்களும், மாய எதார்த்த காட்சிகளும் கொண்ட இக்கதை விஜயலட்சுமியால் அருமையாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இது போன்ற மொழிபெயர்ப்பு கதையும் இத்தொகுப்பில் இருப்பது கூடுதல் சிறப்பு. கோணங்கி “கல்குதிரை” இதழிலும் பல உலக மொழி படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். இது முக்கியம். பிற மொழிகளில் எப்படிப்பட்ட கதைகள் எழுதப்படுகின்றன என்ற பிரக்ஞையை கொடுக்கும். சிந்தனைகளில் பல கலவைகளை நிகழ்த்தி, எழுத்தின் பரிணாம வளர்ச்சிக்கு உதவும்.

இத்தொகுப்பிலுள்ள மூன்று கதைகள் கதைக்கருவால் மற்றும் சிறப்பாக எழுதப்பட்ட விதத்தால் தனித்து நிற்கின்றன.

குழந்தையின் கோணத்திலிருந்து தனது தந்தையும் பக்கத்து வீட்டுப் பெண்ணும் கொள்ளும் தொடர்பை பற்றி எழுதப்பட்டிருக்கும் கதை செல்வன் காசிலிங்கத்தின்”வலி அறிதல்”. வீட்டிலிருக்கும் தொலைக்காட்சி மூலமாகப் பல விஷயங்களை உணர்த்துவதனால், எழுத்தாளர் தேர்ந்த கதைசொல்லி எனத் தெரிகிறது. அசோகமித்திரன் எழுதிய இன்ஸ்பெக்டர் செண்பகராமன் குறுநாவல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அதிலும் சிறுவனின் கண்ணோட்டத்திலிருந்து முதிர்ந்தவர்களின் உலகை எழுதியிருப்பார். அதை இக்கதை நினைவுபடுத்தியதில் எனக்கு சந்தோஷம்.

இருத்தலியல் குழப்பநிலை, முதுமையில் தனிமை, வாழ்வைப் பின்னோக்கி பார்க்கும் போது ஏற்படும் கசப்பு – இவற்றை விவரிக்கும் கதை ஸ்ரீதர் ரங்கராஜ் எழுதிய ‘இருப்பது’. தனிமையில் வாழும் ஒரு வங்கி ஊழியர் ஓய்வு பெற போகிறார். மனைவி இறந்துவிட்டாள். பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போய்விட்டனர். தனது வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது இவருக்கு கசப்பு மட்டும் மிஞ்சுகிறது. எண்ணங்களையே துணையாகக்கொண்டு வாழ்கிறார். ஆகவே நனவோடை உத்தி இக்கதைக்குக் கச்சிதமாக பொருந்துகிறது. கசப்பும் நனவோடையும் அசோகமித்திரனின் “காந்தி” சிறுகதையை நினைவூட்டியது. நல்ல விதத்தில் தான். “காந்தி” கதை காபியின் கசப்பில் ஆரம்பித்து நனவோடையாக ஓடிச்செல்லும். ஸ்ரீதரின் கதை மய்ய கதாப்பாத்திரம் செடிகளுக்கு நீர் ஊற்றுவதில் தொடங்கி, தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நடக்கும் தண்ணீர் பிரச்சனையைத் தொட்டு முடிகிறது. கதை முழுவதும் நீர் ஏதோவொரு ரூபத்தில் மய்ய கதாப்பாத்திரத்தை பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

நீர் பொழிவதன் மூலம் மரம் செடிகொடிகளுக்கு வாழ்வு கிடைக்கிறது. வாழும் போது நீர் போன்ற அத்தியாவசிய விஷயத்துக்கு மனிதர்கள் அடித்துக்கொள்கிறார்கள். மரணத்திற்குப்பின் அதே நீரில் கடைசி சடங்குகள் நடைபெறுகின்றன. இந்த வாழ்க்கை சுழற்சி மிக அழகாகவும் பூடகமாகவும் இக்கதையினுள் பொதிந்துள்ளது.

கல்யாணம் நின்று போன ஒரு பெண்ணும், அவளின் அம்மாவுடனான உறவும் லதாவின் ‘நிர்வாணம்’ கதையின் மய்யம். அம்மாவுக்குப் புற்றுநோய் வந்து, அதற்கான சிகிச்சை நடக்கும் சமயத்தில், அம்மாவுக்கும் மக்களுக்குமான உறவு நெருக்கமடைகிறது. இளவயதில் அம்மாவுடன் சேர்ந்து குளிக்கும் பெண், வளர்ந்ததும் தனியாக உடைமாற்றிக்கொள்கிறாள். அம்மாவுக்கும் அதே கூச்சம் வந்துவிடுகிறது. கதையின் முடிவில் இருவரும் முழு நிர்வாணமாகக் கண்ணாடி முன் நின்று தங்களின் உடல்களைப் பார்த்து பேசிக்கொள்ளும் காட்சி இத்தொகுப்பின் சிறந்த சிறுகதை தருணம்.

இந்த 11 கதைகளும் மிகை உணர்ச்சிகள், பழமைவாதம் போன்ற வழக்கமான புதர்களில் தடுக்கி விழாமல் தப்பித்துவிட்டன. மலேசிய, சிங்கப்பூர் மண்சார்ந்த வாழ்வைப் பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பும் தெரிகிறது. பல ஆழ்ந்த பிரச்சனைகளை, கேள்விகளை அனாயாசமாக இக்கதைகள் எழுப்பிச் செல்கின்றன.

எனக்குத் தோன்றிய சில குறைகள். இத்தொகுப்பில் பல கதைகள் குறியீட்டு டெம்ப்லேட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றன. குறியீட்டு டெம்ப்லேட் என்றால் கதையில் ஏதோவொரு பொருளோ, விஷயமோ குறியீடாக வரும். உதாரணத்திற்கு, “அவன் பாதையில் நடந்தான். வெய்யில் அடித்தது. வியர்வை வழிந்தது. சாலையோரமாக ஒரு பூவை பார்த்தான்.” பிறகு இறுதி இரண்டு மூன்று வரிகளில் அந்தப் பொருளை மீண்டும் கொண்டுவந்து கதையை முடிப்பது. “சாலையோரம் படுத்திருந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போது அவனுக்கு அந்தப் பூ நினைவில் வந்தது.” இப்படி நீங்கள் முடித்தால், அது குறியீட்டு டெம்ப்லேட் கதை. கதையைப் படித்தவுடன் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அந்தப் பூ ஏன் திரும்ப வந்தது என்று வாசகன் யோசிக்கலாம்.

ஆனால் இப்படிப்பட்ட கதைகளின் தாக்கம் மிகக் குறைவு. இப்படிப்பட்ட குறியீடுகளை கதைக்குள் வைப்பதால், கதை சிந்தனை தளத்தில் மட்டுமே செயல்படுகிறது, உணர்ச்சி தளத்தில் அல்ல. இந்தச் சிக்கல் இத்தொகுப்பின் பல கதைகளில் உள்ளது. காரணம் அவை தீவிரமான கதைகள் போல கட்டமைக்கப் பட்டுள்ளன. கத்தி படத்தில் விஜய் மேசைக்குக் கீழ் குனிந்து பார்க்கும் போது, சிறையின் குழாய் அமைப்பு முழுதும் தெரியும். அது போல இக்கதைகளைப் படிக்கும்போது அவற்றின் கட்டமைப்பு தெரிவதால், உணர்ச்சிகரமான தாக்கம் ஏற்படுவதில்லை. கட்டமைப்பு மீது கவனம் செல்லாமல், சிறந்த கதைகள் படிப்பவரை தங்களின் உலகிற்குள் இழுத்துக்கொள்ளும். இது பல கதைகளில் நிகழவில்லை.

குறியீடு மூலமாக யோசிக்கவும் வைத்து, உணர்ச்சிகளையும் தூண்டிவிடும் கதைகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் ஷோபா சக்தியின் “ரூபம்”. கோணங்கி அவர்கள் எழுதிய “கருப்பு ரயில்” சிறுகதை எழுத்தில் குறியீடுகளின் சாத்தியங்களைக் காட்டி ஒரு புதிய உலகையே திறந்து விடும். இது போன்ற கதைகளை முன்னோடியாக வைத்து எழுதலாம்.

இன்னொரு பிரச்சனை – ஏராளமான தகவல்களை கதைக்குள் திணிப்பது. நல்ல இலக்கியம் குறித்து சொல்லப்படும் பொதுக்கருத்து, அது வாழ்வியலைப் புகைப்படம் போல தன்னுள் பிடித்து வைத்துக்கொள்ளும். ஒரு கதையை படிக்கும் போது கதை நடக்கும் நிலத்தைப் பற்றியும், அம்மக்களின் வாழ்வியலைப் பற்றியும் வாசகன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் நல்லது. ஆனால் தகவல்களை கதைக்குள் நிரப்பினால், கதை கட்டுரையாகிவிடுகிறது. சிறுகதையின் வடிவமே கச்சிதமாக இருப்பதால், அதில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் ஏதோவொரு காரணத்திற்குதான் இருக்கவேண்டும். இதைச் சிறப்பாக செய்தது ஸ்ரீதர் ரங்கராஜ், “இருப்பது” கதையில். அக்கதையில் பல தகவல்களும், விவரணைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் தேவையானவையே. பிற கதைகளில் தகவல்கள் சற்று மிகுதியாக உள்ளன.

இந்தச் சிறுகதைகளை படித்தவுடன் எனக்குத் தோன்றிய கேள்வி – இருளில் மட்டுமே இலக்கியத்தைத் தேட வேண்டுமா? வலி, துன்பம், இழப்பு, மரணம் போன்ற இருண்ட வெளிகளையே இக்கதைகள் சுற்றிவருகின்றன. புதுமைப்பித்தன் எழுதிய “ஒரு நாள் கழிந்தது” சிறுகதை ஓர் ஏழைக் குடும்பம் எவ்வாறு காசு நெருக்கடியில் ஒரு நாளைக் கழிக்கிறது என்று காட்டும். வறுமை, பசி, வலி போன்ற உணர்ச்சிகளைக் கொண்ட அக்கதையிலும், ஒரு சிறுமி வழியாக அவ்வப்போது சில பளிச்சிடும் தருணங்களும் தோன்றும். ஒரு கடைகாரரிடம் கடனுக்கு தீக்குச்சி வாங்கிவிட்டு வீடு திரும்பும் போது வரும் பத்தி இது.

பாதி வழியில் போகையில், “அப்பா!” என்றது குழந்தை.

அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல் கொஞ்சம் கடினமாக, “என்னடி!” என்றார்.

“நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!”

“கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!”

“அதோ பார். பல்லு மாமா!”

முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது.

இப்படிப்பட்ட மின்னல் தருணங்கள் இக்கதைகளில் தென்படவில்லை. தோட்ட தொழிலாளிகளின் வாழ்க்கை துயரம், வலி மட்டும் நிறைந்தது தானா? மலேசிய மக்களின் சந்தோஷங்களை இத்தொகுப்பில் பார்க்க முடியவில்லை. இது ஒன்றும் பெருங்குற்றமல்ல. இதற்கு இன்னொரு தொகுப்பு போட்டால் போதும்.

ஒட்டுமொத்தமாக இந்த 11 சிறுகதைகளும் தமிழுக்கு தேவை. ஏறலாமா வேண்டாமா என்று ஏணியின் அடியில் நின்று யோசிக்காமல், இத்தொகுப்பின் எழுத்தாளர்கள் சட்டென ஏறி விட்டார்கள். இன்னும் மேலேறிச்செல்ல அணைத்து சாத்தியங்களும் இருப்பதை இக்கதைகள் உறுதிப்படுத்துகின்றன. அவ்விதத்தில் இத்தொகுப்பின் சிறுகதைகள் ஒரு சிறப்பான முயற்சி. “You must stay drunk on writing so that reality cannot destroy you.” இது எழுத்தாளர் ரே ப்ரேட்புரி சொன்னது. எழுத்தின் போதையில் திளைத்து மேலும் பல சிறப்பான கதைகள் எழுத வாழ்த்துகள். வல்லினம் போன்ற சீரிய இலக்கிய இயக்கம் சிங்கையில் இருக்கிறதா என்ற கேள்வி என்னை குடைய, இக்கட்டுரையை முடிக்கிறேன்.

Leave a Reply

%d bloggers like this: