வாசிப்பும் வடிவமும் வடையும்

ஏப்ரல் மாத தி செராங்கூன் டைம்ஸ் இதழில் நண்பர் சிவானந்தம் எழுதிய “நுனியில் முகிழ்க்கும் நறுமணம்” படித்தேன். நல்ல கட்டுரை. புத்தகம் படிப்பதை தியானத்துடன் அவர் ஒப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (அப்படி பல தடவை தியானங்களில் ஈடுபட்டு என்னையே மறந்ததினால்.) அதே சமயம் என்னை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயமும் ஞாபகம் வந்தது.

வாசிப்பின் நன்மைகள் என்று அவர் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் பிற ஊடகங்களிலும் கிடைக்கும் என்பதே என் கருத்து. சில உதாரணங்களை பார்ப்போம்.

வீடியோ கேம்ஸ்

இவற்றின் மீது பொதுவாக வைக்கப்படும் புகார், “ஏதோ பொழுது போகாம டி.வி முன்னாடி உக்காந்திட்டு இருக்காங்க இந்த காலத்து பசங்க. கண்ணு கெட்டு போகாது? ஓடி ஆடி விளையாடினாதானே உடம்பு ஆரோக்கியமா இருக்கும்? ச்சே! அந்த காலத்துல…”

வீடியோ கேம்ஸ் மட்டுமில்லை, எதற்குமே அடிமை ஆவது தவறு தான். ஆனால் அவற்றின் முக்கியமான அம்சத்தைக் கவனிக்க தவறுகிறோம். அவற்றிலும் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. புத்தகத்தில் பக்கங்களை திருப்புவது மட்டும் தான் நமது செயல். ஆனால் வீடியோ கேமின் உலகில் நாம் விரும்பிய திசைகளில் செல்லலாம், நினைத்த இடங்களை ஆராயலாம். ஒவ்வொரு முறை விளையாடும் போதும் நாமே கதையை எழுதுகிறோம்.

உதாரணத்திற்கு ஹாரி பாட்டர் கதைகளை வைத்து பல வீடியோ கேம்ஸ் தயாரிக்க பட்டுள்ளன. புத்தகங்களில் இடம்பெற்ற கதைக்களம் மட்டும் தான் இருக்கும். அக்களத்தில் நாம் எந்தக் கதாப்பாத்திரத்தின் கோணத்திலிருந்தும் விளையாடலாம். நமக்கு பிடித்த திசையில் கதையை நகர்த்தி செல்லலாம். Multi-player modeல் விளையாடும் பொழுது, ஒரே கதையை பற்பல நபர்கள் உருவாக்கிக்கொண்டே அனுபவிக்கிறார்கள். பத்து பேர் சேர்ந்தமர்ந்து ஒரே புத்தகத்தை வாசிப்பது போல.

ஸ்டேண்டப் காமெடி

நமது தொலைக்காட்சிகள் இதன் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கின்றன. மிமிக்ரி செய்து மக்களுக்குச் சிரிப்பு மூட்டுவது மட்டும் “ஸ்டேண்டப் காமெடி” அல்ல. ஸ்டேண்டப் காமெடியும் ஒரு வித கதை சொல்லல் தான். ரஸ்ஸல் பீட்டர்ஸ், கென்னி செபாஸ்டியன் போன்ற ஸ்டேண்டப் காமெடி கலைஞர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்கிறார்கள். பாட்டி தாத்தாவிடம் கதைகள் கேட்டறிவது போல, மேடையில் மைக்குடன் நிற்கும் ஒரு மனிதனின் கதையை தெரிந்து கொள்வது தான் உண்மையான ஸ்டேண்டப் காமெடி.

ரியாக்ஷன் வீடியோ

2008ம் ஆண்டு இரானிய திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியாராஸ்தமி “ஷிரின்” (Shirin) என்றொரு படம் வெளியிடுகிறார். முழு படமும் ஒரு திரையரங்கிற்குள் நடக்கிறது. பின்னணியில் படம் ஓடிக்கொண்டிருக்க, அங்கே அமர்ந்து படம் பார்ப்பவர்களின் முகங்களை மட்டும் காட்டுகிறார். காட்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்களின் முக பாவங்கள் ஒரு கதை சொல்கின்றன என்பதுதான் இப்படத்தின் வித்து. நீங்கள் நிம்மதியாக அமர்ந்து உங்களுக்கு பிடித்தப் புத்தகத்தை படிப்பது போலக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் படிப்பதை வீடியோ எடுத்தால், உங்களின் முக பாவங்கள் தனிவொரு கதை சொல்லாதா? அது தான் தற்போது ரியாக்ஷன் வீடியோக்களாக யூட்யூபில் பிரபலமாக உள்ளது. ஆனால் அவற்றைப் பெரிதாக நாம் மதிப்பதில்லை. “இதுல என்ன இருக்கு? சும்மா உக்காந்து டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு. சங்க இலக்கியத்துல…”

மீம்

இதுவும் வெறும் வெட்டிப்பேச்சு கிண்டல் கேலியின் வடிவம் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது? அதை ஆராய்ந்தாலே புரிந்துவிடும். டானியல் சி. டென்னெட் என்ற விஞ்ஞானி நிறுவிய வார்த்தை தான் “மீம்”. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு உடல் அம்சங்களைக் கடத்தி செல்லும் தூதர்கள் “ஜீன்ஸ்” அல்லது மரபணுக்கள். அவற்றைப் போல ஒரு மனித மூளையிலிருந்து இன்னொரு மனித மூளைக்குத் தகவலை எடுத்துச்செல்லும் கருவி தான் “மீம்”. மீம் என்பது சமூக வலைதளத்தில் பகிரப்படும் படங்கள் மட்டுமல்ல. அவை மீம்களின் ஒரு வடிவமே.

அவையும் கதைகளே. வடிவேலு, கவுண்டமணியின் பல புகைப்படங்களை எடுத்து, வார்த்தைகளைச் சேர்த்து, ஒரு கதையை சொல்கின்றன. அவை உங்களை சிரிக்க வைக்கின்றனவா சிந்திக்கவைக்கின்றனவா என்பது அந்தந்த மீமை உருவாக்குபவரைப் பொறுத்தது. அது வடிவத்தின் பிழை ஆகாது. உதாரணத்திற்கு, இரண்டாம் உலக போர் பல நாட்டு தலைவர்கள் விளையாடிய வீடியோ கேம் விளையாட்டாக இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்கிற கதையை GIF வடிவத்தில் பாருங்கள்.

image

இன்றைய பிரகலாதன் சொல்கிறான், “கதை தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும், மீமிலும் இருக்கும். இன்ஸ்ட்டாகிராமிலும் இருக்கும்.” (நான் காலையில் பருகிய ஒரு கப் காபியின் புகைப்படத்தை பகிர்ந்தால், அதன் மூலம் ஒரு கதையைத்தானே பகிர்கிறேன்?) 

இப்படிப் பற்பல வடிவங்களில் கதைகள் தற்போதைய தலைமுறையினருக்கு கிடைக்கும் போது, அவர்களைப் புத்தகம் படித்தல் என்ற சிறிய அறைக்குள் அடைப்பது சரியா? புத்தகங்கள் வாசிப்பது வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் அது மட்டுமே வாசிப்பு என்று நிறுத்திக்கொள்ளும் குறுகிய மனப்பான்மையைக் கேள்வி கேட்கிறேன். இன்றைய இளைஞர்கள் புத்திசாலிகள். அவர்கள் புத்தகங்களும் படிக்கிறார்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ்ஸும் பார்க்கிறார்கள். கே-பாப் இசையும் கேட்கிறார்கள். போக்கிமோன் கோவும் விளையாடுகிறார்கள். “அந்த காலத்துல…” என்று நாம் ஆரம்பிக்கும் கதைகளையும் சகித்துக்கொள்கிறார்கள்.

வடிவங்களைப் பற்றிய நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ளாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பதுதான் பிரச்சனை. “ஹைக்கூ” என்றொரு வடிவம் பல வருடங்களுக்கு முன் தமிழுக்கு வந்தது. பல தமிழ் கவிஞர்கள் அவ்வடிவில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஜாப்பனீஸ் ஹைக்கூவின் முக்கியமானதொரு கோட்பாடு, பருவகாலத்தை குறிக்கும் ஒரு சொல்லாவது இருக்க வேண்டும். அதை எத்தனைப் பேர் தமிழில் பின்பற்றுகிறோம்? ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு வடிவம் செல்லும்போது மாற்றங்கள் நடப்பது இயல்பே.

“ஹைக்கூ” என்ற வடிவமே மாற்றத்தால் பிறந்ததுதான். ஜப்பானில் “ரெங்கா” என்றொரு கவிதை வடிவம் இருந்தது. பல கவிஞர்கள் ஒன்று சேர்ந்து பல சரணங்களை கொண்டு இயற்றும் கவிதை ரெங்கா. பிற்காலத்தில் முதல் சரணத்தை மட்டும் தனியாக எடுத்து வெளியிட்டு, அது “ஹைக்கூ” ஆனது. கலையில் வடிவ மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். ஜெயமோகன் எழுதிய “விசும்பு” தொகுப்பில் “தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை” என்றொரு அறிவியல் புனைவை படித்தேன். இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியையும், அடுத்த 1000 வருடங்களில் அதன் வடிவம் எப்படியெல்லாம் மாறலாம் என்றும் எழுதியிருக்கிறார். மின்கதை, நுண்கதை, மென்கதை என்ற வடிவங்கள் தோன்றலாம் எனக் கணிக்கிறார்.

இப்படி வடிவ மாற்றங்கள் நிகழும்போது, “வாசிப்பு” என்ற சொல் இன்னும் விரிவாகி பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். வெறும் புத்தகங்கள், கட்டுரை, சிறுகதை, கவிதை படிப்பது மட்டும் வாசிப்பு என்றில்லாமல், திரைப்படங்கள் பார்ப்பது, இசை கேட்பது, யூட்யூப் வீடியோ பார்ப்பது, அதற்கு ரியாக்ஷன் வீடியோ போடுவது, மீம்ஸ் பார்ப்பது, ஓர் இடத்திற்குச் சுற்றுலா செல்வது, இவை அனைத்தும் வாசிப்பே. வேறெதுவும் செய்யாமல் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து கடந்துசெல்கிற மக்களை வேடிக்கை பார்ப்பது, அல்லது மல்லாக்கப் படுத்து வானத்தை பார்ப்பதுகூட வாசிப்பு தான். 

“எப்பொருள் எவ்வடிவில் உணர்வினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது வாசிப்பு” இப்படியொரு புதிய குறள் உண்டாக்கி, எம்.ஆர்.டியிலும் பேருந்துகளிலும் ஒட்டவேண்டும்!

image

வாசிப்பு என்ற சொல் விரிவடையும் போது, கற்பனையும் விரிவடையும். படைப்புகளின் வடிவங்களும் விரிவடையும். வாசிப்பும் வடிவமும் ஒரே வடையின் இரு பாகங்களை போல. “இது தான் வாசிப்பு” என்று நாம் திட்டவட்டமாக இருந்தால், “இது தான் கதை” என்ற கட்டமைப்பும் மாறாமல் தேக்கம் அடையும். உதாரணத்திற்கு, செராங்கூன் டைம்ஸ் இதழுடன் ஒரு இசை தகடு வந்தால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு படைப்பை படிக்கும்போதும் அதற்கேற்ற இசை காதில் கேட்டால்? இது ஓர் உதாரணம் மட்டுமே ஆனால் இப்படி நாம் யோசிக்கக்கூடத் தயங்குவதற்கு காரணம் “வாசிப்பு” என்ற சொல் விரிவடையாததுதான்.

வாசிப்பு விரிவடையும்போது, படைப்பாளிக்குத் தூண்டுதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் உண்டாகிறது. சத்யஜித் ரே “அரண்யர் தின் ராத்திரி” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்கு மொசார்ட்டின் இசை தான் உந்துதல். மொசார்ட்டின் இசையில் பற்பல இசைக்கருவிகள் கோர்வையாக கேட்கும், அதே சமயம் ஒவ்வொரு கருவியும் தனித்தன்மையுடன் ஒலிக்கும். அவரின் இசைக்கருவிகள் போல பற்பல கதாப்பாத்திரங்களை வைத்து ஒரு காட்சி உண்டாக்கினால் என்ன என்பது ரேயின் சிந்தனை. அதே போல பாடல் ஒன்றைக் கேட்டு, அதன் அமைப்பைப் பிரதிபலிப்பது போல ஒரு கதையோ கவிதையோ ஏன் எழுதக்கூடாது? 

“கலிலியோ மண்டியிடவில்லை” புத்தகத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் கற்பனையான ஜீவராசிகளின் வழியே இலக்கியம், திரைப்படம், கவிதை, இசை ஆகிய பல கலைகளைப் பற்றி எழுதுகிறார். ஒசில் என்ற பூனை அவருக்கு புத்தகங்களை பற்றிக் கூறும். ஏகா எனும் தவளை கவிதைகளைப் பற்றியும், ஐசி எனும் வண்டு திரைப்படங்கள் பற்றியும், புலனி என்ற பறவை இசை பற்றியும் சிலாகித்துப் பேசும். இவை வெறும் நான்கு ஜீவராசிகள். இப்படி கலைவடிவங்களின் அழகை எடுத்துச்சொல்லும் பல ஜீவராசிகள் நமது வாசற்கதவுகளுக்கு வெளியே காத்துக்கிடக்கின்றன. கதவைத் திறந்து அவற்றையும் வாசிப்பறைக்குள் அழைப்போமா?

மேலும் “வாசிக்க”…

https://www.wired.com/2015/04/three-wild-sensations-frontier-storytelling/

http://www.abc.net.au/radionational/programs/futuretense/how-storytelling-is-changing-in-the-modern-world/7622624

https://chatbotsmagazine.com/convos-why-the-future-of-storytelling-is-conversational-188d2f2e5c5e

http://webcomicry.com/know-your-memes/

Leave a Reply

%d bloggers like this: