தினமும் ஒரு சிறுகதை

எனது நண்பர் கணேஷ் தினம் ஒரு சிறுகதை பரிந்துரைக்க துவங்கியுள்ளார். அவற்றை தினம் படித்து, அவை எழுப்பும் எண்ணங்களை எழுதினால் என்ன?

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

https://www.sramakrishnan.com/?p=2946

காதலின் மீது இயல்பான ஈர்ப்பு கொண்ட ஒரு பெண், எவ்வாறு உலகத்தாலும் அவள் விரும்பியவனாலும் கை விடப்படுகிறாள், எவ்வாறு முகமும், அவளின் கனவுகளும் சிதைக்கப்பட்டு, வெறும் “ஏன்?” என்ற கேள்வியை ஏந்தி நிற்கும் வெற்றிடமாகிறாள் என்பது தான் இந்த கதை.

உணர்வற்ற வர்ணனைகளே இக்கதையின் பலம். கோகிலவாணியின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்று அவள் அருகில் ஒருத்தர் நின்று, எந்தவிதமான உணர்ச்சியுமின்றி துல்லியமாக விவரித்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது கதை. அதுவே இக்கதையின் தாக்கத்தை பல மடங்கு கூட்டுகிறது.

கோகிலவாணி ஒரு அப்பிராணி, அவள் முழு கவனமும் படிப்பில் இருந்தது, படுபாவி பய்யன் வந்து அவள் வாழ்வை கெடுத்துவிட்டான் என்றெல்லாம் சினிமாத்தனமாக இல்லாமல், அவளும் ஒரு சராசரி பெண், ஆண்களின் கவனத்தை விரும்பினாள், காதலிக்க விரும்பினாள் என கதை காட்டுகிறது. தனக்கு காதலன் இருப்பதாக அவள் தோழியிடம் பொய் சொல்லும் தருணம், காதலுக்கெல்லாம் உன் வாழ்வில் இடமில்லை என்று அவள் காதலனின் முதலாளி சொல்லும் தருணம், இருவரும் சலூனில் அனைத்துக்கொள்ளும் தருணம், அவள் தவறுதலாக அவனின் பைக்கில் சாயும் தருணம் — இவையெல்லாம் நிதர்சனம் தெறிக்கும் தருணங்கள்.

கோகிலவாணியின் துயரம் ஈடு இணையில்லாததாக தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் துயரங்களை ஏந்தி பயணிக்கிறான். ஒரு மனிதனின் துயரத்தை எவ்வளவு முயன்றாலும் இன்னொரு மனிதனால் அனுபவிக்கவே முடியாது. கோகிலவாணியை பற்றி நாம் இக்கதையில் படிக்கலாம். கண்ணீர் சிந்தலாம். இப்படிப்பட்டவர்களுக்கு என்ன பதில் என்று கேட்கலாம். ஆனால் நாம் என்ன செய்தாலும் “ஏன்?” என்ற கேள்விக்கு பதில் இல்லை. அவளினுள் இருக்கும் வெற்றிடத்தை நம்மால் நிரப்ப முடியாது. கதையின் முடிவில் மின்மினி பூச்சிகள் இரவின் கண்கள் போல அவளை பார்த்துக்கொண்டே இருக்கின்றன. அவ்வாறே நாமும்.

கிருஷ்ணன் வைத்த வீடு

https://azhiyasudargal.blogspot.sg/2009/11/blog-post_6229.html?m=1

சில விஷயங்கள் இயல்பாகவே ஒரு வீட்டின் அல்லது ஒரு மனிதனின் அடையாளங்களாக மாறிவிடும். கற்றது தமிழ் படத்தில், பிராபகர் என்கிற கதாப்பாத்திரம், “மரணம் என்னோட விசிட்டிங் கார்ட்” என்று சொல்வான். அது போல இக்கதையில், வாசலில் கிருஷ்ணன் சிலை வைத்திருந்த ஒரு வீட்டின் மக்கள் அகால மரணம் அடைவதன் மூலம், அவ்வீடு அந்த ஊர் மக்களின் நினைவில் அழியா இடம் பெறுகிறது.

வண்ணதாசனின் கதைகள் வார்த்தைகளாலான சித்திரம் என்று நண்பர் கணேஷ் சொன்னார். இந்த கதை எனக்கு காண்பித்திருப்பது — கதை என்பதில் எழுத்தாளன் ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சித்திரத்தை உண்டாக்கினால் கூட போதும். இக்கதையை படித்தவருக்கு, கிருஷ்ணன் வைத்த வீட்டில் என்ன நடந்தது என்றெல்லாம் தெரிய அவசியமே இல்லை. அந்த வீட்டில் அச்சம்பவம் நிகழ்ந்தேறிய பிறகு, கூடி நிற்கும் மக்கள் திரளில் தாமும் நின்று பார்த்த உணர்வு ஏற்பட்டால் போதும். அதுவே இந்த கதையின் நோக்கம் என்று எனக்கு பட்டது.

சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களுக்கு, துளியளவு அசாதாரணமாக எது நடந்தாலும் அதன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி நின்றதற்கு அதுவும் காரணமோ என யோசிக்க வைத்தது. மரணம் எல்லோருக்கும் நிகழ்வது தான். ஆனால் எல்லா வீடுகளும் “கிருஷ்ணன் வைத்த வீடு” ஆவதில்லை. இயல்பாக ஒருவர் காலமாவதற்கும், திடீரென்று ஒருவர் காலமாவதற்கும் உள்ள வித்தியாசத்தை இக்கதை சுட்டிக்காட்டுகிறதோ?

சிறுமி கொண்டுவந்த மலர்

https://azhiyasudargal.blogspot.sg/2011/11/blog-post_27.html?m=0

இந்த கதையில் ஒரு கறாரான அடகுகடைக்காரர், பேராசையில் ஒரு சிறுமியிடமிருந்து தங்க ரோஜா ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு சந்தோஷ பட்டுக்கொள்கிறார். அடுத்து அவர் கடைக்கு வரும் பண தேவை இருக்கும் பெண்களிடம் மனிதாபிமானம் காட்டாமல், கறாராக பேரம் பேசுகிறார். அதன் பின்னர் சிறுமி கொடுத்த பூ சாதாரண பூவாக மாறுகிறது. தன்னை ஏமாற்றிய சிறுமியை தேடி அலைகிறார். அடுத்த நாள் அப்பூவை ஆசையுடன் தனது பேரன் எடுக்க முயலும்போது, அவனை கடிந்துவிட்டு, பூவை தூக்கி சாக்கடையில் எரிந்துவிட்டு வேலையை தொடர்கிறார்.

அந்த பூ தங்கத்திலிருந்து சாதாரண பூவாக மாறியதற்கு காரணம் அவர் அந்த பெண்களிடம் கரிசனம் காட்டாதது என கொள்ளலாம். தங்கபூவிற்கு அவர் தகுதியானவர் அல்ல என்றும் கொள்ளலாம். பூவை தேடி செல்கையில் அவர் தெருவில் இருக்கும் மலத்தை கவனமாக தாண்டுவதாக வர்ணனை உள்ளது. கழிவுகளும் குப்பையும் வெளியில் உள்ளதா அல்லது…?

தீர்வு

https://azhiyasudargal.blogspot.sg/2013/08/blog-post_13.html?m=0

சென்னையில் ஒரே கட்டிடத்தில் குடித்தனம் நடத்துகிற குஜராத்தி குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு கலாட்டா. அனைவரும் பயன்படுத்தும் கிணற்றில் ஒரு எலி செத்து மிதக்கிறது. அதை எவ்வாறு நீக்குவது, எவ்வாறு அந்த நீரை தூயப்படுத்துவது என்ற அமளியை விவரிக்கும் கதை. எழுத்தாளர் குஜராத்திகளையும் அவர்களின் வாழ்வியலையும் கிண்டலடிக்கும் விதம், அவர் அங்கிருந்து வெளியூர் சென்று உலகளாவிய பார்வையுடன் திரும்பி வந்ததில்தான் என்பது தெளிவாக தெரிகிறது. அவர் தன்னை இவர்களிலிருந்து தனித்து பார்க்கிறார். எனவே அவர்களின் நடவடிக்கைகளில் அவரால் நகைச்சுவை காண முடிகிறது.

இக்கதையின் நகைச்சுவையின் உச்சம் என்னவென்றால் நமக்கு தெரியும் ஏன் கிணற்றில் எலி செத்துக்கிடக்கு என்று. எவ்வாறு அவர்கள் தங்கும் இடம் அசுத்தமாக இருக்கிறது என்று தெளிவாக எழுத்தாளர் விவரித்ததால். அவர் கழிவறைக்கு செல்லும் செயல்முறை விளக்கம், நமக்கு அங்குள்ள சுகாதாரத்தை காண்பித்துவிடுகிறது. இப்படியெல்லாம் இருந்தால் கிணற்றில் எலி செத்துப்போக தான் செய்யும்! ஆனால் பிரச்சனையின் மூலகாரணியை நீக்காமல், கங்கை ஜலத்தை தெளித்து அந்த கிணற்று நீரையே உபயோகித்து கொள்கிறார்கள். இது வெறும் சென்னையில் வசிக்கும் குஜராத்திகளை சாடும் கதை அன்று. ஒட்டுமொத்த இந்திய மனப்பான்மையை விமர்சிக்கிறது. சோம்பலும், நிரந்தர தீர்வு காண்பதற்கு அறிவில்லாததையும் சுட்டிக்காட்டுகிறது.

இக்கதையின் பலம் குஜராத்திகள் வாழ்வை நம் கண்முன் கொண்டுவருவது. அவர்கள் வீடுகளின் நெரிசல், சத்தம், அங்கு நடக்கும் களேபரம் அனைத்திலும் நம்மை உடன் இழுத்து செல்கிறது. படித்துமுடித்தவுடன் கைகளையும் கால்களையும் சோப்பு போட்டு கழுவும் அளவிற்கு.

Leave a Reply

%d bloggers like this: