சாப்ளின் (Chaplin) 1992
இந்த பாகத்தில் நாம் காணவிருக்கும் உலக சினிமா ராபர்ட் டொவ்னீ ஜூனியர் நடித்த சாப்ளின். இது சார்லஸ் சாப்ளினின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.
வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றாலே, தமிழில் சட்டென்று நினைவுக்கு வருவது, பாரதி, பெரியார், ராமானுஜன் போன்ற படங்கள். “நம்ம இந்தியர்கள் எப்போதுமே சரித்திரத்தை பதிவு செய்ய மறந்துடறோம். காந்தின்னு ஆங்கிலத்துல செம்மையா ஒரு படம் எடுத்தது யாரு? ஒரு வெள்ளைக்காரன்!” அப்படின்னு யாராச்சும் புலம்பி கேட்டிருப்பீங்க. காந்தி பத்தி படம் எடுத்த அந்த வெள்ளைக்காரன் வேற யாரும் இல்ல, ரிச்சர்ட் அட்டன்போரோ. இந்த படத்தின் இயக்குனரும் அவர் தான்!
நான் ஏன் இந்த படத்தை பார்க்கணும்?
இது உங்களுக்கு சாப்ளினின் வாழ்க்கையை பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை தரும். அவரின் நகைச்சுவை உணர்வு எப்படி பட்டது, எங்கிருந்து வந்தது. சிரிக்க வைப்பவனின் வாழ்க்கையில் அழுகை தான் இருக்குமா? ஒரு திரைப்படம் உருவாகும் பொழுது, எந்த விதமான சோதனைகள் சாப்ளினின் மனதில் ஓடும். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன சங்கடங்கள்? சாப்ளின் என்பவன் வெறும் சிரிப்பு மூட்டும் ஒரு கலைஞனா? இது போன்ற பல விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும். இந்த படத்தை பார்த்ததும், அனைத்து சாப்ளின் படங்களையும் பார்த்தாக வேண்டும், என்ற வெறியும் வரலாம்.
வாழ்க்கை வரலாறு படம்னாலே, நூலகத்துல தூசி படிஞ்ச புத்தகத்தை ஒரு அழுக்கு கோட்டு போட்ட தாத்தா தட்டும் பிம்பம் மனசுல வருது. போர் அடிக்காது? இதுக்கு நான் தலைவரோட கபாலி ஒன்ஸ் மோர் பாப்பேனே…
புரியுது. ஆனா சரியான முறையில் எடுக்கப்பட்டால், வாழ்க்கை சரித்திர படமும் பரபரப்பாக நம் கவனத்தை பிடித்து வைக்கும் அளவிற்கு இருக்கும். அதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். “சாப்ளின் இங்கே பிறந்தார். இந்த வருடத்தில் இங்கே படித்தார். அந்த வருடத்தில் இந்த இடத்தில் அந்த நபருடன் கோலி விளையாடினார்.” என்றெல்லாம் தகவல் துணுக்குகளை வைத்து ஒரு வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் கொட்டாவி தான் வரும். அந்த நபரின் ஆன்மாவை தேடி பிடிக்க வேண்டும். சாப்ளினின் ஆன்மா இந்த படத்தில் உள்ளது. (இந்த படத்தை பார்த்து ஞான ராஜசேகரன் நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ராமானுஜன் படத்தை பார்த்து கண்ணில் ரத்தம் வந்த ஆதங்கத்தில் சொல்கிறேன்.)
இப்படத்திற்காக ராபர்ட் டொவ்னீ ஜூனியர் பல முயற்சிகள் எடுத்துள்ளார். சாப்ளினாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் செய்த பல நகைச்சுவைகள் உடலை வளைத்து செய்யகூடிய “ஸ்லேப்ஸ்டிக்” என்ற வகையை சேர்ந்தது. இந்த காட்சியை பாருங்கள். சாப்ளின் முதல் முறையாக ஹாலிவுட் வருகிறார். “நீ தான் சாப்ளின் என்று என்னால் நம்ப முடியவில்லை” என இயக்குனர் சொன்னவுடன், ஒரு குடிகாரனை போல் நடித்து காட்டுகிறார்.
சந்திரமுகி படத்துல வர சாமியார் மாதிரி, ஏதோ ஆன்மாவ பிடிக்கனும்ங்கரீங்க சரி… சாப்ளினோட ஆன்மாவ நீங்க பாத்துட்டீங்களா?
1930களில் சினிமாவில் ஆடியோ வந்த காலம். எல்லோரும் வசனங்கள் வைத்து திரைப்படங்கள் உருவாக்க துவங்கி, ஊமை படங்கள் இறந்துக்கொண்டிருந்த காலம். ஆனால், சாப்ளின் திடமாக “என் படத்தில் வசனம் தேவை பட்டால் தான் உபயோகிப்பேன்.” என்று முடிவெடுத்து, சிட்டி லைட்ஸ் என்றொரு படத்தை உருவாக்கினார். வசனமே இல்லாமல் அற்புதமான காதல் கதையை சொல்லும் ஒரு படம்.
ஒன்றும் வேண்டாம். இரு ரொட்டி துண்டுகள். இரு போர்க்குகள். இவை மட்டும் சாப்ளினிடம் கொடுங்கள். அவர் அதை வைத்து ஒரு நடனமே உருவாக்குவார்!
எப்போதும் உண்மையான ஒரு கலைஞன், தான் வாழும் காலத்தில் தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களை, அது அவனுள் எழுப்பும் உணர்வுகளை பதிவு செய்பவன். அந்த விதத்தில் சாப்ளின் பல படங்களை உருவாக்கியுள்ளார். இயந்திரமயமாக்கம் மற்றும் அதன் தாக்கம் தான் Modern Times. ஹிட்லர் இழைத்த கொடுமையின் தாக்கம் தான் The Great Dictator. இந்த படத்தில் வரும், மனதை நெகிழ வைக்கும் ஒரு நெடும் வசனத்தை சோசியல் மீடியாவில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லாவிட்டால் இதோ பாருங்கள்.
சமூக அநீதியை, வன்முறையை எதிர்க்கும் கோவம், அழகான பெண்ணை கண்டவுடன் வழியும் காதல், ஒரு குறும்புத்தனம், இவை அனைத்தும் சாப்ளினின் ஆன்மா மட்டும் அல்ல, பல திரைப்படங்களில் அவர் சித்தரித்த சாதாரனின் ஆன்மாவும் கூட. ஒரு தொப்பியும் ஒரு கைத்தடியும் வைத்துக்கொண்டு நம் மனதில் ஆழ்ந்த இடத்தை பிடித்த ஒரு மேதை. அந்த மேதையின் வாழ்வை, அவரை மேதை ஆக்கிய ஒளியால் பதிவு செய்த இப்படத்தை கண்டிப்பாக பாருங்கள்.
கபாலி படம் எங்கேயும் ஓடி விடாது!
ஓ! சாப்ளின் பேசுவாரா? அவரு வெறும் ஊமை படங்கள்ல நடிச்சாருன்னுல நினைச்சுக்கிட்டு இருந்தேன்…
“ஸ்லேப்ஸ்டிக்” வகை காமெடி மட்டும் இல்லாமல் வசனங்களை வைத்தும் சாப்ளின் காமெடி செய்துள்ளார். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அடுத்து ஒரு படத்தை பார்ப்போம்.
ஏ கிங் இன் நியூ யார்க் (A King in New York) 1957
இந்த படம் ஒரு நுட்பமான அரசியல் பகடி. கதைப்படி ஐரோப்பாவுல நடக்குற ஒரு புரட்சினால அந்த நாட்டு ராஜா (அதாவது சாப்ளின்) துண்ட காணும் துணிய காணும்னு அமேரிக்காவுக்கு ஓடி வரார். கையில காசு இல்லாததால ராஜா பாவம் விளம்பரங்கள்ல நடிக்கிறார். தற்செயலா ஒரு டி.வி பிரபலம் ஆகிடறார். பிறகு அவரை தவறாக கம்யூனிஸ்டுன்னு குற்றம் சாட்டிடுவாங்க. அப்புறம் என்ன நடக்குது என்பது தான் கதை.
சாப்ளின் ஏன் இந்த பகடி செய்யணும்?
நிஜ வாழ்க்கையில் சாப்ளினை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தி நாட்டைவிட்டே வெளியேற்றியது அமேரிக்கா. அதை பகடி செய்யும் விதத்தில் இங்கிலாந்தில் இப்படத்தை எடுத்து வெளியிட்டார் சாப்ளின். பகடி என்றால் அப்படி ஒரு பகடி. கிழித்து எறிந்திருப்பார்.
ஒரு உதாரணம் தருகிறேன். ஐரோப்பிய ராஜாவான சாப்ளின், அமேரிக்கா வந்ததும், போர் அடிப்பதால் திரைப்படம் பார்க்க செல்வார். தனது உதவியாளருடன். திரையரங்கம் சென்று ட்ரெயிலர்கள் மட்டும் பார்த்து கழுத்துவளியுடன் திரையரங்கை விட்டு வெளியேறுவார். அது எப்படி என்று இதோ பாருங்கள்.
இந்த படத்தில் என்ன ஸ்பெஷல்?
இந்த படத்தின் சிறப்பே சாப்ளினின் சொந்த மகன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். கம்யூனிஸ்ட் பெற்றோர்கள் கொண்ட ஒரு சிறுவன். அவன் அப்பா அம்மாவை அரசாங்கம் கைது செய்து கூட்டிசென்றதால், பல புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட, ஆவேசமுடைய சிறுவனாக அவன் இருப்பான். சாப்ளினும் அந்த சிறுவனும் உரையாடும் இந்த காட்சியை பாருங்கள்.
இதில் சாப்ளின் செய்த நுட்பம் என்னவென்றால் அவர் சொல்ல நினைக்கும் கருத்துக்கள் அனைத்தையும், அந்த சிறுவனை சொல்ல வைத்து விட்டார். அதனால் அது சிரிப்பாகவும் இருக்கிறது அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.
சாப்ளின் சிரிக்க வைத்திருக்கார், பேசியும் கலக்கியிருக்கார். அவர் அழுகாச்சி படம் எதாச்சும் பன்னதுண்டா?
என்ன பாஸ்? சிரிப்பான உலக சினிமா வேணும்னு கேட்டீங்க, இப்போ சாப்ளின் அழுகாச்சி படம் பன்னிருக்காரான்னு கேக்கறீங்க. சில படங்கள் இருக்கு. அதில் சிறந்த அழுகாச்சி படம், “லைம்லைட்”. இதற்கு ஈடான ஒரு தமிழ் சொல் எனக்கு தெரியவில்லை. இதற்கு அர்த்தம் வெளிச்சம். குறிப்பாக ஒரு கலைஞன் மீது விழும் வெளிச்சம். மேடையில் எல்லா வெளிச்சமும் அணைந்தப்பின் ஒரு வட்ட ஒளி மட்டும் விழுகிறதே, அது தான் “லைம்லைட்”.
லைம்லைட் (Limelight) 1952
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். ஒரு காமெடியன். அவனின் காமெடிக்கு மக்கள் ஒரு காலத்தில் சிரித்தார்கள். ஆனால் இப்போது சிரிக்கவில்லை. எல்லா காமெடியனுக்கும் வாழ்க்கையில் வர கூடிய ஒரு தருணம். தமிழ் சினிமாவில் கூட கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் இப்படி வரிசையாக ஒருவருக்கு மார்க்கெட் போகும் போது இன்னொருவர் வந்துக்கொண்டே இருக்கிறார்.
சாப்ளின் தனது சரிவின் போது எடுத்த படம் இது. அமேரிக்காவில் அவரின் படங்கள் அதிகம் ஓடாத காலம். ஆக இப்படம் கொஞ்சம் சுய சரிதை என்று கூட சொல்லலாம்.
படத்த பார்த்தா செம்மையா அழுகை வருமா?
ஒரு உதாரணம் சொல்லுறேன். சாப்ளின் ஒரு புகழ் இழந்த காமெடியன். ஆனாலும் விடாமல் நடித்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நண்பர் வந்து ஏன் இன்னும் நடிக்கிறாய் என்று கேட்கும் ஒரு காட்சி. அதிலிருந்து ஒரு வசன துணுக்கு.
சாப்ளின்: இரத்தத்தை பார்த்தாலும் தான் நான் வெறுப்படைகிறேன். ஆனால் என் இரத்த நாளங்களில் ஓடுகிறதே…
சாப்ளின்: தியேட்டர் தான் என் வீடு.
நண்பன்: தியேட்டரை கண்டாலே நீ வெறுப்படைகிறாய் என நினைத்தேன்.
இப்படி பல எமோஷனல் தருணங்கள் படத்துல இருக்கு. ஒரு பக்கெட் பக்கத்துலையே வெச்சுக்கோங்க. இத நான் கொஞ்சம் ஜோக்கா சொல்றேன். ஆனா எந்த அளவுக்கு உங்கள சாப்ளின் மற்ற படங்கள்ல சிரிக்க வைப்பாரோ, அந்த அளவுக்கு இந்த படத்துல அழ வெப்பாரு…
ஆமா எனக்கொரு சந்தேகம். இவ்வளோ படம் சொல்லுறீங்களே, இதெல்லாம் நீங்க பாத்திருக்கீங்களா? இல்ல சும்மா அடிச்சு விடறீங்களா?
கூகிள்ல தட்டினா சாப்ளின் படங்கள் முழு லிஸ்ட் வந்துடும். அதுவும் “சிறந்த சாப்ளின் படங்கள்” ன்னு தேடினா உங்களுக்கு இன்னும் சுலபம். ஆனா நான் குறிப்பிட்டிருக்கிறது நான் பார்த்து, எனக்கு பிடித்த, என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான சாப்ளின் படங்கள். சொல்லப்போனா “ஏ கிங் இன் நியூ யார்க்” படமெல்லாம் எந்த உலக சினிமா லிஸ்ட்டுலயும் நீங்க பாக்க மாட்டீங்க. அது அவ்வளவு பிரபலமான சாப்ளின் படமும் இல்ல. எனக்கு பிடிச்ச படம். அவ்வளவு தான்.
இந்த உலக சினிமா தொடருல நான் சுட்டி காட்ட போகும் அனைத்து படங்களும் என்னை ஏதோவொரு விதத்தில் மாற்றியவை. என்னை பாதித்தவை.
அடுத்த பாகத்துல நாம பாக்கபோற ஒரு படமும் அப்படித்தான். சினிமாவின் சாத்தியங்களை எனக்கு காட்டிய ஒரு சினிமா. நவீன கவிதை போல பல விளக்கங்கள் ஒரு படத்திற்கு இருக்கலாம் என்று எனக்கு உணர்த்தி, என் வாயை பிளக்க வைத்த ஒரு சினிமா. என் வாய் மட்டுமல்லாமல், இந்த படம் எஸ்.பாலசந்தர் மற்றும் கமல் ஹாசனின் வாய்களையும் பிளக்க வைத்து, அவர்களை அது போலவே ஒரு படம் செய்ய தூண்டியது.
நான் எந்த படத்தை சொல்கிறேன் தெரிகிறதா?